காந்த விண்மீன்

காந்த விண்மீன் (Magnetar) என்பது வளிம எரிஆற்றல் தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன் (Neutron star) ஆகும். 1992 ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூப்பர்நோவா வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை. காந்த வீண்மீன்களை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தப் புலம் சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்தப் புலமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக மாறி எழுகின்றன.

காந்தப்புலக் கோடுகளுடன் காந்த விண்மீன் ஒன்றின் மாதிரி வரைபடம்

இதுவரை (2007) விண்வெளியில் 16 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை: SGR என்று அழைக்கப்படும் "மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்" (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை: AXP என்று குறிப்பிடப்படும் "முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள்" (Anomalous X-Ray Pulsars).

இதுவரை பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்தப்புலம் கொண்டது: SGR 1806-20. அதன் கணிக்கப்பட்ட காந்தப்புலம்: 2 X (10^11) டெஸ்லா அல்லது 2 X (10^15) காஸ் (Gauss) (1 டெஸ்லா = 10,000 காஸ்). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்தப் புலம்: அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள "காந்த இணைத் துடிப்புப் படவரைவு யந்திரம்" (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாக்கள் (400,000 காஸ்).

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_விண்மீன்&oldid=2699177" இலிருந்து மீள்விக்கப்பட்டது