குடிவழக்கு

ஒரு சமுதாயத்தில் உள்ள பொதுமைத் தன்மை கொண்ட நடத்தைகள் குடிவழக்குகள் (folkways) எனப்படுகின்றன. இது பழக்கத்தால் வருவதும், இயல்பாக வெளிப்படுவதுமாக இருப்பதுடன், சிந்திக்காமல் நிகழக்கூடியது. குடிவழக்கு குறித்த சமுதாய மக்களுக்கு உரிய பாங்காகக் காணப்படுவது. குறித்த சமுதாய வரம்புக்கு உள்ளேயே பலவாறாகக் காணப்படும் வழக்கம் (custom), பழக்கம் (habbit) போன்றவற்றிலிருந்து குடிவழக்கு வேறானது. இது சமுதாயத்தின் அனைத்துப் பரப்பிலும் பரவலாகக் காணப்படுவதாகும். கைகூப்பி வணங்கி வரவேற்றல், மூன்று வேளை உணவு உண்ணல், காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் போன்றவை குடிவழக்குகளைச் சார்ந்தவை.[1]

இது தொடர்பான இன்னொரு கருத்துரு வழக்கடிபாடு (mores). இது ஒரு பரந்த பகுதியில் அல்லது சமுதாயத்தில் எல்லா மக்களிடமும் காணப்படுவதுடன், பெரிய அளவில் ஒழுக்கம் சார்ந்த முக்கியத்துவமும் கொண்டது. இது தகாப் புணர்ச்சி, இயற்கைக்கு மாறான பாலுறவு போன்ற விலக்குகள் தொடர்பில் வெறுப்புக் கொண்டதாகவும் உள்ளது.[2] இதன் விளைவாகச் சமூகத்தின் விழுமியங்களும், வழக்கடிபாடுகளும், இத்தகைய விலக்குகளுக்குத் தடை விதிக்கின்றன.

வழக்கடிபாடு சரி, பிழை; நியாயம், அநியாயம் என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பது. இதற்கு மாறாக, குடிவழக்கு, சரி என்பதற்கும், மரியாதைக் குறைவானது என்பதற்கும் இடையே வேறுபாடு காண்கிறது.[2]

குறிப்புகள்

தொகு
  1. பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003. பக். 161, 162.
  2. 2.0 2.1 Macionis and Gerber, Sociology 7th ed. (Pearson Canada 2010), p. 65.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிவழக்கு&oldid=1661200" இலிருந்து மீள்விக்கப்பட்டது