குட்டிக் கடற்கன்னி (சிலை)

குட்டிக் கடற்கன்னி என்னும் செப்புச் சிலை, டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் துறைமுகத்தின் அருகே கடலுக்குள் ஒரு பாறையின் மீது எழுப்பப்பட்டுள்ள கடற்கன்னி சிலை ஆகும்.[1][2]

கோப்பன்ஹாகனின் அமைந்துள்ள குட்டிக் கடற்கன்னி சிலையைத் தழுவி உருவாக்கப்பட்ட "நனைந்த உடையில் பெண்" என்னும் இச்சிலை கானடா நாட்டு வான்கூவர் நகரில் எழுப்பப்பட்டுள்ளது

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் என்னும் டேனிய எழுத்தாளர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகளில் ஒன்றாகிய "குட்டிக் கடற்கன்னி" (The Little Mermaid; டேனியம்: Den lille havfrue) என்னும் புனைகதையில் வருகின்ற கடற்கன்னியை உருவகிக்கும் வகையில் இச்சிலை அமைந்துள்ளது.[3][4]

இச்சிலை 1913ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23ஆம் நாள் நிறுவப்பட்டதன் நூறாம் ஆண்டு நினைவாக டென்மார்க் நாட்டிலும், உலகின் வேறு பல இடங்களிலும் சிறப்புக் கொண்டாட்டங்கள் நிகழவிருக்கின்றன.

சிலையின் அமைவிடம்

தொகு

கோப்பன்ஹேகன் நகரக் கடற்கரையான "லாங்கலீனி" (Langelinie) பகுதியில் ஒரு பாறைமேல் இச்சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதன் உயரம் 1.25 மீட்டர் (4.1 அடி). இதன் எடை 175 கிலோகிராம் (385 பவுண்டு).

சிலையின் வரலாறு

தொகு

குட்டிக் கடற்கன்னி என்னும் இச்சிலையை உருவாக்குவதற்கான செலவுகளை ஏற்று, கார்ல் யாக்கப்சன் (Carl Jacobsen) என்பவர் எட்வர்ட் எரிக்சன் (Edvard Eriksen) என்னும் சிற்பியிடம் வேலையை ஒப்படைத்தார்.[5] மிகுதியான செல்வம் படைத்த கார்ல் யாக்கப்சன் என்பவரின் தந்தை டென்மார்க்கில் பேர்போன பியர் உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார்.

கார்ல் யாக்கப்சன் ஒருநாள் கோப்பன்ஹேகன் அரசு நாடக மேடையில் நடித்துக்காட்டப்பட்ட "குட்டிக் கடற்கன்னி" நாடகத்தால் மிகவும் கவரப்பட்டார். குறிப்பாக, கடற்கன்னியாக நடித்து மிக அழகாக நடனமாடிய எல்லென் ப்ரைசு (Ellen Price) என்பவரின் நடிப்பு அவருக்குப் பிடித்துப்போனது. உடனே அவர், எல்லென் ப்ரைசை அணுகி, அவர் கடற்கன்னி சிலைக்கு முன்னுருவாக நிலைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அச்சிலை நிர்வாணமாக இருக்கப்போகிறது என்று அறிந்ததும் எல்லென் ப்ரைசு முன்னுருவாக நிலைகொடுக்க விரும்பவில்லை. எனவே அவருடைய முகச் சாயல் மட்டுமே கடற்கன்னி சிலையில் வடிக்கப்பட்டது. ஆனால் எட்வர்ட் எரிக்சனின் மனைவி எலீன் எரிக்சன் என்பவர், தம் உடலை முன்னுருவாகக் கொண்டு கடற்கன்னி சிலை வடிக்கப்படுவதற்கு முன்வந்தார்.[5]

உலகக் கண்காட்சி 2010இல் கடற்கன்னி

தொகு

2010, மே முதல் அக்டோபர் வரை சீனாவின் சாங்காய் நகரில் உலகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போது டென்மார்க் திடலின் பகுதியாக குட்டிக் கடற்கன்னி சிலை கோப்பன்ஹேகனிலிருந்து சாங்காய் கொண்டுபோகப்பட்டு அங்கு காட்சியாக்கப்பட்டது. இதுவே முதன்முறையாக குட்டிக் கடற்கன்னி சிலை அதன் வைப்பிடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேற்றிடம் கொண்டுபோகப்பட்டது ஆகும்.[6][2]

சிலை சிதைக்கப்பட்டது

தொகு

குட்டிக் கடற்கன்னி என்னும் சிலை பலதடவைகள், குறிப்பாக 1960களுக்குப் பிறகு சிதைவுண்டது. ஆனால் உடனடியாகவே சீர்திருத்தி அமைக்கப்பட்டது.

