ஆத்திசூடி

ஔவையார் இயற்றிய தமிழ் நீதிநூல்

ஆத்திசூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.[1][2]

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

நூல்

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையைச் சூடி-அணிந்து கொண்டு அமர்ந்த- வீற்று இருக்கின்ற

தேவனை- கடவுளை (மத வேறுபாடு இன்றி ) ஏத்தி ஏத்தித்- (மனம்)வாழ்த்தி (மொழி)வாழ்த்தி
தொழுவோம்-(மெய்)வணங்குவோம் யாமே-நாமே.

உயிர் வருக்கம்

1.அறம் செய விரும்பு

அறம் – (விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது) செய – செய்வதற்கு,
விரும்பு – நீ ஆசைப்படு.
  • தருமம் செய்ய நீ விரும்புவாயாக
  • நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

2. ஆறுவது சினம்

ஆறுவது- தவிர்க்க வேண்டியது,
சினம் - கோபம்.
  • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
  • கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல.

3. இயல்வது கரவேல்

இயல்வது - நம்மால் முடிந்ததைக் கொடுப்பதற்கு
கரவேல் -  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
  • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
விலக்கேல் - நீ தடுக்காதே
  • ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5. உடையது விளம்பேல்

உடையது - உனக்கு உள்ள பொருளை
விளம்பேல் - நீ பிறர் அறியும்படி  சொல்லாதே
  • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.
  • உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.
  • உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

6. ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியைக்
கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.
  • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

எண் – கணித நூலையும்
எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்
  • எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.
  • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து
உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.
  • யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு – உலக போக்கிற்கு ஏற்றவாறு;
ஒழுகு – நட
  • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவதை ஒழியேல்

ஓதுவது – கற்பது
ஒழியேல் – விட்டு விடாதே
  • நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. கற்றுக்கொள்வதை நிறுத்தாதே.

12. ஔவியம் பேசேல்

ஔவியம் – பொறாமை
பேசேல் - பேசாதே
  • ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்

அஃகம்- தானியங்கள்
சுருக்கேல்- அளவில் குறைக்காதே
  • அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டு ஒன்று சொல்லேல்.


கண்ணாற் கண்டதற்கு மாறாகப் (பொய் சாட்சி) சொல்லாதே.

15. ஙப் போல் வளை.


'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும்.

  • "ங" என்னும் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும்.
  • அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16. சனி நீராடு.

  • சனி(குளிர்ந்த) நீராடு.

17. ஞயம்பட உரை.


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாகக் கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு.


ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு

அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்.


உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21. நன்றி மறவேல்.


ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்.


எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே

லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24. இயல்பு அலாதன செய்யேல்.


நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25. அரவம் ஆடேல்.


பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.

26. இலவம் பஞ்சில் துயில்.
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27. வஞ்சகம் பேசேல்.


கபடச்(உண்மைக்குப் புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே

28. அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களைச் செய்யாதே

29. இளமையில் கல்.


இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் (இலக்கணத்தையும் கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30. அரனை மறவேல்.


கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31. அனந்தம் ஆடேல்.


கடல் நீரில் விளையாடுவது துன்பம் தரும்

மிகுதியாகத் தூங்காதே

ககர வருக்கம்

32. கடிவது மற

  • யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33. காப்பது விரதம்

  • தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
  • பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

  • உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை அகற்று

  • இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்

  • நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்

  • நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே

38. கெடுப்பது ஒழி

  • பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.

39. கேள்வி முயல்

  • கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்

  • உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்

  • பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி

  • குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43. கௌவை அகற்று

  • வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்

  • தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45. சான்றோர் இனத்து, இரு

  • அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்

  • பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்

  • புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

  • கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர்

49. சூது விரும்பேல்

  • ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்

  • செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51. சேரிடம் அறிந்து சேர்

  • நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சை, எனத் திரியேல்

  • பெரியோர் 'சீ' என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே

53. சொல், சோர்வு படேல்

  • பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்

  • முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி

  • பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு

  • யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்

  • நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்

58. தீவினை அகற்று

  • பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற்கு இடங் கொடேல்

  • முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினை செய்

  • ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்

61. தெய்வம் இகழேல்

  • கடவுளைப் பழிக்காதே.

62. தேசத்தோடு, ஒத்து வாழ்

  • உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல் சொல், கேளேல்

  • மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்

  • பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டுக் கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. தோற்பன தொடரேல்

  • ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி

  • நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடு ஒப்பன செய்

  • நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்

68. நிலையில் பிரியேல்

  • உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்

  • வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்

  • நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல் பல கல்

  • அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72. நெற்பயிர் விளை

  • நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட ஒழுகு

  • ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்

  • பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்

  • பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கு இடங் கொடேல்

  • மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

  • பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

  • பாம்புபோலக் கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

  • குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

80. பீடு பெற நில்

  • பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

  • உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ்

82. பூமி திருத்தி உண்

  • விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக் கொள்

  • அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை அகற்று

  • அறியாமையைப் போக்கு

85. பையலோடு இணங்கேல்

  • அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருள் தனைப் போற்றி வாழ்

  • பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்

  • யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்

  • எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக்கு இடங்கொடேல்

  • பகைவன் உன்னைத் துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

  • சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்

  • மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனை முகத்து நில்லேல்

  • எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகப் போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோடு இணங்கேல்

  • மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லி நல்லாள் தோள்சேர்

  • பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொல் கேள்

  • நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மை விழியார் மனை அகல்

  • விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவது அற மொழி

[மொழிவது = பேசுவது]
  • சொல்லப்படும் பொருளைச் சந்தேகம் நீங்கும்படி சொல்
  • பேசுவதைத் தெளிவாகப் பேசு
  • சொல்வதற்கு முன், இதைச் சொல்ல வேண்டுமா? என்று ஆராய்ந்து, பின் சொல்க
  • எதைச் சொல்ல/பேச வேண்டும்?
  • எப்பொழுது சொல்ல/பேச வேண்டும்?
  • எதைச் சொல்லக்/பேசக் கூடாது?
  • எப்பொழுது சொல்லக்/பேசக் கூடாது?
  • எப்படிச் சொல்ல வேண்டும்?
  • எப்படிச் சொல்லக் கூடாது?

98. மோகத்தை முனி

  • நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்

  • உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாது முற்கூறேல்

  • முந்திக்கொண்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு

  • கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெற நில்

  • முக்தியை பெறுவதற்கான சன்மார்க்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு

  • உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடி வாழ்

  • ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. வெட்டெனப் பேசேல்

  • யாருடனும் கடினமாகப் பேசாதே

106. வேண்டி வினை செயேல்

  • வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு

  • விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு
  • நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்

  • பகைவர்களை நம்பாதே

109. ஓரஞ் சொல்லேல்

  • நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது
  • அடுத்தவரைப் பற்றிப் புறம் (தவறாகப்) பேசக் கூடாது
  • எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
  • திருக்குறள் அதிகாரம் 19 - புறங்கூறாமை

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "TamilVirtualUniversity".
  2. "தையல் மொழி கேளேல் என்றால் என்ன பொருள்? சொல்லுங்கய்யா சொல்லுங்கம்மா சொல்லுங்க".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி&oldid=4141596" இலிருந்து மீள்விக்கப்பட்டது