குமிழித் தூம்பு மதகு

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரைப் பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைத்த ஓர் அமைப்பு ஆகும்.[1] இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கற்பெட்டி போன்று அமைத்திருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை சேறோடி என்பர். ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும்வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும் சேறோடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும்.[2] சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாகக் கல் மண்டபங்கள் அமைத்திருப்பர்.

கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர், ராமநாயக்கன் ஏரியில் குமுழித் தூம்பு உள்ள இடத்தில் அமைத்துள்ள கல் மண்டபம்.

மேற்கோள்கள்

தொகு
  1. குடவாயில் பாலசுப்பிரமணியன் (12 அக்டோபர் 2009). "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. குள. சண்முகசுந்தரம் (16 சூலை 1015). "அலையடித்த ஏரியில் புழுதிப் புயல் வீசும் பரிதாபம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமிழித்_தூம்பு_மதகு&oldid=3978301" இலிருந்து மீள்விக்கப்பட்டது