சிற்றாறு

தென்காசி மலையில் உற்பத்தியாகும் ஆறு

சிற்றாறு என்பது தென்காசி நகராட்சியிலுள்ள குற்றால மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இது தாமிரபரணி ஆற்றின் முக்கிய துணை ஆறு. 80 கிலோமீட்டர்கள் நீளமும், 1,722 சதுர கி.மீ. பரப்பளவும்[1] கொண்ட இந்த ஆறு தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி என்னும் ஊரில் இணைகிறது. இவ்வாற்றுக்கு ஐந்து முதன்மைத் துணையாறுகள் உள்ளன. இதன் துணையாறுகளான ஐந்தருவி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, அழுதகன்னியாறு ஆகியவை முறையே சிற்றாற்றில் கசமோட்சபுரம்,[2] தென்காசி, வீரகேரளம்புதூர், கடப்போகாத்தி ஆகிய ஊர்களில் இணைகின்றன. இதைத்தவிர உப்போடை என்ற துணையாறும் உண்டு.

சிற்றாறு
ஆறு
இளவேனிற்காலம் சிற்றாறு
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
கிளையாறுகள்
 - இடம் ஐந்தருவியாறு, அரிகர நதி, அழுதகன்னி ஆறு, அனுமான் நதி
 - வலம் உப்போடை
நகரங்கள் தென்காசி, செங்கோட்டை
உற்பத்தியாகும் இடம் பொதியில்
கழிமுகம்
 - அமைவிடம் சீவலப்பேரி, தாமிரபரணி
நீளம் 80 கிமீ (50 மைல்)

பாசனம்

தொகு

சிற்றாற்றுக்கு மொத்தம் ஐந்து துணையாறுகளும் அத்துணையாறுகளின் 3 துணையாறுகளும் உள்ளன. சிற்றாற்றிலிருந்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம்,வீராணம் வட்டம் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மேலும் இப்பகுதிகளில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் சிற்றாறு விளங்குகிறது. அவற்றின் விவரம்,

துணையாறு சேரும் இடம் மூலநதி அல்லது இடம் அணைக்கட்டுகள் (தேக்கங்களின்) எண்ணிக்கை பாசன நில அளவு (ஹெக்டேர்கள்)
சிற்றாறு தாமிரபரணியுடன் சீவலப்பேரியில் இணைகிறது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு -குற்றால மலை 17 8903.27
ஐந்தருவியாறு சிற்றாற்றுடன் காசிமேஜர்புரத்தில் இணைகிறது. ஐந்தருவி 1 293.4
அரிகர நதி சிற்றாறுடன் தென்காசியில் இணைகிறது. செங்கோட்டை புளியரை மேற்கு தொடர்ச்சி மலை 7 445.10
குண்டாறு அரிகர நதியுடன் செங்கோட்டை பார்டரில் இணைகிறது. முண்டன்கோயில் மொட்டை 7 (1) 465.39
மொட்டையாறு குண்டாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு 1 (1) 141.64
அழுதகன்னி ஆறு சிற்றாறுடன் கிழக்குத் தென்காசியிலுள்ள கடப்பாகொத்தியில் இணைகிறது. பழைய குற்றால அருவி 8 827.47
அனுமான் நதி சிற்றாறுடன் வீரகேரளம்புதூரில் இணைகிறது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு 14 4046.94
கருப்பா நதி அனுமன் நதி மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு 6 (1) 3844.59
உப்போடை சிற்றாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு 2 445.16

சிற்றாறு பாசனவசதி

தொகு

சிற்றாற்றின் மீது பாசனவசதிக்காக 17 அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.[3]

எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட
ஆயக்கட்டு நேரடியாக
(ஏக்கரில்)
பதிவுசெய்யப்பட்ட
ஆயக்கட்டு மறைமுகமாக
(ஏக்கரில்)
1 தலை அணைக்கட்டு 590.06 1467.32
2 அடிவட்டாம்பாறை அணைக்கட்டு 114.08 157.72
3 வால்விளகுடி அணைக்கட்டு 153.27 -
4 புலியூர் அணைக்கட்டு 381.00 911.48
5 பாவூர் அணைக்கட்டு 488.00 3110.08
6 திருசிற்றம்பலம் அணைக்கட்டு 163.00 163.25
7 மாறைந்தை அணைக்கட்டு 1361.00 2543.04
8 வீராணம் அணைக்கட்டு 231.15 2207.70
9 மானூர் அணைக்கட்டு 821.75 2677.52
10 மேட்டூர் அணைக்கட்டு 500.10 1027.50
11 பள்ளிக்கோட்டை அணைக்கட்டு 249.81 2135.00
12 உக்கிரன்கோட்டை அணைக்கட்டு 421.00 47.18
13 அழகியபாண்டியபுரம் அணைக்கட்டு - 440.48
14 பிள்ளையார்குளம் அணைக்கட்டு 66.90 413.19
15 செழியநல்லூர் அணைக்கட்டு 67.81 372.71
16 பிராஞ்சேரி அணைக்கட்டு 344.39 409.40
17 கங்கைகொண்டான் அணைக்கட்டு 216.28 779.80
மொத்தம் 9963.83 37062.19

வரலாறு

தொகு

கற்காலம்

தொகு

இந்த ஆற்றின் இணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[4]

 
தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயிலின் வாயில்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் சிற்றாறு பாய்ந்தோடியது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு வேண்டினார். அதற்கு முன் சிற்றாறு, தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்திலும் மற்றும் இலஞ்சியிலுள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்தின் வழியாகவும் சென்றது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவன் கூறிய இடமோ சிற்றாறு செல்லும் இடத்தில் அமைந்தது. அதனால் அதை தெற்கு நோக்கி திசை திருப்பினான் பாண்டியன்.[2] அந்த தடுத்து நிறுத்தப்பட்ட பழைய சிற்றாறு சென்ற இடங்களில் கட்டப்பட்டதே இந்த 2 கோயில்களும் ஆகும். இக்கோயில்களிலுள்ள அம்மன் சிற்றாறு திருப்பிவிட்டதால் ஏற்படும் வீரிய விளைவுகளை தடுப்பதன் காரணத்தினால் கட்டப்பட்டதாக நம்பிக்கை வைத்ததால் இக்கோயில்கள் சிற்றாற்று வீரியம்மன் கோயில் என பெயர் பெற்றன.

அருவிகள்

தொகு
மூலக் கட்டுரை - குற்றால அருவிகள்

சிற்றாற்றின் மூலமும் அவற்றின் இணையாறுகளின் மூலமும் பல இயற்கை அருவிகள் பல தென்காசியை சுற்றி விழுகின்றன. அவை,

  1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.
  2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.
  3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
  4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும்.
  5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.
  6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
  7. புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.
  8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.
  9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.
  10. கண்ணுப்புளி மெட்டு - இது செங்கோட்டை அருகில் குண்டாறு தேக்கத்தின் மேல் மைந்துள்ளது.

மூலம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chithar River Basin and location of monitoring wells". springerimages. பார்க்கப்பட்ட நாள் சூலை 12, 2012.
  2. 2.0 2.1 தினமலர்(ஆகஸ்ட் 06,2010,02:51 IST). "சீரமைக்கப்பட வேண்டிய தென்காசி சிற்றாறு சீர்‌பெறுமா ?". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூலை 04, 2012.
  3. "பாசன அணைக்கட்டுகள், கால்வாய்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2015.
  4. இந்திய தொல்லியல் துறை. "இந்திய தொல்லியல் துறை வெளியீடு 1988-89". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: மே 17, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றாறு&oldid=3853906" இலிருந்து மீள்விக்கப்பட்டது