கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் முரசுமோட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.

வரலாறு

தொகு

முரசுமோட்டையில் அக்காலத்தில் வாழ்ந்த கணபதிப்பிள்ளை பொன்னையா என்பவர் தனது காணியில் முருகானந்தா பாடசாலையை அமைக்க உதவினார். 1939 தை 16ம் நாளிலே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது முதலில் ஒரு கொட்டகை மாத்திரமே அமைக்கப்பட்டது. மயில்வாகனம் முருகேசு என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். ஆரம்பகால ஆசிரியரான இவரது பெயரையும் முருகப்பெருமானது பெயரையும் கொண்டு இது முருகானந்தா வித்தியாசாலை என அழைக்கப்பட்டது. இதன் பின்னர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கம் இப்பாடசாலையை பொறுப்பெடுத்துக் கொண்டது. அப்போதும் மயில்வாகனம் முருகேசு அவர்களே தலைமை ஆசிரியராக இருந்து 7 பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் 1950 இல் 65 பிள்ளைகளைக் கொண்டு இயங்கிய இப் பாடசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக இன்னுமொரு கொட்டகை அமைக்கப்பட்டது. அப்போது இரண்டு ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர். மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1955இல் இம் மாணவர்களது இடப்பற்றாக்குறையை நீக்குவதற்காக முரசுமோட்டை பழையகமத்தைச் சேர்ந்த சி. கு. இராசையா என்பவரால் இன்னுமொரு கொட்டகை அமைக்கப்பட்டது.

1960களில் க.பொ.த சாதாரண தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1963இல் இப்பாடசாலை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. 1965இல் கட்டடங்கள் கல்லினால் கட்டப்பட்டது. 1968இல் இது முருகானந்தா மகா வித்தியாலயம் எனத் தரமுயர்த்தப்பட்டது.

தொடர்ந்தும் இப்பாடசாலையின் குடிநீர்ப் பற்றாக்குறையை நீக்குவதற்காக இரண்டு கிணறுகள் வெட்டப்பட்டன. விவசாயத் தேவைக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் விவசாயத்திற்குப் பயன்படுத்தி 2 ஏக்கர் விளையாட்டு மைதானமாகப் பாவிக்கப்பட்டது. 1980ல் அதிபராகப் பணியாற்றிய ஏ. சோமலிங்கம் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கொண்ட விடாமுயற்சியால் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு இதே ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.