காந்தள் (இலக்கணம்)

காந்தள் தாவரத்தில் உள்ள மலர் பொதுவாக காந்தள் என்றோ காந்தள் மலர் என்றோ குறிப்பிடுவதுண்டு. இலக்கணத்தின்படி, காந்தள் என்பது பொருள் இலக்கணம், புறப்பொருள், வெட்சிந் திணையின் பகுதியாக வரும் ஒரு துறை. புறப்பொருளில் ஒன்றாகிய வெட்சித்திணையைத் தொல்காப்பியர் குறிஞ்சித்திணையின் புறம் என்று குறிப்பிடுகிறார்.[1] இதில் ஆனிரைகளைக் கவர்ந்துவந்து காப்பாற்றும் முதற்பகுதி 14 துறைகளை உடையது என்கிறார்.[2] மறக்குடி பற்றிக் குறிப்பிடுவதும் வெட்சித்திணை என்கிறார்.[3] இந்த மறக்குடி பற்றிப் பேசும் குடிநிலை 21 துறைகளை உடையது எனக் குறிப்பிட்டு அவற்றில் ஒன்றாக இந்தக் காந்தள் துறையைக் குறிப்பிடுகிறார்.[4]

வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தள் – என்பது தொல்காப்பியத்தில் உள்ள தொடர். வேலன் வெறி ஆடுவான். வேந்தனுக்கு வெற்றி தருக எனக் கொற்றவையை வேண்டி வெறியாடுவான். வெறியாடத் தெரிந்த வேலன் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் வாயால் வேண்டிக்கொண்டு வெறியாடுவான். இப்படி ஆடும் ஆட்டத்துக்குக் காந்தள் என்று பெயர்.[5]

காதலனை நினைத்துக்கொண்டு காதலி இல்லத்தில் வெறியாடினாள் எனப் பொருள் வரும் வெண்பாப் பாடல் ஒன்றை இதற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் தந்துள்ளார். மேலும் வென்றி வேண்டி வெறியாடியதற்குச் செய்யுள் சிலப்பதிகாரம் வேட்டுவ-வரியில் கண்டுகொள்க எனக் குறிப்பிடுகிறார். இன்னும் கூறுகையில், வேலன் வெறியாடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க என்று எழுதுகிறார்.

இவற்றால் வேலன் என்னும் பூசாரி ஆடும் வெறியாட்டு என்னும் துறை காந்தள் என்னும் துறை எனத் தெரியவருகிறது. பெண் ஆடும் வெறியாட்டு வேறு. பெண் ஆடும் வெறியாட்டு அகப்பொருள்.

மேற்கோள் குறிப்பு தொகு

  1. தொல்காப்பியம், பொருளதிகாரம், 59
  2. தொல்காப்பியம், பொருளதிகாரம், 61
  3. தொல்காப்பியம், பொருளதிகாரம், 62
  4. தொல்காப்பியம், பொருளதிகாரம், 63
  5. இதற்குப் பொருள் கூறும் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார் உளராகலின், வெறியாட்டு அயர்ந்த காந்தள் என்றார். அன்றியும் காந்தள் என்பது மடலேறுதலான், அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி காந்தள் எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந்நிலத்துக்குச் சிறந்தமை அறிக. (தொல்காப்பியம், பொருளதிகாரம், 63 நூற்பா இளம்பூரணர் உரை.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தள்_(இலக்கணம்)&oldid=1914046" இலிருந்து மீள்விக்கப்பட்டது