இச்சிலை கோப்பன்ஹேகன் துறைமுகத்துக்கு அருகில் ஒரு பாறையில் அமைந்திருப்பதாலும், சுற்றுலாப் பார்வையாளர்கள் அச்சிலையை எளிதில் அடைந்து அதன்மேல் ஏறிவிடுவதாலும், விசமிகள் அதைச் சேதப்படுத்துவதாலும் அச்சிலையைக் கடலுக்குள் வெகுதூரத்தில் கொண்டு வைக்கலாமா என்றும் கோப்பன்ஹேகன் நகர அதிகாரிகள் 2006இல் எண்ணியதுண்டு.[7]

அரசியல் சார்புகொண்ட சில கலைஞர்கள், 1964, ஏப்ரல் 24ஆம் நாள் குட்டிக் கடற்கன்னி சிலையின் தலையைத் துண்டித்துக் களவாடிவிட்டனர். சிலையின் தலையைக் கண்டுபிடிக்க முடியாததால் வேறொரு தலை வார்க்கப்பட்டு சிலையில் பொருத்தப்பட்டது.

1984, சூலை 22ஆம் நாள் கடற்கன்னியின் வலது கையை யாரோ துண்டித்துவிட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் இரு இளைஞர்கள் அதைத் திருப்பிக் கொடுத்தனர்.[8]

1990இல் யாரோ கடற்கன்னியின் தலையை வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர். அதனால் சிலையின் கழுத்தில் 18 செ.மீ. ஆழத்தில் ஒரு வெட்டுத் தழும்பு ஏற்பட்டது.

1998, சனவரி 6ஆம் நாள் சிலையின் தலை மீண்டுமொருமுறை கொய்துவிடப்பட்டது. [8][9] விசமிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பெயர்தெரிவிக்கப்படாத ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் அதைத் திருப்பிக் கொடுத்தார். அத்தலையை பெப்ருவரி 4ஆம் நாள் மீண்டும் சிலைமீது பொருத்தினார்கள்.

கடலில் மூழ்கிய கடற்கன்னி

தொகு

2003, செப்டம்பர் 10ஆம் நாள் கடற்கன்னி சிலை எழுப்பப்பட்டிருந்த பாறையில் யாரோ வெடிமருந்து இட்டு வெடித்ததில் சிலை அடித்தளத்திலிருந்து பெயர்ந்துவிழுந்தது. பின்னர் துறைமுகத்தில் கடல்நீருக்குள் இருந்து சிலை மீட்கப்பட்டது. சிலையின் முழங்கால் பகுதியிலும் கைமூட்டுப் பகுதியிலும் துளைகள் தோன்றியிருந்தன.[10]

பிற விசமத்தனங்கள்

தொகு

2004இல் துருக்கி நாடு ஐரோப்பிய ஒன்றியத்தோடு சேர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிலர் கடற்கன்னி சிலையை முசுலிம் பெண்களின் முக்காடு கொண்டு போர்த்திவிட்டனர்.[11]

அதுபோலவே 2007 மே மாதத்தில் சில விசமிகள் கடற்கன்னி சிலைக்கு முசுலிம் பெண்களின் ஆடையும் தலை முக்காடும் அணிவித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.[12]

1963இல் ஒருதடவையும், 2007 மார்ச்சு மற்றும் மே மாதங்களிலும் சிலர் கடற்கன்னி சிலைமீது சாயம் பூசி விசம வேலை செய்துவிட்டனர்.[13][8]

கடற்கன்னி சிலையின் பிற படிகள்

தொகு

டெர் ஸ்பீகல் (Der Spiegel) என்னும் செருமானிய இதழ் தரும் செய்திப்படி, கோப்பன்ஹேகன் துறைமுகத்தில் பாறைமீது வைக்கப்பட்டுள்ள கடற்கன்னி சிலை சிற்பி வடித்த அசல் சிலை அல்ல, மாறாக அதன் பிரதி மட்டுமே. அசல் சிலை, அதை உருவாக்கிய சிற்பியின் வாரிசுகளின் கைவசமே அடையாளம் காட்டப்படாத ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.[14]

கடற்கன்னி சிலையின் 12 பிரதிகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன என்று கூறப்படுகிறது.[15]அவை: கலிபோர்னியாவின் சோல்வாங் நகரம்; அயோவாவின் கிம்பால்டன் நகரம்[16]ருமேனியாவின் பியேட்ரா நியுமா நகரம்;[16]கானடாவின் கால்கரியில் ஓர் அரைவடிவ கடற்கன்னி பிரதி.[17]மேலும் டேனிய-அமெரிக்க நடிகரான விக்டர் போர்கெ என்பவரின் கல்லறையிலும் கடற்கன்னி சிலையின் பிரதி வைக்கப்பட்டுள்ளது.[16]

