கீழ் மட்ட கரும்பலகை
கீழ்மட்டக் கரும்பலகை (Low Level Blackboard- LLB) என்று அழைக்கப்படும் [1] இந்தச் சொல் வகுப்பறையில் மாணவர்கள் எளிதாக எழுதிப் படிக்ககூடிய வகையில் அவர்களுக்கு எட்டும் உயரத்தில் அமைக்கப்பட்ட கருப்பு வண்ணம் பூசப்பட்ட சுவர் அமைப்பாகும். கீழ் மட்ட கரும்பலகை என்பது குறைந்த உயரம் கொண்ட கரும்பலகையை குறிக்கும் சொல் ஆகும். தொடக்கநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கீழ்மட்டக் கரும்பலகை பெரிதும் பயன்படுகின்றது. இது வகுப்பறைகளில் வழக்கமாக பயன்படுத்தும் கரும்பலகை போல் அல்லாமல் சில வேறுபாடுகளை கொண்டுள்ளது [2]
சிறப்பு
தொகுஇது சிறப்பான முற்றிலும் மாணவர்களே பயன்படுத்தும் கரும்பலகையாகும். தொடக்கநிலை மாணவர்களின் எழுதுதல் திறன் அதிகரிக்கவும் , அவர்களின் ஆக்கத்திறன் மேம்படுதலுக்கும் பெரிதும் பயன்படும் இந்த கீழ் மட்ட கரும்பலகை இன்றைய கல்விச்சூழலில் மாணவர்களுக்கு ஏற்ற துணைக்கருவியாக அமைந்துள்ளது. செயல்வழிக் கற்றல் முறையில் கீழ்மட்டக் கரும்பலகையின் பயன்பாடு மிகவும் சிறப்பு பெறுகிறது. வழக்கமாக வகுப்பறையில் ஆசிரியர் பயன்படுத்தும் கரும்பலகைக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் இந்தக் கீழ்மட்டக் கரும்பலகைக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு.
கரும்பலகை, கீழ்மட்டக் கரும்பலகை வேறுபாடு
தொகுகரும்பலகை | கீழ் மட்ட கரும்பலகை |
---|---|
ஆசிரியர் பயன்படுத்துவது | முழுவதும் மாணவர்கள் பயன்படுத்துவது |
ஆசிரியரின் உயரத்துக்கு ஏற்ப அமைக்கப்படும் | மாணவர்கள் உயரத்துக்கு ஏற்ப குறைந்த உயரத்தில் அமைக்கப்படும் |
இது வகுப்பறைக்கு வெளியே எடுத்துச்சென்று பயன்படுத்தும் வகையில் மரப்பலகையால் செய்யப்பட்டிருக்கும் | வகுப்பறை சுவர்களில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட அமைப்பு. இதனை வெளியே எடுத்துச் செல்ல முடியாது |
மாணவர்கள் ஆக்கத்திறன் வெளிப்படுத்த வாய்ப்புகள் குறைவு | மாணவர்கள் தங்களின் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்துகின்றனர் |
அமைப்பு
தொகுவகுப்பறையின் சுவர்களில் குறைந்த உயரத்தில் மாணவர்களின் உயரத்திற்கு ஏற்றவாறு மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை இருக்குமாறு கருப்பு வண்ணம் பூசப்பட்டு கீழ்மட்டக் கரும்பலகை அமைக்கப்படும். இது உண்மையில் மரப்பலகை அன்று, முற்றிலும் சுவரமைப்பாகும். வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் மாணவர் பெயர் எழுதப்பட்டு கீழ்மட்டக் கரும்பலகை தனித்தனி அமைப்பாக வெள்ளைக்கோட்டினால் பிரிக்கப்பட்டிருக்கும்.
பயன்பாடு
தொகுகீழ் மட்ட கரும்பலகையில் எழுதுவதற்கு பலபம் என்று சொல்லக்கூடிய சிறியவகைச் சுண்ணக்கட்டிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். கரும்பலகையில் எழுதுவதற்கு கால்சியம் சல்பேட்டு என்னும் வேதியியல் சேர்மத்தால் செய்யப்படும் சிறிய உருளை வடிவான குச்சிகள் பயன்படுகின்றன. இவை வெண்ணிறமாக இருப்பதால் வெண்கட்டிகள் என அழைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கீழ்மட்டக் கரும்பலகை
தொகுஇந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல் வழிக் கற்றல் முறையும் ஐந்தாம் வகுப்பில் எளிய படைப்பாற்றல் கல்விமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறையில் கீழ்மட்டக் கரும்பலகைகள் மிகுந்த முதன்மை பெறுகின்றன. மாணவர்கள் தங்களின் ஆக்கத்திறன்களையும் பல்வேறு திறமைகளையும் இந்தக் கரும்பலகைகளில் வெளிப்படுத்துகின்றனர். அதனை ஆசிரியர்கள் எளிதாக மதிப்பீடு செய்ய இந்தக் கீழ்மட்டக் கரும்பலகை பெரிதும் துணைபுரிகின்றது.