காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில்

காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அம்மன் கோயில் ஆகும். இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அமைக்கப்பட்டுள்ளார். இத்தலமானது பழமை வாய்ந்தது.[1] கொப்புடைஅம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது.

அம்மன் உருவான விதமாகக் கூறப்படும் கதை

தொகு

காரைக்குடியின் புறநகரப் பகுதியாக தற்போது இருக்கும் செஞ்சை என்ற இடம் முன்பு காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த செஞ்சை காட்டுப்பகுதியில் காட்டம்மன் கோயில் உள்ளது. காட்டம்மனும் கொப்புடையம்மனும் சகோதரிகள் ஆவர். காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன். கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை எனவும் காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தன் மூத்த தமக்கையின் பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாரென்றும் காட்டம்மன் மலடியான தன் தங்கை தன்னுடைய பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாரென்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்றும் இக்கோயிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.[2]

தல சிறப்பு

தொகு

சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் ஆகும். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறார்.

பரிகாரம்

தொகு

தோல் நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் இங்கு வருகிறார்கள். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். பூரண நம்பிக்கை கொண்டு இங்கு வருவோரின் குறைகள் யாவும் நிவர்த்தியடைகிறது என்பது நம்பிக்கை.

திருவிழா

தொகு

சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை 'செவ்வாய்ப் பெருந்திருவிழா' தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

சித்திரை ஆண்டுப் பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

நடை திறக்கும் நேரம்

தொகு

இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Koppudai Nayaki Amman Temple : Koppudai Nayaki Amman Koppudai Nayaki Amman Temple Details கொப்புடை நாயகி அம்மன்". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  2. "கஷ்டமெல்லாம் தீர்ப்பாள் கொப்புடையம்மன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.