காரி டேவிஸ்

காரி டேவிஸ் (Garry Davis, பி. ஜூலை 27, 1921) ஒரு உலக அமைதி செயற்பாட்டாளர். உலகக்குடிமகன் என்று தன்னை அழைத்துக்கொண்டவர். எந்த நாட்டுக்கும் குடிமகனாக இருப்பதில்லை என்ற உறுதி கொண்டிருந்தார். உலகக் கடவுச்சீட்டு என்ற ஆவணத்தை உருவாக்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அமெரிக்காவில் பார் ஹார்பரில் 1921 ஜூலை 27 அன்று டேவிஸ் பிறந்தார். மேயர் - ஹில்டா டேவிஸ் தம்பதியினரின் மகன். 1940ல் எபிஸ்கோப்பல் அக்காதமியில் பட்டப்படிப்பை முடித்தார். கார்னகி கல்விக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.

டேவிஸ் நியூயார்க் பிராட்வே அரங்குகளின் நடிகராக இருந்தார். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க வான்படையில் விமானியாகப் பணியாற்றினார். ஜெர்மனி மீது குண்டுவீசிய பி-17 ரக குண்டுவீசி வானூர்தியில் பணிபுரிந்தார். தான் குண்டு வீசிய படங்களைப் பார்த்தபோது பின்னர் ஆழமான மன நெருக்கடிக்குள்ளானார். தேசியவாதம் என்பதன் தீமைகளை உணர்ந்தார். இனிமேல் எந்த நாட்டுக்கும் குடிமகனாக இருக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தார்

தேசியமறுப்பு தொகு

1948 ல் பாரிசில் ஓர் உலக சம்மேளத்தில் டேவிஸ் தன் அமெரிக்கக் குடியுரிமையை துறந்து தன்னை ‘உலகக்குடிமகன்’ என்று அறிவித்துக்கொண்டார். 1948 நவம்பர் 22ல் காரி டேவிஸ் ஐநா சபையின் சர்வதேசிய பொதுக்குழு கூட்டத்தில் புகுந்து ‘ஒரே அரசு ஒரே உலகம் தேவை’ என்ற கோஷத்தை எழுப்பினார். அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

1949ல் காரி டேவிஸ் மேய்ன் மாநிலத்திலுள்ள எல்ஸ்வர்த் நகரில் உலகக் குடிமகன்களின் பதிவகம் (International Registry of World Citizens) என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் 7,50,000 பேர் பதிவுசெய்துகொண்டார்கள். 1953 செப்டெம்பரில் காரி டேவிஸ் உலகக்குடிமகன்களுக்கான உலக அரசு ஒன்றை அறிவித்தார். உலகை தனக்காக சொந்தம் கொண்டாடுவது அடிப்படை மனித உரிமை என்று அறைகூவல் விடுத்தார்.

1954ல் உலக சேவை ஆணையகம் (World Service Authority) அமைப்பை உருவாக்கினார். இது அதன் குடிமகன்களுக்கு உலக கடவு அட்டை (world passport) வழங்க ஆரம்பித்தது. 1954ல் இந்த கடவு அட்டையுடன் அவர் முதன்முதலாக இந்தியாவுக்கு வந்தார். இந்தியா உலகக் குடிமகனுக்கான அறைகூவலை விடுக்கவேண்டுமென ஆசைப்பட்டார். காரணம் ரிக் வேதத்தில் உள்ள ‘வசு தைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற சொல்லாட்சியால் மனம் கவரப்பட்டே தன் சிந்தனைகளை அவர் உருவாக்கியிருந்தார். அவர் காந்திய நோக்கு கொண்டவர்..

காரி டேவிஸ் பாரீஸில் இருந்தபோது சார்போன் பல்கலையில் ஆசிரியராக இருந்த ஹென்றி பெர்க்ஸனின் தொடர்பு இருந்தது. பெர்க்ஸனின் மாணவர்களான டாக்டர். நடராஜன் (பின்னாளில் நடராஜகுரு) மற்றும் ஜான் ஸ்பியர்ஸ் (பின்னாளின் நடராஜகுருவின் மாணவர்) ஆகியோரின் நட்புக்கு பாத்திரமானார். அவர்களை பார்க்க இந்தியா வந்தார். சிலநாள் சிறைவாசத்துக்குப் பின் ஜவகர்லால் நேருவின் தலையீட்டால் அவரது கடவுஅட்டை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. காரி டேவிஸ் ஊட்டி நாராயணகுருகுலத்துக்கு வந்து எட்டு மாதம் தங்கியிருந்தார். கேரளத்தில் பயணம் செய்தார்.

காரி டேவிஸ் உலகம் முழுக்க 170 நாடுகளுக்கு தன் சொந்த கடவு அட்டையுடன் பயணம்செய்தார். இருநூறு முறை கடவுச்சட்டங்களை மீறியமைக்காக சிறை சென்றார். ஆனால் சாத்வீகப் போராட்டம் மூலம் 150 நாடுகள் தன் கடவுச்சீட்டை அங்கீகரிக்கச்செய்தார். பாரீஸில் அவருக்காக ஆந்திரே ழீட் அல்பேர்ட் காம்யு போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் ஆதரவளித்தார்கள். அவருக்காக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள அடங்கிய ஒரு ஆதரவுக்குழு அமைக்கப்பட்டது. 1956ல் காரி டேவிஸ் நடராஜகுருவுடன் இணைந்து உலக அரசுக்கான முன்வரைவையும் பொது பொருளாதார திட்டத்தையும் தயாரித்தார். அது பாரீஸில் வெளியிடப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது.

காரி டேவிஸ் பெங்களூரில் நடராஜகுரு உருவாக்கிய கிழக்கு மேற்கு பல்லை சார்பில் அத்வைத வேதாந்தத்தில் முதல் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் நடராஜ குருவின் குருகுலங்களை வாஷிங்டனில் அமைக்க பாடுபட்டார். 1986ல் வாஷிங்டன் டிசியின் மேயர் தேர்தலில் போட்டியிட்டார். அவர் உருவாக்கிய உலகக்குடிமகன்களின் கட்சி சார்பில். 585 வாக்குகள் பெற்றார். 1988ல் உலகக் குடிமகன்களின் கட்சி சார்பில் அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் போட்டியிட முயன்றார்.

நூல்கள் தொகு

காரி டேவிஸ் உலகை ஒரு நாடாக்க வேண்டும் என்ற தன் கனவை முன்வைத்து பல நூல்களை எழுதியிருக்கிறார்

  • Davis, Garry (1961). My country is the world: The Adventures of a World Citizen. Putnam.
  • Davis, Garry (1992). Passport to Freedom, A Guide for World Citizens. Nwo Pubns. ISBN 0929765087
  • Davis, Garry (2003). World Government, Ready or Not!. BookSurge Publishing. ISBN 159457166X
  • Davis, Garry (2004). Letters To World Citizens. BookSurge Publishing. ISBN 0970648375
  • Davis, Garry (2001). A World Citizen in the Holy Land. World Government House. ISBN 0970648340
  • Davis, Garry (2005). Cher Monde, Une Odyssée a travers la planete. World Government House. ISBN 0970648391
  • Davis, Garry (2006). DEAR WORLD, A Global Odyssey. BookSurge Publishing. ISBN 0738826243

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_டேவிஸ்&oldid=3174326" இலிருந்து மீள்விக்கப்பட்டது