கிறிஸ்டோப் சாமுவேல் ஜான்

கிறிஸ்டோப் சாமுவேல் ஜான் சுவிசேஷப் பணிகளுக்காக இந்தியாவிற்கு வந்து 42 ஆண்டுகள் தரங்கம்பாடியிலேயே வாழ்ந்து மறைந்த ஜெர்மன் பாதிரி. புராட்டஸ்டெண்ட் மிஷினரிகளின் தொட்டில் என்றழைக்கப்படும் தரங்கம்பாடிக்கு தமிழின் வரலாற்றில் தனித்த இடம் உண்டு. சீகன் பால்க் பாதிரி பல்வேறு எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே இந்திய மொழிகளில் முதன் முறையாக விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். அவரைப் போலவே ஜெர்மனியில் பிறந்து டேனிஷ் மிஷினரிக்காக தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தவர் ஜான்.[1][2][3]

கிறிஸ்டோப் சாமுவேல் ஜான் அவர்களின் படம்

கல்விப்பணி, இறைப்பணி தவிர்த்து இனப்பண்பாட்டியல், மொழியியல், விலங்கியல், வரலாற்றுத்துறைகளில் ஆய்வுகளை முடுக்கினார் ஜான். தென்னிந்தியா முழுக்கப் பயணித்து திரட்டிய அறிவை உடனுக்குடன் சமகாலத்தைய ஆய்வாளர்களான ஜார்ஜ் ஃபாஸ்டர், மார்கஸ் ஃப்ளோஜ், வில்லியம் ரோஸ்பர்க் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜான் வரைந்த ஓவியங்களும், ஆய்வுக்குறிப்புகளும் மார்கஸ் எழுதிய மீன்களின் வரலாற்று நூலுக்கு அடிப்படையாக அமைந்தன. ஜான் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். கண் பார்வையையும் படிப்படியாக இழந்து வந்தார். நோயின் சுமை அவரது ஆய்வுப் பணிகளை தடை செய்யவில்லை. 66 வது வயதில் பக்கவாதம் தாக்கி மறைந்த ஜான் பாதிரி தரங்கம்பாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அறிவியல் துறைக்கு ஜான் பாதிரி ஆற்றிய சேவைக்கு மரியாதையாக ஜெர்மானிய ஆய்வறிஞர்கள் சொஸைட்டி அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. ஆய்வாளர் மார்கஸ் ஒரு மீன் இனத்திற்கு ஜானியஸ் எனும் பெயர் சூட்டினார். இந்தியாவின் முதல் பாம்பு மனிதர் எனும் புகழைப் பெற்ற நீர் நில ஊர்வன விலங்குகள் ஆய்வுத்துறையின் முன்னோடி பேட்ரிக் ரஸ்ஸல் மண்ணுள்ளிப் பாம்புகளுக்கு எரிக்ஸ் ஜான்னி என பெயர் சூட்டி கெளரவித்தார்.

மேற்கோள்கள்

தொகு