குயவர் என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார்.

இந்தியாவின் பெங்களூரில் வேலைசெய்யும் குயவர் ஒருவர்

குயவர், குலாலர், குலால கோலப்பர், வேளார், சேரமா, செட்டி, பூசாரி,பண்டுரை, பாண்ட, பாண்டிய, தெங்கரை, தெலுங்கு மானுடை,மண்உடையார், பாட்டுக்காரர், ஓசிரையர், சாலியர், சோலியர், மண்ணையர் எனப் பல்வேறு இனக்குழுப் பெயராலும், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திருவிட மொழிகளாலும், பூர்வீக நிலவாழ்வினாலும் பல்வேறு துணைப் பிரிவினராக அறியப்படும் குயவர்கள் அன்றைய காலத்தில் சமூக மதிப்பீட்டில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு, இலக்கியப் பதிவுகளின் மூலம் புலப்படுகின்றன.

தென்னாற்காட்டின் திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவி அளித்த தானங்களை, ‘கலங்களும் மற்றுஞ் சால்களும் குடங்களும் பெருந் திருவமுதுக்கு பானைகளும் சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும் இடும் குசவன்’ என்று கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குயவர்கள் மட்பாண்டத் தயாரிப்போடு அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டார்கள். மண்ணே மூலப்பொருள் எனும்போது சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் நன்னீர் ஆதாரத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே குடில் அமைத்துத் தங்கினார்கள். சிற்றூர் பேரூர் என அவர்கள் வியாபாரம் செய்த ஊர்களின் விளைச்சல் பொருட்களை மாற்றாகப் பெற்றுக் கொண்டார்கள். ‘பண்டமாற்று’ என்ற வழக்குச்சொல் அவர்களின் தொழில் முறையிலிருந்து உருவானது.

சங்க, புராண இலக்கியங்களில், கலம்செய்கேரி, மண்ணுடையார், மண்ணீட்டாளர், மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ, வேட்கோவர் என்றெல்லாம் தொழில்முறையாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் கோயில் பணியாளர்களாக, பாதுகாவலர்களாக பூசகர் மரபினராக இருந்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலியின் மேலகரம், திருச்சியின் காட்டகரம், தென் ஆற்காட்டின் புத்தகரம், வட ஆற்காட்டின் கோட்டகரம், மாயவரத்தின் அகரங்கிரங்குடி சென்னை திருவத்தியூரின் அகரம் கண்ட கோபாலபுரம் ஆகிய ஊர்கள் குயவர்குடிகளாக அடையாளப்படுத்தமுடியும்.

மேற்கோள்கள்

மண்கலைஞர்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயவர்&oldid=3305038" இலிருந்து மீள்விக்கப்பட்டது