கீழப்பாட்டம்
கீழப்பாட்டம் கிராமம் தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு மிக அருகில், தாமிரபரணி நதிக் கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. அருகே, மணப்படைவீடு, திருமலைக் கொழுந்துபுரம், கான்சா(கிப்) புரம்,தோணித்துறை, மருதூர் அணைக் கட்டு பகுதிகள் தாமிரபரணி நதிக் கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளன. சீவலப்பேரி, குப்பக்குறிச்சி, கலியாவூர் பகுதிகள் தாமிரபரணி நதிக் கரையின் வடபகுதியில் அமைந்துள்ளன. வடகரையில் சீவலப்பேரி மற்றும் குப்பக்குறிச்சிக்கிடையே குற்றாலத்தில் அருவியாக பாயும் தாமிரபரணியின் துணை நதியான சிற்றாறு தாமிரபரணியோடு கலக்கிறது. இவ்விடத்தில் புகழ் பெற்ற சுடலை மாடசாமி கோவிலும், துர்க்கையுடன் எழுந்தருளியுள்ள பெருமாள் கோவிலும் சீவலப்பேரியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறுமண் எனும் , மண்பாண்டங்கள் செய்யவும் செங்கல் அறுக்கவும் பயன்படும் மண் வகை கிடைக்கிறது. சுற்றிலும் வயல் வெளிகள் வனப்பகுதிகள் சூழ்ந்து அமைந்துள்ளது. ஆறு, குளம், வாய்க்கால், கிணறு என நீர்நிலைகளை கொண்டுள்ளது. இதனால் இப்பகுதி எப்போதும் பசுமையாகவும் குளிர்ந்தும் காணப்படும். மேலப்பாட்ம் குன்று பின்னனியில் அமைந்துள்ளது இக்கிராமத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாகும். இக்கிராமத்தில் திருத்து, கொம்பந்தன்பாறை, அவனாப்பேரி மற்றும் அண்ணாநகர் சிறு கிராம பகுதிகளும் அடங்கும். அழகான கிராமமாக இருந்தாலும் இயற்கை வளங்களை அணுபவிப்பதில் ஏற்பட்ட போட்டியால் சில காலம் அமைதியை இழந்திருந்தது.
பல அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை இக்கிராமம் தந்திருந்தாலும், பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.மா.ஆறுமுகம் மற்றும் அரசியல்வாதி திரு.வீ.கருப்பசாமிப்பண்டியன் ஆகியோர் குறிப்படத்தக்கவர்கள்.