கிப் உபகரணம்

கிப்பின் உபகரணம் (Kipp's apparatus) என்பது சிறிய கன அளவிலான வாயுக்களை உற்பத்தி செய்வதற்கான உபகரணம் ஆகும்.[1] இந்த உபகரணம் 1844 ஆம் ஆண்டு டச்சு மருந்தியலாளர் பீட்ரசு ஜேகப்ஸ் கிப் என்பவரால் உருவாக்கப்பட்டு வேதியியல் ஆய்வகங்களிலும் பள்ளிகளில் செயல்முறை விளக்கங்களுக்காகவும் 20 ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரு உபகரணமாகும்.

குழாய் அடைப்பான் மற்றும் நொதித்தல் காப்புடன் வெற்று கிப் உபகரணம்
நிரப்பப்பட்ட கிப் உபகரணத்தின் ஓவியம்

பிற்காலங்களில், பெரும்பாலான வாயுக்கள் சிறிய அளவிலான உருளைகளில் அடைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றதால், இது ஆய்வகங்களில் கூட பயன்பாட்டில் இல்லாமல் போனது. தொடக்கத்தில் கிப்சின் உபகரணத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற வாயுக்களானவை தொடர்ச்சியான செயல்முறைகளுக்குப் பிறகே தூய்மையானதாகவும், உலர்ந்ததாகவும் கிடைக்கப்பெற்ற நிலையில் வணிகரீதியில் பெறப்பட்ட வாயுக்கள் தூய்மையானதாகவும், உலர்ந்ததாகவும் கிடைத்தன.

வடிவமைப்பு மற்றும் செயல்முறை

தொகு

இந்த உபகரணமானது பெரும்பாலும் கண்ணாடியாலும், சில நேரங்களில் பாலித்தீனாலும் செய்யப்பட்டதாக இருந்தது. இந்த உபகரணத்தில் செங்குத்தான திசையில் அடுக்கப்பட்ட மூன்று அறைகள் இருந்தன. மேலே உள்ள அறையானது நடுவில் உள்ள அறையின் வழியாகச் செல்லக்கூடியதும் கீழே உள்ள அறையில் முடியக்கூடியதுமான ஒரு குழாயைக் கொண்டதாக உள்ளது. நடுவில் உள்ள அறைக்கும், மேலே உள்ள அறைக்கும் நேரடியான திறப்பு கிடையாது. ஆனால், கீழே உள்ள அறையிலிருந்து நடுவில் உள்ள அறையானது ஒரு தக்க வைக்கும் தகட்டால் (துளைகளை உடைய கூம்பு வடிக கண்ணாடித் தகடு) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு திரவம் மற்றும் வாயுக்களை மட்டும் செல்ல அனுமதிப்பதாக உள்ளது. திண்மப் பொருள் (உதாரணமாக இரும்பு சல்பைடு) மத்தியில் உள்ள அறையில் தக்க வைக்கும் தட்டின் வழியே செல்லாத அளவிற்குப் போதுமான அளவில் வைக்கப்படுகிறது. திரவம், உதாரணமாக அமிலம், மேலறையில் ஊற்றப்படுகிறது. ஊற்றப்பட்ட அமிலமானது கீழே உள்ள அறைக்குச் செல்ல முடியுமென்றாலும் அதற்கு மேலே உள்ள காற்றின் அழுத்தத்தால் அவ்வாறு செய்ய இயலாத நிலை உள்ளது. ஊற்றப்பட்ட திரவமானது கீழே செல்வதற்கு மத்திய அறையின் மேற்பகுதியில் உள்ள ஒரு நிறுத்து அடைப்பானை திறக்கச் செய்ய வேண்டியுள்ளது. திறப்பான் திறக்கப்பட்டு காற்றானது அறையை விட்டு வெளியேறியவுடன் திரவமானது கீழே செல்கிறது. கீழறை நிரம்பியவுடன் தக்க வைக்கும் தட்டின் வழியாக திரவமானது மத்திய அறையில் உள்ள திண்மப் பொருளுடன் வினைபுரிகிறது. இந்த வினையிலிருந்து வெளிவரும் வாயுவைத் நிறுத்து அடைப்பானைத் திறந்து தேவையான போது வெளியே எடுத்துக் கொள்ளலாம். நிறுத்து அடைப்பானானது மூடியிருந்தால் மத்திய அறையிலிருந்த உற்பத்தியான வாயுவின் அழுத்தமானது அமிலத்தை மீண்டும் கீழறைக்கே திருப்பி அனுப்பி திண்மப் பொருளுடன் தொடர்பில்லாத நிலைக்கு தள்ளி விடுகிறது. இந்த நிலையில் வேதி வினையானது நிறுத்து அடைப்பான் திறக்கப்பட்டு உருவான வாயுவானது வெளியில் எடுக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.[2]

கிப்பின் இந்த உபகரணமானது பயன்படுத்தப்படும் திண்மப் பொருளானது அமிலத்தில் கரையும் தன்மையற்றதாக இருப்பின் முறையாகச் செயல்படுகிறது. கரையும் தன்மை பெற்ற திண்மப் பொருளாக இருப்பின் அமிலத்தில் (அ) திரவத்தில் கரைந்த திண்மமானது, திரவத்தின் நிலை கீழிறக்கப்பட்ட பின்னும் வாயுவை வெளியேற்றும் வினையானது தொடர்ந்து நடைபெறுகிறது. விளைபொருளாகக் கிடைக்கும் வாயுவானது, வினை தீவிரமானதாக இருந்தாலும், நீராவியுடன் கலந்திருப்பதாலும் மேலும் தூய்மைப்படுத்தப்படவோ அல்லது உலர்த்தப்படவோ அல்லது இரண்டு செயல்முறைகளுமோ தேவைப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

தயாரிக்கப்பட்ட வாயுக்கள் மற்றும் கலவையிலிருந்து பிரிக்கப்பட்ட பொருட்கள் இவற்றுக்கான உதாரணங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Andrea Sella. "Classic Kit: Kipp's apparatus". 26 October 2007. Chemistry World. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2019.
  2. "Kipp's Gas Generating Apparatus". Humboldt State University, Department of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்_உபகரணம்&oldid=3502674" இலிருந்து மீள்விக்கப்பட்டது