கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன்: (பிறப்பு 2-1-1957) ஆசிரியர் (கலைமகள் மாத இதழ்). இவர், 1996 முதல் கலைமகள் மாத இதழின் ஆசிரியராக உள்ளார். இயற்பெயர் எஸ் சங்கரசுப்பிரமணியன். சிவசைலம்-பார்வதி தம்பதிக்கு மகனாக, அன்றைய திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய தென்காசி) கீழாம்பூரில் பிறந்தார். தற்போது, சென்னையில் வசித்து வருகிறார். அம்மன் தரிசனம் ஆன்மிக மாத இதழை நிறுவிய ஆசிரியர். சுபமங்களா மாத இதழ் நிறுவன ஆசிரியர் குழுவில் இருந்தவர். தொல்லியல் துறை தொடர்பாக தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் வெளியிடப்படும் ஆவணச் சுவடுகள் என்னும் வருடமிருமுறை இதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளார்.

குடும்ப பின்னணி

தொகு

இவரின் தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் சுதந்திரப் போராட்ட காலத்தில் கதர் துணியை நெய்து அதனைச் சுமந்து சென்று விற்பனை செய்தவர். முதன்முதலாக விற்பனை செய்த பணம் 32 ரூபாயில் 25 ரூபாயை சுதந்திரப் போராட்ட நிதிக்கு வழங்கி, மீதமுள்ள ஏழு ரூபாயை வக்கீல்களுக்கு ஒரு நிதி - டிரஸ்ட் தொடங்க வேண்டும் என்று, அம்பாசமுத்திரத்தில் உள்ள வக்கீல்களிடம் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கோர்ட்டு செலவுக்கு பணம் கிடைக்க முதல் முதலாகக் குரல் கொடுத்தவர். திருமங்கலம் சுப்பையா ஐயரும் காசி விஸ்வநாதன் தனது இளைய மாமனாருடன் இணைந்து பூவன்குறிச்சி அருகில் தோட்டத்தில் கதர் நெய்ய தறி அமைத்து, அதில் பட்டியலின மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தார். பட்டியலின மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்று உதவிகள் செய்தவர். இவர் அத்தை மகன் சங்கர் பாலிடெக்னிக்கில் முதல்வராகவும் செயலாளராகவும் இருந்த ஆர். அனந்தராமகிருஷ்ணன் இதழ்களில் எழுதியவர். இவரின் பெரியம்மா மகள் திருமதி ஜெயா சீனிவாசனும் இதழ்களில் அதிகம் எழுதியார். இவ்விருவரும் சங்கரசுப்பிரமணியனுக்கு எழுத்தாளர் ஆகும் ஊக்கம் அளித்தனர்.

இதழியல் பணி

தொகு

அரசியல், ஆன்மீகக் கட்டுரைகள் அதிகம் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, மற்றும் பாண்டிச்சேரி முதல்வர்களையும் பேட்டி கண்டு பதிவு செய்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை எழுத்தாளர் ரகமியுடன் இணைந்து சென்னை தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்துள்ளார்.

திருக்குறள் சொற்பொழிவு சாதனை

தொகு

திருக்குறள் தொடர்பாக ஒரே நாளில் ஏழு மணி நேரம் தொடர்ந்து சென்னையில் நீதிபதிகள், பத்திரிகையாளர், பொதுமக்கள் முன்னிலையில் சொற்பொழிவாற்றியுள்ளார். இது ஓர் உலக சாதனை. திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பால் கொண்டது என்பதால், அதை வைத்து மூன்று இடங்களில் தொடர்ந்து 7 மணி நேரம் பேசியுள்ளார். திருச்சி தேசியக் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து 7 மணி நேரம் ஏழு வகுப்புகளில் திருக்குறள் சொற்பொழிவுகளை மாணவர்களிடம் நிகழ்த்தினார்.

வெளிநாட்டு இலக்கியத் தளங்கள்

தொகு

ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம் தொடர்பாக சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். இந்திய மலேசிய கலாச்சார சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்திய மலேசிய ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவராக இருந்தவர். மலேசிய பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு செய்யும் தமிழ்ப் பேராய்வு என்னும் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். மலேசியாவில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எஸ்பி மணிவாசகம் அவர்களுடன் இணைந்து நடத்தியவர்.

விருதுகள்

தொகு

தமிழக அரசின் கலைமாமணி விருது (2018) பெற்றவர். காஞ்சி மடத்தின் சார்பில் வழங்கப்படும் சேவாரத்னா விருது, தென்காசி திருவள்ளுவர் கழகம் வழங்கிய திருக்குறள் விருது, சென்னை கம்பன் கழகம் வழங்கிய கிவாஜ விருது, சிருங்கேரி மடம் வழங்கிய சிறந்த பத்திரிகையாளர் விருது ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

எழுதிய நூல்கள்

தொகு

பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு குறிப்பிடத் தக்க ஒன்று. திருக்குறள் களஞ்சியம் என்னும் ஆய்வு நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்துள்ளார். இந்த இரு நூல்களும் தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் சென்னை ராஜ்பவனில் வெளியீடு கண்டன.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் முதல்வர் கு.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ராஜாராம் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் லட்சுமணன், பாஜக., மூத்த தலைவர்கள் ஜனா கிருஷ்ணமூர்த்தி, இல.கணேசன் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

சொற்பொழிவுகள்

தொகு

இந்திய தேசத்தின் புனித நதிகள் குறித்து, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சொற்பொழிவாற்றி வருகிறார். தேஜஸ் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் பழந்தமிழ் இலக்கியங்களையும் சமஸ்கிருத இலக்கியங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.