காண்ட்லெட் நடவடிக்கை
காண்ட்லெட் நடவடிக்கை (Operation Gauntlet) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல். இதில் பிரித்தானிய மற்றும் கனடிய படையினர், நார்வே நாட்டின் இசுப்பிட்சுபேர்கென் தீவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களைத் தாக்கி அழித்தனர்.
ஏப்ரல் 9, 1940 அன்று நாசி ஜெர்மனி நார்வே மீது படையெடுத்தது. இரு மாத சண்டைகளுக்குப்பின் நார்வே ஜூன் 9, 1940 அன்று சரணடைந்தது. நார்வேயின் ஆளுகைக்கு உட்பட்ட இசுப்பிட்சுபேர்கென் தீவு வட துருவத்துக்குத் தெற்கே அமைந்துள்ளது. இங்கு நார்வே மற்றும் சோவியத் ஒன்றிய நிறுவனங்களால் நிருவகிக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் அமைந்திருந்தன. பல ஆண்டுகளாக வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரியும் கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருந்தது. ஜெர்மானியர்கள் தங்கள் போர் முயற்சிக்கு அவற்றைப் பயன்படுத்தும் முன் அவற்றை அழிக்க நேச நாட்டுத் தலைவர்கள் திட்டமிட்டனர். ஜூலை 1941ல் இதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இசுப்பிட்சுபேர்கனிலுள்ள சுரங்க கட்டமைப்புகளை அழித்து, சுரங்கத் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் அவரவர் நாட்டுக்கு மீட்டுச் செல்வதென்று முடிவானது. இக்காலகட்டத்தில் ஜெர்மானியர்கள் இத்தீவில் எந்த பாதுகாவல் படைகளையும் நிறுத்தாதது நேச நாட்டுப் படைகளுக்கு சாதகமாக அமைந்தது.
25 ஆகஸ்ட், 1941ல் நேச நாட்டுப் படைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கூட்டம் இசுப்பிட்சுபேர்கெனை அடைந்து படைகளைத் தரையிறக்கியது. சுரங்கத் தொழிலாளர்கள் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். முதலில் சுமார் 2000 சோவியத் குடிமக்கள் காலி செய்யப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்கேஞ்சலஸ்க் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின் அங்கிருந்து திரும்பிய கப்பல்கள் மீதமிருந்த 800 நார்வீஜிய குடிமக்களை காலி செய்து இங்கிலாந்து திரும்பின. தகர்ப்பு குழுக்கள் சுரங்கக் கட்டமைப்புகளை வெடி வைத்துத் தகர்த்தன. கிடங்குகளில் இருந்த 4,50,000 டன் நிலக்கரியும் 2,75,000 கேலன் திரவ எரிபொருளும் அழிக்கப்பட்டன. திட்டமிட்ட இலக்குகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னர் நேச நாட்டுப் படைகள் செப்டம்பர் 3ம் தேதி இங்கிலாந்து திரும்பின.