குருவிநாயனபள்ளி பாறை ஓவியங்கள்

குருவிநாயனபள்ளி பாறை ஓவியங்கள், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் கிருட்டிணகிரியில் இருந்து ஏறத்தாழ 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருவிநாயனப்பள்ளி என்னும் ஊருக்கு மேற்கில் காட்டுப்பகுதியில் காணப்படும் பெருங்கற்காலக் கல்திட்டையொன்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும்.[1] ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களில், கோட்டுருவமாக வரையப்பட்ட நான்கு மனித உருவங்களும், ஒரு சிறிய விலங்கு உருவமும் காணப்படுகின்றன. இவற்றைவிடக் கட்டங்களாக அமைந்த இரண்டு குறியீடுகளும் உள்ளன. இவற்றில் ஒன்று நான்கு கிடைக் கோடுகளையும், ஐந்து நிலைக்குத்துக் கோடுகளையும் கொண்டு 12 கட்டங்கள் உருவாகும்படி வரையப்பட்டுள்ளது. நிலைக்குத்துக் கோடுகளுள் நடுவில் உள்ள மூன்று கோடுகள் மேல்நோக்கி நீட்டப்பட்டு அம்புத்தலைகள் வரையப்பட்டுள்ளன. மற்றக் குறியீட்டில் மூன்று நிலைக்குத்துக் கோடுகளும், இரண்டு கிடைக் கோடுகளும் இரண்டு கட்டங்களை உருவாக்குகின்றன. நிலைக்குத்துக் கோடுகள் மூன்றும் மேலும் கீழும் கிடைக்கோடுகளைத் தாண்டி நீட்டப்பட்டுள்ளன. இக்குறியீட்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.[2]

இந்தக் குறியீடுகள் முன்னோர்களின் ஆவிகளுக்குப் படையல் வைத்து வழிபடும் ஒரு சடங்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்று இராசு பவுன்துரை கருதுகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. துரைசாமி, ப., மதிவாணன், இரா., 2010, பக். 83
  2. பவுன்துரை, இராசு., 2001, பக். 114
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 115

உசாத்துணைகள்

தொகு
  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.

இவற்றையும் பார்க்கவும்

தொகு