காலற்றிறன்

ஒரு பொருளின் காலற்றிறன் என்பது, அதன் மேற்பரப்பில் இருந்து கதிர்வீசுவதன் மூலம் வெப்பத்தை வெளிவிடும் திறனாகும். இத் திறனை கருபொருள் எனப்படும் பொருளின் வெளிவிடும் திறனோடு ஒப்பிட்டு அதன் வல்லமையைக் குறிப்பதாகும். காலல் என்றால் கக்குதல் அல்லது வெளிவிடுதல் என்று பொருள். இந்தக் காலற்றினைத் துறையியலர் ε அல்லது e எனக் குறிக்க்கிறார்கள். காலற்றிறன், பொருள் கதிர்வீசும் ஆற்றலின் அளவுக்கும், அதே வெப்பநிலையில் ஒரு கரும்பொருள் கதிர்வீசும் ஆற்றலின் அளவுக்கும் உள்ள விகிதம் ஆகும். ஒரு உண்மையான கரும்பொருளின் காலற்றிறன் 1 (ε = 1) ஆகும். ஆனால், பொதுவாக பொருட்களின் காலற்றிறன் ஒன்றிலும் குறைவாகவே (ε < 1) இருக்கும். காலற்றிறன் பண்பலகு இல்லாத ஓர் எண். பொதுவாகப் பொருளின் கருமைத் தன்மையும், மங்கல் தன்மையும் கூடும்போது காலற்றிறன் 1 ஐ அணுகும். தெறிக்கும் தன்மை கூடக்கூட பொருட்களின் காலற்றிறன் குறைந்துகொண்டு செல்லும். நன்றாக மினுக்கிய வெள்ளியின் காலற்றிறன் 0.02 ஆக இருக்கும்.

காலற்றிறன் ஆனது வெப்பநிலை, காலற்கோணம், அலைநீளம் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு மேற்பரப்பின் காலற்றிறன் மாறிலியாக இருப்பதற்காக நிறமாலைசார் காலற்றிறனும், உறிஞ்சுதிறனும் அலைநீளத்தில் தங்கியிருப்பதில்லை என்று எடுத்துக்கொள்வது உண்டு. இது "சாம்பல்நிறப் பொருள் கருதுகோள்" என்பர். பொதுவாகப் "பொருளொன்றின் காலற்றிறன்" என்று குறிக்கப்பட்டாலும், பொருளொன்றின் காலற்றிறன் அதன் தடிப்பில் தங்கியுள்ளது. ஒரு பொருளின் காலற்றிறன் என்னும்போது அது முடிவிலித் தடிப்புக்கொண்ட பொருளின் காலற்றிறனையே குறிக்கும். அப்பொருளின் குறைந்த தடிப்புக்கொண்ட மாதிரிகளின் காலற்றிறன் மேற்குறித்த காலற்றிறனிலும் குறைவாகவே இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலற்றிறன்&oldid=2743907" இலிருந்து மீள்விக்கப்பட்டது