குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணச் சிற்பங்கள்
குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணச் சிற்பங்கள் என்பன, போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவையும், யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த கோயில்களில் பயன்பாட்டில் இருந்தவையுமான இந்துக் கடவுட் சிற்பங்களைக் குறிக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்கள் 17ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் ஏறத்தாழ 175 ஆண்டுகள் இந்து சமயம் குடியேற்றவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டிருந்ததது. தற்காலத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்கள் அனைத்தும் 1790களுக்குப் பிற்பட்டவையே. இதனால், தற்காலத்து இந்துக் கோயில்களில் குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய கடவுட் சிலைகள் கிடையா. அக்காலத்துச் சிலைகளாகத் தற்போது அடையாளம் காணப்பட்டவை அண்மைக் காலங்களில் தற்செயலாகக் குளங்களில் இருந்தும், நிலத்தின் கீழிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டவை. இவையும் எண்ணிக்கையில் மிகக் குறைவானவையே. இவற்றுட் பெரும்பாலானவை தற்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பின்னணி
தொகு1620க்குப் பின்னர் போர்த்துக்கேய ஆட்சியாளர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த இந்துக்கோயில்களை இடிக்கத்தொடங்கினர். கோயில்களில் இருந்த கடவுட் சிலைகளைக் காப்பாற்ற எண்ணிய மக்கள் அவற்றைப் போர்த்துக்கேயரின் கண்ணில் படாமலிருக்க அவற்றை மறைத்துவைக்கத் தலைப்பட்டனர். சிலர் அவற்றைக் கிணறு, குளம் முதலியவற்றில் போட்டு மறைத்தனர். சிலர் அவற்றைக் குழிதோண்டிப் புதைத்தனர். சாதகமான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை எடுத்து மீண்டும் கோயில்களில் நிலைப்படுத்தவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்திருக்கும். ஆனால், இவ்வாறான நிலை விரைவில் ஏற்படாததால் மறைத்து வைத்தவர்கள் இறந்துபோக இச்சிலைகள் மறைக்கப்பட்ட இடங்கள் மறக்கப்பட்டுவிட்டன.
கண்டுபிடிப்புக்கள்
தொகு20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதித் தொடக்கத்தில், 1957ல் முதல் தொகுதிச் சிலைகள் நல்லூரிலுள்ள பூதராயர் குளத்தை ஆழமாக்கியபோது கிடைத்தன. 1979ல் யாழ்ப்பாணம் முசுலிம் வட்டாரத்தில் உள்ள கமால் வீதியில் வீடுகட்ட அத்திவாரம் வெட்டியபோது இரண்டு சிலைகள் கிடைத்தன. இதுபோல, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட யமுனா ஏரி அல்லது யமுனாரி எனப்படும் கேணியை ஆழமாக்கியபோது மரத்தாலான சிலையொன்று கிடைத்தது.
விபரங்கள்
தொகு- பூதவராயர் குளத்தில் கிடைத்தவை
- சனீசுவரன் சிற்பம் - கல் - கிபி 10 - 12 நூ.ஆ.
- தட்சிணாமூர்த்தி சிற்பம் - கல் - கிபி 10 - 12 நூ.ஆ.
- விநாயகர் சிற்பம் - கல் - கிபி 14ம் நூ. ஆ.
- தண்டேசுவரர் சிற்பம் - கல் - கிபி 14ம் நூ. ஆ.
- கஜலட்சுமி சிற்பம் - கல் - கிபி 14 - 16 நூ. ஆ.
- வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் - கல் - கிபி 15 - 16 நூ. ஆ.
- கமால் வீதியில் கிடைத்தவை
- சண்டேசுவரர் சிற்பம் - கல் - கிபி 10 - 12 நூ.ஆ.
- மகிசாசுரமர்த்தனி சிற்பம் - செப்பு - கிபி 14 - 16 நூ. ஆ.
- யமுனாரியில் கிடைத்தது
- அம்மன் சிலை - மரம் - பிற்பட்டது
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- கிருஷ்ணராஜா, செல்லையா., சிற்பக்கலைமரபுகள் மற்றும் குளங்களின் பெயர்களினூடாக அறியப்படும் நல்லூரின் பண்பாடு, சிங்கை ஆரம் பிரதேச மலர், நல்லூர்ப் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை, நல்லூர், 2015.