மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, நம்பிக்கை, கருத்து, எண்ணம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம்.

விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம்.

  1. தனி மனித விழுமியங்கள்
  2. பண்பாட்டு விழுமியங்கள்

தனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம்.

ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற ஆக்கங்களிலும், பழமொழிகளிலும் தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுமியம்&oldid=2252442" இலிருந்து மீள்விக்கப்பட்டது