கவனவீச்சுமானி
கவனவீச்சுமானி அல்லது கவனவீச்சு சோதனைக்கருவி (tachistoscope) என்பது ஒருவருடைய காட்சிக் கவனவீச்சை அளந்தறியப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும். இக்கருவியானது, பல பொருள்களின் படிமத்தை ஒரு நொடிப்பொழுது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் எதிரில் உள்ளவருக்குத் தெரியும்படி வெளிக்காட்ட வல்லது. அறிதல் வேகத்தை அதிகரிக்க, உணர்வுபூர்வமாக அடையாளம் காண முடியாதபடி மிக வேகமாக ஒன்றைக் காட்ட அல்லது ஒரு படத்தின் கூறுகள் மறக்கமுடியாதவை என்பதைச் சோதிக்க இதைப் பயன்படுத்தலாம்.
வரலாறு
தொகுசெருமானிய உடலியங்கியலாளர் ஏ. டபிள்யூ. வோக்மேன் என்பவர் 1859 இல் கவனவீச்சுமானி பற்றிக் கூறினார்.[1] சாமுவேல் ரென்சா என்பவர் இரண்டாம் உலகப் போரில் விமானிகளுக்கான பயிற்சியின் போது வானூர்திகளின் நிழற்படங்களை நட்பு அல்லது எதிரியாக அடையாளம் காண உதவுவதற்காக இதைப் பயன்படுத்தினார்.[2]
கவனவீச்சு
தொகுகவன வீச்சு என்பது ஒரு சிறு கால அளவுக்குள் சில பொருட்களையே நம்மால் கவனிக்க முடியும். ஒரே பாா்வையில், மிகக் குறுகிய நேரத்தில், எத்தனைப் பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவன் உணர்ந்து அறிகிறான் என்பதே அவனது கவனவீச்சு என்று வரையறுக்கப்படுகிறது. கவனவீச்சை, புலன்காட்சி வீச்சு என்றும் சிலர் குறிப்பிடுவர். கவனவீச்சின் அளவு நமது நனவுப்பரப்பின் குவிமையத்தில் ஒரே சமயத்தில் எத்தனை பொருட்கள் இடம்பெறக் கூடும் என்பதைப் பொறுத்தது.
செயற்பாடு
தொகுபொதுவாக இக்கருவியில், புள்ளிகள் பல இடப்பட்ட அட்டைகள் (Dot figures) ஒன்றன்பின் ஒன்றாகப் பொருத்தப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு நொடிப்பொழுதே வெளிக்காட்டப்படும். ஒவ்வோர் அட்டையிலும் எத்தனை புள்ளிகள் உள்ளன என்று கவனித்துக் கூறும்படி சோதனைக்குட்படுவோர் பணிக்கப்படுவர். எத்தனை புள்ளிகள் வரை அவனால் கவனித்து, புள்ளிகளின் எண்களைச் சரியாகக் கூறமுடிகிறதோ, அவ்வெண் அவனது காட்சிக் கவனத்தின் வீச்சாகும். புள்ளிகள் ஒழுங்காக முறைப்படி அமைக்காதவாறு அட்டையில் குறிக்கப்பட்டிருப்பின், முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவன வீச்சு 6 அல்லது 7 ஆக இருக்கும். இதன் மூலம் நாம் அறியக்சுடியது யாதெனில் ஒரே சமயத்தில் நாம் பார்க்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை வரையறைக்குட்பட்டது என்பதும், வகுப்பில் மாணவரிடம் பல பொருட்களைச் சிறிது நேரம் மட்டும் காட்டுவதால், அவா்கள் எல்லாவற்றையும் கவனத்துடன் நோக்க முடியாது என்பதும் ஆகும். இதன் அடிப்படையில்தான் மிக விரைவாகச் செல்லும் வாகனங்களுக்கு 4 முதல் 6 வரையிலான எண்கள் தரப்படுகிறது. இதேபோன்று தொலைபேசிக் கருவிகளுக்கும் அதிக அளவு 7 அல்லது 8 எண்களே தரப்படுகிறது. மிக அதிக அளவிலான எண்கள் இருந்தால் நாம் கவனத்தில் கொள்ள முடியாது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Benschop 1998, p. 23.
- ↑ Edward C. Godnig, "The Tachistoscope: Its History and Uses", Journal of Behavioral Optometry 14:2:39 (2003) full text பரணிடப்பட்டது 2021-03-22 at the வந்தவழி இயந்திரம்
- நாகராஜன்.கி,2015, உளவியல் நோக்கில் கற்பவரும் கற்றலும்,சென்னை:நா்மதா பதிப்பகம்
- Benschop, R. (1998). "What Is a Tachistoscope? Historical Explorations of an Instrument". Science in Context, 11:23–50.