கடற்கன்னி சிலை பற்றிய உரிமைப் பிரச்சினைகள்

தொகு

கடற்கன்னி சிலையின் பிரதிகள் மற்றும் படிமங்கள் அச்சிலையை உருவாக்கிய எரிக்சனின் குடும்பத்தாருக்கே உரிமையாக உள்ளன. சிற்பி இறந்த ஆண்டிலிருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (2019) அது பொது உரிமையாகக் கருதப்படும்.[16]. இணையத்தளத்தில் கடற்கன்னி சிலையின் பிரதிகளை வாங்கவேண்டும் என்றால் எரிக்சன் குடும்பத்தின் இசைவு வேண்டும்.[18]

நாட்டு அடையாளச் சிலை

தொகு

குட்டிக் கடற்கன்னி சிலை டென்மார்க் நாட்டையும், குறிப்பாக கோப்பன்ஹேகன் நகரத்தையும் அடையாளம் காட்டுகின்ற சின்னமாக உள்ளது. எனவே, அது அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. Little Mermaid Copenhagen - denmark.net. Retrieved 29 January 2012.
  2. 2.0 2.1 "Travelling Little Mermaid to resurface in Copenhagen by video". The Independent. Agence France-Presse. 30 April 2010. http://www.independent.co.uk/arts-entertainment/art/travelling-little-mermaid-to-resurface-in-copenhagen-by-video-1959207.html. பார்த்த நாள்: 30 December 2012. 
  3. குட்டிக் கடற்கன்னி கதை - ஆன்டர்சன் எழுதியது
  4. குட்டிக் கடற்கன்னி கதை - ஆங்கிலத்தில்
  5. 5.0 5.1 "The Little Mermaid statue in Copenhagen Harbor". Copenhagen Pictures. Archived from the original on 1999-11-28. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.
  6. "Maid in China" (in English). Jyllands-Posten. The Copenhagen Post. 11 September 2008 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131015022356/http://jyllands-posten.dk/uknews/article1434938.ece. பார்த்த நாள்: 31 December 2012. 
  7. "Denmark may move Little Mermaid". BBC News. 30 March 2006. பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.
  8. 8.0 8.1 8.2 Den Lille Havfrue reddet fra gramsende turister பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம் (in Danish). Jyllands-Posten. Published 1 August 2007. Retrieved 1 February 2012.
  9. "Feminists claim responsibility for statue attack". BBC News. http://news.bbc.co.uk/2/hi/europe/45721.stm. பார்த்த நாள்: 2010-05-25. 
  10. Little Mermaid's unexpected swim, BBC News, 12 September 2003
  11. Darin, Johan (20 May 2007). ""Den lilla sjöjungfrun" kläddes i burka" (in Swedish). Kvällsposten. http://www.expressen.se/kvp/den-lilla-sjojungfrun-kladdes-i-burka/. பார்த்த நாள்: 31 December 2012. 
  12. Danish Mermaid Statue Given a Headscarf பரணிடப்பட்டது 2014-04-16 at the வந்தவழி இயந்திரம், Associated Press, 21 May 2007
  13. Little Mermaid statue vandalized. - Yahoo! News. Archived copy from 12 July, 2007. Retrieved 30 March, 2012.
  14. German article at Spiegel online about the statue's upcoming 95th anniversary
  15. http://mermaidsofearth.com/mermaid-statues-mermaid-sculptures/public/the-little-mermaid-statue-copenhagen/
  16. 16.0 16.1 16.2 16.3 "In a Mermaid Statue, DanTimothy". The Wall Street Journal (Dow Jones & Company). July 27, 2009 இம் மூலத்தில் இருந்து ஜூலை 27, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5iZbZU3o9?url=http://online.wsj.com/article/SB124865622123982685.html#mod=rss_whats_news_us. பார்த்த நாள்: 2009-07-27. 
  17. The Little Mermaid பரணிடப்பட்டது 2012-04-10 at the வந்தவழி இயந்திரம் - Downtown Public Art Circuit tour - The City of Calgary. Retrieved 11 February 2012.
  18. "Products and prices". The Little Mermaid. The Partnership of Sculptor Edvard Eriksen's Heirs. பார்க்கப்பட்ட நாள் 11 February 2012.

வெளி இணைப்புகள்

தொகு