கிராம நிர்வாக அலுவலர்

கிராமத்து
(கிராம நிர்வாக அதிகாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தொகு

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடமைகளும், பொறுப்புகளும் விதித்துள்ளது. [1]

  1. கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்
  2. சர்வே கற்களைப் பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது.
  3. நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது.
  4. பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது.
  5. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது.
  6. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்.
  7. காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்.
  8. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
  9. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
  10. அரசுக் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
  11. புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல்.
  12. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது.
  13. முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல்.
  14. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
  15. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல்.
  16. கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல்.
  17. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
  18. தேர்தல் பணிகள் மேற்கொள்வது.
  19. கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வட்ட அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புதல்.
  20. பொதுச் சுகாதாரம் பராமரித்தல்.
  21. நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  22. கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல்.
  23. வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் உரிய அறிக்கை அளித்தல்.
  24. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும், சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல்.
  25. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
  26. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
  27. மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த உரிய பணிகள் செய்தல்.
  28. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது.
  29. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல்.
  30. பதிவு மாற்றம் [Transfer Registry] அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல்.
  31. நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
  32. கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
  33. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
  34. பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது.
  35. ஒவ்வொரு பசலி ஆண்டின் முடிவிலும் கிராமத்தின் வருவாய் நிலவரி கேட்புத் தொகையை வசூல் செய்து வருவாய் தீர்வாயத்தில் இறுதித் தணிக்கையை முடிப்பது மிக மிக முக்கிய பணியாகும்.

கிராம நிருவாக அலுவலர் தேர்வு தொகு

கிராம நிருவாக அலுவலர் பணிக்கான நியமனங்கள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பெறும் எழுத்துத் தேர்வில் முதன்மை பெற்றவர்கள், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி நியமிக்கப்படுகின்றனர்.

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்". Archived from the original on 2017-07-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_நிர்வாக_அலுவலர்&oldid=3581068" இலிருந்து மீள்விக்கப்பட்டது