காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் கோயில் என அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், சம்பந்தர் நின்ற கோலத்தில் கைகளைக் குவித்து திருமேற்றளிநாதரை பார்த்து வணங்கும் நிலையில் உள்ள இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

தல வரலாறு

தொகு

திருமால் சிவசாரூபம் பெற வேண்டி தவம் இருந்தார். இறைவன் தோன்றி "திருஞானசம்பந்தர் பாடலைக் கேட்டு அந்நிலையை அடையுமாறும், அதுவரை இங்கு அமர்ந்து இருக்குமாறு" பணித்தார். அதன்படியே திருஞானசம்பந்தர் காஞ்சிக்கு வந்தபோது, இவ்வழியாக வந்தாரென்றும், அவர் திருமேற்றளிநாதரை பார்த்து இங்குநின்று பதிகம் (நம் தவக்குறைவினால் இப்பதிகம் நமக்குக் கிடைத்தில) பாடினார் என்றும், அதனைக் கேட்டுத் திருமால் சிவசாரூபம் பெற்றதாவும் காஞ்சிப் புராணம் கூறுகின்றது.[2]

தல விளக்கம்

தொகு

முன்னாளில் திருமால் சிவசாரூபம்பெற அத்தளியில் தவஞ்செய்தனர். சிவபிரானார் அவர்முன் தோன்றி ‘நீ விரும்பிய பேற்றை வைவச்சுத மனுவந்தரத்து இருபத்தெட்டாம் கலியுகத்தில் சீகாழிப் பதியில் அவதரிக்கும் நம் அடியவனாகிய திருஞானசம்பந்தன் அருள் செய்வான். அதனளவும் அங்கே தவஞ்செய்தி’ என்றருளி மறைந்தனர். அங்ஙனமே திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தால் திருமால் சிவசாரூபம் பெற்ற இடம் அத்தலம். திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் இத்தலத்திற்கு உள்ளன. திருஞானசம்பந்தர் பதிகத்திற்கு உருகிய திருமால் சிவலிங்கவடிவாய் ஓதஉருகீசர் என்னும் திருமுன்பொடும், சிவபிரான் திருமேற்றளிநாதர் என்னும் திருமுன்பொடும் விளங்குகின்றனர். தெருவின் கீழைக் கோடியில் திருஞான சம்பந்தர் எழுந்தருளியுள்ளனர். அவர் பாடலைக் கேட்ட முத்தீசர் சந்நிதியும் உள்ளது. திருஞான சம்பந்தர் பிள்ளையார் என்னும் பெருமையால் காஞ்சிபுரத்தில் மேலைப்பகுதி முழுவதும் பிள்ளையார் பாளையம் எனப் போற்றப்பெறும். உதியமரம் இருத்தலின் ஒதியடிமேடை என்பது பிரசித்தமாக வழங்கும் இடம் அதுவாகும்.[3]

தல பதிகம்

தொகு
  • பாடல்: (திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்.)
பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனஞ்சூழ்ந்த,
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேயமெல்லாம்,
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்தம் குலதீ பத்தை,
விரவிஎமை ஆளுடைய வென்றிமழ விளங்களிற்றை விரும்பி
வாழ்வாம்.
  • பொழிப்புரை:
பரசமயம் நிராகரித்து நீறாக்கும் (நீற்றினை வளர்க்கும்) சிங்கமாய்,
ஞானப்பாலின் வடிவேயாகிய திருமுறைகளை இடையறாது ஓதியருளினமையின்
பாலறாவாயராய், மகிழ்ச்சியால் குரவைக் கூத்தியற்றத் தமிழ் வேதம் விரித்த
கவுணியர் குலவிளக்காய், சிரபுரமென்னும் சீகாழிப் பதியில் அவதரித்து எமைக்
கலந்து ஆண்ட வென்றியையுடைய மழஇளங்களிறாய் விளங்கும் திருஞான
சம்பந்தப் பெருமானை விரும்புதலின் வாழ்வோமாக!
‘பால் நல்வாய் ஒருபாலன்’ என்ற செம்பொருளும் ஆகும்.[4]

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவின் ஒரு கோடியில் மேற்றளீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்க. இத்தெருவின் மற்றொரு கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் மேற்கு திசையில் இக்கோவில் அமைந்துள்ளது.[5]

உப தகவல்

தொகு

திருஞானசம்பந்தரின் மிகச்சிறியது, இக்கோயிலில் ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு திருஞானசம்பந்தர் கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளார். இவரின் உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.[6]

இவற்றையும் காண்க

தொகு

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

மேற்கோள்கள்

தொகு
  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் - பகுதி 1 | பாயிரம் 1 - 27 | 12 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்.
  2. "shaivam.org | திருஞானசம்பந்தர் திருக்கோவில்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-15.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | திருமேற்றளி: (தளி-கோயில்) | பக்கம்: 819.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | பாயிரம் | திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். | பாடல்: 12 | பக்கம்: 5.
  5. "shaivam.org | திருஞானசம்பந்தர் திருக்கோவில்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-15.
  6. "shivatemples.com | திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2016-03-15.

புற இணைப்புகள்

தொகு