குறும்பியன்
குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார்.[1] இவன் 'வளங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்' எனப் போற்றப்பட்டுள்ளான். இவனது படைத்தலைவன் திதியன்.
அன்னி மிஞிலி என்பவள் கோசர்குடிப் பெண். இவளது தந்தை வயலை உழுதபின் உழுத எருதுகளை மேய விட்டிருந்தான். உழுத களைப்பால் அவன் சற்றே அயர்ந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் மாடுகள் அருகிலிருந்த பசுமையான வரகுப் பயிர்களை மேய்ந்துவிட்டன. வயல்காரன் ஊர் முது கோசர்களிடம் முறையிட்டான். ஊர் முது கோசர் அன்னி மிஞிலியின் தந்தையை நன்றாக அடித்தனர். அத்துடன் விடாமல், மாடுகள் மேயப் பார்த்துக்கொண்டிருந்தான் எனத் தீர்மானித்து, அவனது இரண்டு கண்களையும் தோண்டிவிட்டனர்.
தந்தைக்கு இழைத்த கொடுமையைப் பொறாத மகள் இந்தக் குறும்பியனிடம் முறையிட்டாள். குறும்பியன் தன் படைத்தலைவன் திதியனை அனுப்பிக் கோசர் கொட்டத்தை அடக்கினான்.
அடிக்குறிப்பு
தொகு- ↑
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் (அகநானூறு 262)