குற்றகலப் பாதை
குற்றகல இருப்புப் பாதை (narrow gauge railroad) என்பது தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தொலைவு சீர்தர அகலமான 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) விடக் குறைவான அகலத்தைக் கொண்டுள்ள இருப்புப்பாதை ஆகும். இயக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான குற்றகலப் பாதைகள் 2 அடி (610 மிமீ)க்கும் 3 அடி 6 அங் (1,067 மிமீ)க்கும் இடையேயான அகலத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) அகலமுள்ள குற்றகலப் பாதைகள் 9442 கிமீ தொலைவிற்கு உள்ளன. இவை மீட்டர் அகலப் பாதை என அழைக்கப்படுகின்றன. 2 அடி 6 அங் (762 மிமீ) அகலப் பாதைகளும் 2 அடி (610மிமீ) அகலப் பாதைகளும் இயக்கத்தில் உள்ளன. இவையே இந்தியாவில் குற்றகலப் பாதைகள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் மலை அல்லது காட்டுப் பகுதிகளில் இயங்குகின்றன. மார்ச்சு 2008 ஆண்டில் 2479 கிமீ தொலைவிற்கு இவ்வகை இருப்புப் பாதைகள் இயக்கத்தில் இருந்தன.