குழாயி அல்லது உறிஞ்சுக் குழாய், குமிழ்கூர்குழாய் என்பது குறிப்பிட்ட கனவளவு கொண்ட நீர்மத்தை (திரவம்) ஓரிடத்திலிருந்து எடுத்து இன்னோரிடத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் ஆய்வுகூடக் கருவியாகும். குழாயிகள், வேதியியல், மூலக்கூற்று உயிரியல், உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகள் சார்ந்த ஆய்வுகூடங்களிலும், மருத்துவச் சோதனைகளிலும் பயன்படுகின்றன. குழாயிகள் பல்வேறு தேவைகளுக்காக, வெவ்வேறு வடிவமைப்புக்களில் கிடைக்கின்றன. பல மட்டங்களிலான துல்லியங்களுடன்கூடிய இவை, தனியொரு கண்ணாடிக் குழாய் வடிவிலிருந்து, சிக்கலான அமைப்புக்களுடன்கூடிய மற்றும் மின்னணுக் குழாயிகள் வரை உள்ளன. நீர்மம் கொள்ளும் இடத்துக்கு மேல் வெற்றிடத்தை உருவாக்குவதன் மூலம் நீர்மத்தை உள்ளே இழுத்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளியை உள்ளே விடுவதன்மூலம் தேவையான அளவு நீர்மம் எடுப்பதே குழாயியின் செயற்பாட்டின் அடிப்படையாகும். 0.2 தொடக்கம் 1000 மைக்குரோ லீட்டர் வரை அளவுள்ள நீர்மங்களைக் கையாளுவதற்கான குழாயிகள் நுண்குழாயிகள் (micropipettes) எனப்படுகின்றன.

குழாயி

கண்ணாடிக் குழாயிகள்

தொகு
 
20 மில்லி லீட்டர் குமிழ்கூர்குழாய்

ஆரம்பத்தில் குழாயிகள் கண்ணாடியாலேயே செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் வேதியியல் ஆய்வுகூடங்களில் நீர்க் கரைசல்களைக் கையாளுவதற்கே பயன்பட்டன. இத்தகைய குழாயிகள் இரண்டு வகையாக உள்ளன. ஒரு வகை நீண்ட மெல்லிய கண்ணாடிக் குழாயின் இடையில் ஒரு பெரிய குமிழ் போன்ற பகுதியைக் கொண்டது. நீளமான குழாய் போன்ற அமைப்பை உடைய மற்றவகைக் குழாயியில் அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். முதல் வகை ஒரு குறிப்பிட்ட நிலையான அளவு கொண்ட நீர்மங்களை எடுப்பதற்கே பயன்படுகின்றன. பொதுவாக 10, 25, 50 மில்லி லீட்டர் ஆகிய கொள்ளளவுகளை உடையனவாகச் செய்யப்படுகின்றன. இரண்டாவது வகைக் குழாயிகளை வெவ்வேறு அளவுகளில் நீர்மங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தமுடியும். எனினும் ஒற்றைக் கனவளவுக் குழாயிகள் கூடிய துல்லியம் கொண்டவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழாயி&oldid=3502675" இலிருந்து மீள்விக்கப்பட்டது