காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது அகநானூறு 85 எண் கொண்ட பாடலாக உள்ளது.

அகநானூறு 85 பாடல் தரும் செய்தி

தொகு
  • பாலைத்திணை

தலைவன் பிரிவால் கவலை கொள்ளும் தலைவியைத் தோழி பொறுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறாள்.

உன் நெற்றியில் பசப்பு ஊர்கிறது. உன் தோள் வாடுகிறது. நீ உண்ணாமல் உயங்குகிறாய். உயிர் செல்லும் அளவுக்கு வலு இழந்துள்ளாய். அவர் அறவர் அல்லர் எனக் கூறிப் புலம்புகிறாய். அழாதே!

அவர் செல்லும் திரையனின் வேங்கடமலைக் காட்டில் கன்று ஈன்ற பெண்யானைக்கு அதன் ஆண்யானை மூங்கிலை வளைத்து உண்ணத் தருவதை அவர் அங்கே பார்ப்பார். தன்மீது வேங்கைப் பூக்கள் கொட்டியதால் உணர்வு மேலிட்ட மயில் பூத்திருக்கும் குருந்தின்மீது ஏறித் தன் துணை மயிலை அழைக்கும் குரலைக் கேட்பார். (உன் நினைவு அவருக்கு வரும். விரைவில் திரும்புவார்.) அழாதே!

திரையன் வேங்கட நெடுவரை

தொகு

திருவேங்கட மலையைச் சூழ்ந்த நாட்டை 'வென்வேல் திரையன்' என்பவன் ஆண்டுவந்தான். அவன் நாட்டில் யானைகள் மிகுதி. தமிழ்மக்கள் இவனது நாட்டைக் கடந்து பொருள் தேடச் சென்றனர். இந்தத் திரையன் தொண்டைமான் இளந்திரையனின் முன்னோன். தொண்டைமான் இளந்திரையன் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் பாட்டுடை தலைவன். பெரும்பாணாற்றுப்படை நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

இப் பாடலில் பயின்றுவரும் பழந்தமிழ்ச் சொற்கள்

தொகு
  • உண்ணா உயக்கம் = பசித்தாலும் உணவு செல்லாத துன்பம் (காதலர்களுக்கு ஏற்படுவது)
  • மழை பாயின்று = மழை பரந்து பெய்கிறது
  • ஆழல் = அழாதே
  • பயிர் = அழை (மஞ்ஞை துணை பயிர்ந்து அகவும்)