கிராம சபை
கிராம சபை அல்லது கிராம ஊராட்சியின் பொதுக்குழு, தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி [1] கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சடடப் பிரிவு 243 ஜி குறிப்பிடுகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார். அரசாங்கத்தின் பொது உத்தரவுகளுக்கு உட்பட்டு, கிராம சபைக் கூட்டம் ஒரு ஆண்டில் இரண்டு முறையாவது நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் குறிப்பாக இந்திய விடுதலை நாள் மற்றும் குடியரசு நாட்களின் போது கிராம ஊராட்சித் தலைவரால் கூட்டப்படும். தவறினால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரியால் நடத்தப்படும். கிராம சபைக் கூட்டத்தின் போது உறுப்பினர்கள் கீழ்கண்ட பொருள்களை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும்:
- கிராம ஊராட்சியின் வளர்ச்சித் திட்டகளுக்கு ஒப்புதல் அளித்தல்
- கிராம வரவு-செலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்.'
- கிராம ஊராட்சியின் முந்தைய ஆண்டின் வரவு-செலவு திட்டத்தை ஆராய்ந்து ஒப்புதல் அளித்தல்
- முந்தைய ஆண்டின் கிராம ஊராட்சிக் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல்
- கிராம ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றததை மதிப்பாய்வு செய்தல்.
- கிராம ஊராட்சி வரம்பில் உள்ளவர்களுக்கு அரசின் நியாய விலைக் கடையின் சீரான உணவு வழங்கல் நடவடிக்கை, முதியோர் ஓய்வூதியம்,ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் பெற்றுத் தருதல் குறித்து போன்றவை குறித்து விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
- ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளையும் சேர்ப்பது, அவர்களின் வருகை மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி ஆகியவை குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
- மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் குறித்தும் கிராம சபைக் கூட்டம் விவாதிக்கிறது. மக்கள் மற்றும் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அவர்கள் மக்களுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.
- ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் கிராமசபாவில் கலந்துகொண்டு தடுப்பூசி திட்டங்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிராமசபைக்கு விளக்கமளிப்பார். கிராமசபா சேவைகள் மற்றும் வசதிகள் குறித்து விவாதிக்கிறது சுகாதார மையங்களால் வழங்கப்படும்.
- கிராம ஊராட்சிச் செயலாளர் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுப்பணிகளை அடையாளம் கண்டு கிராமசபைக்கு முன் வைத்து அதை பஞ்சாயத்து திட்டங்களில் இணைப்பதற்கான ஒப்புதலைப் பெறுவார்.
- கிராம சபைக் கூட்டம் எடுக்கும் பரிந்துரைகளுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.