குமிட்டிபதி பாறை ஓவியங்கள்

குமிட்டிபதி பாறை ஓவியங்கள் என்பன, தமிழ் நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், குமிட்டிபதி கிராமத்தில் அமைந்துள்ள பதிமலை பாறைக் குன்றின் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகளில் உள்ள பாறைகளில் தீட்டப்பட்ட ஓவியங்களைக் குறிக்கும். 'வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட இனக்குழு மனிதர்கள்' வாழ்ந்த இந்த குகைத்தளத்தில், வெண்மை நிற பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன'.[1] இந்த ஓவியங்கள் 3,000 முதல் 4,000 ஆண்டுகள் பழமையானவை என இந்திய தொல்லியல் துறையால் சான்றளிக்கப்பட்ள்ளதாக தமிழ்நாடு கலை மற்றும் இலக்கிய சங்கத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளார். [2].

அமைவிடம்

தொகு

குமிட்டிபதி பாறை ஓவியங்கள் தமிழ்நாடு மாநிலம், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், குமிட்டிபதி கிராமத்தின் அருகே அமைந்துள்ள பதிமலை குன்றில் முருகன் கோயில் உள்ளது. பதிமலை பாறைக் குன்றின் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. இந்தக் குகைகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள இரண்டு குகைகளில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் (white ochre rock art paintings) காணப்படுகின்றன. 4 அடி அகலம், 2 அடி உயரத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. [3]

இந்தக்கிராமத்தின் அருகே வேலந்தாவளம் என்ற ஊர் உள்ளது. வேழம் என்பது யானையையும், தாவளம் என்பது சந்தையையும் குறிப்பதாக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். இவ்வூருக்கு அருகே அமைந்துள்ள மாவுத்தம்பதி என்ற கிராமத்தில் யானைப்பாகன்கள் (மாவுத்தன் = யானைப்பாகன்) வாழ்ந்திருக்கலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது.[3]

பாறை ஓவியங்கள்: விளக்கம்

தொகு

யானைக்கூட்டங்கள், யானையைக் கட்டுப்படுத்தும் பாகன், அலங்கரிக்கப்பட்ட கோவில் தேரினை இழுக்கும் மக்கள், படகு இழுக்கும் மனிதர்கள், மற்றும் மக்கள் குழு என பாறை இடுக்குகளில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[4]இந்த ஓவியங்களை இயற்கை பொருட்களை பயன்படுத்தி வரைந்துள்ளனர். எனவே காற்று மழை போன்ற பேரிடர்களைத் தாங்கி அழியாத வகையில் நிலைபெற்றுள்ளது.[3]

பாறை ஓவியங்கள் பாதுகாப்பு: மக்கள் கோரிக்கை

தொகு

குமிட்டிபதி கிராம மக்கள், பதிமலையில் உள்ள பழங்கால பாறை ஓவியங்களை, பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு விசமிகள் சேதப்படுத்தியுள்ளனர். எனவே இவற்றை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.[5][4][3]

தொல்லியல் துறை மூலம் பதிமலை பாறை குகை ஓவியங்களை பாதுகாப்பதற்கு கூடம் அமைக்கவும், நினைவுச்சின்னம் மற்றும் தூண் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். பதிமலை குகைப் பகுதி இருக்கும் நிலத்தை வருவாய்த்துறை மூலமாக பெற்ற பிறகே பாதுகாப்பு பணிகளைத் தொடங்க இயலும் என்றும் கூறியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்: கலை இலக்கிய அமைப்பினர் மனு தினமலர் ஜூலை 03, 2019
  2. Ancient cave paintings in dist face destruction Pratiksha Ramkumar The Times of India. July 2, 2019
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 பதிமலை, கோவனூரில் 3 ஆயிரம் ஆண்டு குகை ஓவியத்திற்கு பாதுகாப்பு கூடம் அமைக்க திட்டம் பரணிடப்பட்டது 2019-08-03 at the வந்தவழி இயந்திரம் தினகரன் 31 ஜூலை 2019
  4. 4.0 4.1 வியக்க வைக்கும் பாறை ஓவியங்கள்: பாதுகாக்க வலியுறுத்தல் இந்து தமிழ் திசை 03 ஜூலை, 2019
  5. Kumittipathi villagers want vandalised 2,000-yr-old Pathimalai cave paintings restored The Indian Express 10th February 2020