காதலி நாச்சியார்
காதலி நாச்சியார் என்பவர் இராமநாதபுரத்தின் அரசி மற்றும் ரகுநாத கிழவன் சேதுபதி மன்னரின் மனைவி ஆவார். புதுக்கோட்டை மன்னர் இராயரகுநாத தொண்டைமான் மற்றும் நமன தொண்டைமான் தங்கையான காதலி நாச்சியார், சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். ‘காதலி ‘ராமேஸ்வரத்தில் உள்ள அம்மனான ‘பர்வத வர்த்தினி ‘ யின் தமிழ்ப்பெயர் சுருக்கம் என்று தெரிகிறது. (பர்வதவர்த்தினி – மலை வளர் காதலி).
பணிகள்
தொகுமன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார் தஞ்சைப் பேரரசின் இராஜ இராஜ சோழனது அன்புக் கிழத்தியான உலக மகா தேவியைப் போன்று இராணியார் சில அறக் கொடைகளை வழங்கியிருப்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இராமேஸ்வரம் திருக்கோயிலில் கோயில் உள்துறைக் கட்டளைக்கு திரு உத்திரகோச மங்கையை அடுத்த மேலச் சீத்தை என்ற கிராமத்தை கி.பி. 1693ல் இந்த இராணியார் வழங்கியதைச் செப்பேட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கின்றது. அடுத்து கி.பி. 1709ல் தனுஷ்கோடியில் அந்தணர்களது அக்கிரஹாரம் அமைவதற்கு தேவகோட்டைப் பகுதி களத்தூர் எனற கிராமத்தை இவர் தானம் வழங்கியது இன்னொரு செப்பேட்டின் மூலம் தெரியவருகிறது. இவைகளைப் போன்றே சேதுப் பயணிகளது பயன்பாட்டிற்கென எம்மண்டலமுங் கொண்டான் என்ற கிராமத்தினைத் தானமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த அன்ன சத்திரம் இன்றும் இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று இருந்து வருகிறது. அந்தக் கிராமம் இன்று என்மனம் கொண்டான் என்ற பெயரில் வழக்கில் உள்ளது.[1]
கிழவன் சேதுபதியின் களத்தூர் செப்பேடு கிபி 1709 ல் வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டில் " ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் தர்மபத்நியான ராய தொண்டைமானார் புத்ரி ரெகுநாத ராய தொண்டைமானார் சகோதரியான காதலி நாச்சியாரவர்கள் " இராணியார் என குறிக்கப்படுகிறார்.
1710 ஆம் ஆண்டு கிழவன் சேதுபதி இறந்தபோது அவருடன் காதலி நாச்சியாரும் மற்றும் கிழவன் சேதுபதியின் மற்ற 46 மனைவியரும் உடன் கட்டை ஏறினர்.[2]