கிளேமோர் நடவடிக்கை
கிளேமோர் நடவடிக்கை (Operation Claymore) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல். இதில் பிரித்தானிய கமாண்டோ படையினர் நார்வேயின் லோஃபோடென் தீவுகளைத் தாக்கி அங்கிருந்த தொழிற்சாலைகளையும் ஜெர்மானிய வர்த்தகக் கப்பல்களையும் தகர்த்தனர்.
கிளேமோர் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பகுதி | |||||||
லோஃபோடென் தீவுகள், நார்வே |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் நோர்வே | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வேந்திய கடற்படை ரியர் அட்மைரல் எல்.எச்.கே ஹாமில்டன் கேப்டன் சி. கேசுலான் பிரித்தானியத் தரைப்படை பிரிகேடியர் ஜே.சி. ஹேடன் வேந்திய நார்வீஜியக் கடற்படை மார்ட்டின் லிங்கே | தெரியவில்லை | ||||||
பலம் | |||||||
வேந்திய கடற்படை எச். எம். எசு சொமாலி, பெடோவின், டார்ட்டார், எசுக்கிமோ, லீஜியன், பீட்ரிக்சு, குயின் எம்மா ஆகிய டெஸ்டிராயர்கள் படை போக்குவரத்து படகுகள் பிரித்தானியத் தரைப்படை நம். 3 மற்றும் நம் 4 கமாண்டோ படைப்பிரிவுகள் வேந்திய நார்வீஜியக் கடற்படை 52 பேர் | 1 ஆயுதமேந்திய மீன்பிடி படகு | ||||||
இழப்புகள் | |||||||
ஒருவர் காயம் | 10 கப்பல்கள் நாசம் 228 பேர் கைது. |
ஏப்ரல் 9, 1940 அன்று நாசி ஜெர்மனி நார்வே மீது படையெடுத்தது. இரு மாத சண்டைகளுக்குப்பின் நார்வே ஜூன் 9, 1940 அன்று சரணடைந்தது. பின் மேற்கு ஐரோப்பாவிலும் ஜெர்மனி பல நாடுகளை வெற்றி கொண்டு ஆக்கிரமித்தது. இத்தோல்விகளால் நிலை குலைந்து போன நேச நாட்டுப் படைகள், ஜெர்மனியை எதிர்க்க நேரடியாகத் தாக்குதல் நடத்தாமல், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிரடித் தாக்குதல்களை நடத்த முடிவு செய்தனர். ஜெர்மனியின் போர் முயற்சிக்குத் இன்றியமையாத தொழிற்சாலைகள் தொழில் வளங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கென புதிதாக கமாண்டோ சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. மார்ச் 1941ல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த நார்வேயின் லோஃபோடென்தீவுகள் மீது இத்தகு கமாண்டோ தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.
கிளேமோர் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்த இத்தாக்குதலின் இலக்குகள் - லோஃபோடென்தீவுகளின் மீன் எண்ணெய் தொழிற்சாலைகளையும் அங்குள்ள ஜெர்மானிய சரக்குக் கப்பல்களையும் அழிப்பது. மார்ச் 4, 1941ல் நடைபெற்ற இத்தாக்குதலில் 250 பிரித்தானிய கமாண்டோக்களும் ஏழு பிரித்தானிய டெஸ்டிரயர் ரக போர்க்கப்பல்களும் பங்கெடுத்தன. அன்று அதிகாலை நான்கு மணியளவில் ஜெர்மானியர்கள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் லோஃபோடென்தீவுகளின் வெஸ்ட்ஃப்யோர்ட் கடல்நீரேரியுள் நுழைந்த இப்படை, அங்கிருந்த ஜெர்மானிய சரக்குக் கப்பல்களை மூழ்கடிக்கத் தொடங்கியது. குறுகிய நேரத்துக்குள் மொத்தம் 18,000 டன்கள் எடையுள்ள 10 சரக்குக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. பின் தரையிறங்கிய கமாண்டோக்கள் மீன் எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு வெடி வைத்துத் தகர்த்தனர். அவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எட்டு லட்சம் டன் எடையுள்ள மீன் எண்ணெய், மண் எண்ணெய், பாரஃபின் ஆகிய எரிபொருட்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இவற்றுடன் 228 ஜெர்மானிய மாலுமிகளையும் படைவீரர்களையும் கைது செய்தனர். பிரித்தானிய தரப்பில் சில இழப்புகளே ஏற்பட்டன.
விதிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றினாலும், அவற்றைக் காட்டிலும் இவ்வதிரடித் தாக்குதலில் முக்கியமான ஒரு விளைவு தற்செயலாக நிகழ்ந்தது. மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மானிய கப்பல்களில் ஒன்றிலிருந்து அதன் எனிக்மா எந்திரத்தின் பாகங்களும், குறியீட்டு குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கொண்டு பிரித்தானிய அறிஞர்கள் எனிக்மா மறைமுகக் குறியீட்டு செய்திகளைப் படிக்கும் வழியினைப் பின்னர் கண்டுபிடித்தனர். இது இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இதைத் தவிர கிளேமோர் நடவடிக்கைக்கு இன்னொரு பக்க விளைவும் இருந்தது. இவ்வகைத் தாக்குதல்களால் அதிர்ந்த ஜெர்மானிய போர்த் தலைமையகம், தொழிற்சாலைகளையும், தொழில்வளங்களையும் கமாண்டோக்களின் நாச வேலைகளில் இருந்து பாதுகாக்க அதிக எண்ணிக்கையில் பாதுகாவல் படைகளை நிறுத்தத் தொட்ங்கியது. இதனால் பிற போர்க்களங்களில் போரிட வேண்டிய வீரர்கள், கமாண்டோக்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஐரோப்பாவெங்கும் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த உத்தியின் வெற்றியால் உந்தப்பட்ட பிரித்தானியப் போர்த் தலைமையகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கமாண்டோ படைப்பிரிவுகளை விரிவுபடுத்தி மேலும் பற்பல தாக்குதல்களை நடத்தியது.
படங்கள்
தொகு-
தீப்பிடித்து எரியும் எண்ணெய் கிடங்குகள்
-
எரியூட்டியபின்னர் எரியும் கிடங்குகளைப் பார்வையிடும் கமாண்டோக்கள்