குழித்துறை மறைமாவட்டம்
குழித்துறை மறைமாவட்டம் என்பது இந்தியாவில் தமிழகத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மறைத்தளம் ஆகும். இது கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மறைமாவட்டமாகத் திருத்தந்தை பிரான்சிசு அவர்களால் 2014, திசம்பர் 22ஆம் நாள் நிறுவப்பட்டது.
குழித்துறை மறைமாவட்டம் Kuzhithuraien(sis) குழித்துறை மறைமாவட்டம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | மதுரை உயர்மறைமாவட்டம் |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 915 km2 (353 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | 855,485 264,222 (30.9%) |
பங்குதளங்கள் | 100 |
விவரம் | |
வழிபாட்டு முறை | உரோமன் கத்தோலிக்கம் |
உருவாக்கம் | 22 திசம்பர் 2014 |
கதீட்ரல் | மூவொரு இறைவன் பேராலயம், திரித்துவபுரம் |
பாதுகாவலர் | புனித தேவசகாயம் பிள்ளை |
குருக்கள் | 131 |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் | மேதகு.ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் |
பேராயர் † | அந்தோணி பாப்புசாமி |
முதன்மை குரு | பேரருட்பணி.ஜேசு ரத்தினம் |
முன்னாள் ஆயர்கள் | மேதகு.ஜெரோம் தாஸ் வறுவேல் |
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சலேசிய சபையின் சென்னை மறைநிலத்தைச் சார்ந்தவர். சலேசிய சபைத் துறவியரின் பயிற்சி இல்லத்தின் தலைவராகச் செயல்பட்டுவந்தார். இவர் ஆயராக 2015-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24-ம் நாள் கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பணித் துறப்பு
தொகுஆயர் ஜெரோம்தாஸ் சில காலமாகவே உடல்நலக் குறைவாக இருந்ததால் திருத்தந்தை பிரான்சிசிடம் மறைமாவட்டப் பொறுப்பிலிருந்து விலகுவதற்காக இசைவு கோரியிருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் ஆயருக்கு 2020, ஜூன் 6ஆம் நாள் பணித்துறப்பு வழங்கியதோடு, அதே நேரத்தில் குழித்துறை மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக (Apostolic Administrator) மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களை 2020, ஜூன் 6ஆம் நாள் நியமித்தார். [1]அவர் சுமார் மூன்று அரையாண்டுகளுக்கு மேலாக மறைமாவட்ட நிர்வாகங்களை கவனித்து வந்தார்.இந்நிலையில் குழித்துறை மறைமாவட்டத்தின் இராண்டாவது ஆயராக கோட்டாறு மறைமாவட்டத்தை சார்ந்த அருட்பணி.ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அனஸ்தாஸ் அவர்களை திருத்தந்தை.பிரான்சிஸ் 13.1.2024 அன்று நியமித்தார்.
குழித்துறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு.ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் குழித்துறை மறைமாவட்ட முதன்மை திருத்தலமான நட்டாலம் புனித தேவசகாயம் பிள்ளை திருத்தலத்தில் வைத்து 24.02.2024 அன்று பொறுப்பேற்றார்.
மறைமாவட்ட வரலாறு
தொகுகுழித்துறை மறைமாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய கோட்டாறு மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. கோட்டாறு மறைமாவட்டம் 1930 வரை கொல்லம் மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்துவந்தது. அப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தில் தமிழ் பேசப்பட்ட பகுதியாக அது விளங்கியது.
கோட்டாறு மறைமாவட்டம் 1930இல் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மறைமாவட்டமாக மாறியபோது நான்கு பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. அவை கோட்டாறு, குளச்சல், திரித்துவபுரம், முளகுமூடு என்ற நான்கு மறைவட்டங்கள் (vicariates) ஆகும்.
நிலப்பரப்பில் கோட்டாறு மறைமாவட்டம் சிறிதாக இருப்பினும் மக்கள் தொகை அடர்த்தியில் பெரியதாக விளங்குகிறது. கத்தோலிக்கரும் அங்கு பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, கோட்டாறு மறைமாவட்டத்தில் மறைப்பணி வளர்ச்சி ஏற்படவும் மக்கள் பணி சிறக்கவும் அதை இரண்டாகப் பிரித்தல் நலம் என்ற கருத்து 1970களிலேயே எழுந்தது. இருப்பினும், மேதகு லியோன் தர்மராஜ் கோட்டாறு மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற பின்னரே மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான முயற்சிகள் வலுப்பெற்றன. தென் பகுதியில் கோட்டாறு மறைவட்டம், குளச்சல் மறைவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு மறைமாவட்டமும், வட பகுதியில் திரித்துவபுரம் மறைவட்டம், முளகுமூடு மறைவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய மறைமாவட்டமும் உருவாகலாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அது கோட்டாறு மறைமாவட்டத்தின் மக்கள் மற்றும் குருக்கள் மன்றம், துறவியர் மன்றம், பொதுநிலையினர் மன்றம் ஆகிய அமைப்புகளின் ஒட்டுமொத்தமான கருத்தாக ஏற்கப்பட்டது.
இப்பரிந்துரையை ஏற்ற ஆயர் லியோன் தர்மராஜ் தமிழக ஆயர் பேரவை மற்றும் இந்திய ஆயர் பேரவை ஆகியவற்றின் ஆதரவோடு அக்கோரிக்கையை 1995இல் உரோமைத் தலைமைப்பீடத்திற்குக் கொண்டுசென்றார். புதிய மறைமாவட்டம் “குழித்துறை” என்ற பெயரால் அழைக்கப்படும் என்று வத்திக்கான் அறிவித்தது. புதிய மறைமாவட்டத்தின் எல்லைகளைத் துல்லியமாக வரையறுப்பது பற்றிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதுபோலவே, எந்த மக்கள் குழுக்கள் மறைமாவட்டத்தின் எப்பகுதிகளில் வாழ்கின்றார்கள் என்பது பற்றிய தெளிவும் வழங்கப்பட்டது. மறைமாவட்டத்தைப் பிரிப்பதற்கான முயற்சிகளில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டது.
அந்தத் தளர்ச்சிநிலை ஆயர் லியோன் தர்மராஜ் 2007, சனவரி 16ஆம் நாள் காலமானதற்குப் பின்னும், தொடர்ந்தது. ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் 2007, சூன் 30இல் புதிய ஆயராகப் பணியேற்றார். கோட்டாறு மறைமாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.
கோட்டாறு மறைமாவட்டப் பகுதியில் பிறந்து வளர்ந்து கத்தோலிக்க சமயத்தைத் தழுவி, தம் சமய நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்த தேவசகாயம் பிள்ளைக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் அளிக்கப்பட்ட நிகழ்ச்சி 2012, திசம்பர் 2ஆம் நாள் கோட்டாற்றில் நிகழ்ந்தது. அத்தருணத்தில் கோட்டாறு மறைமாவட்டம் பிரித்தல் பற்றிய கோரிக்கை மீண்டும் ஒருமுறை திருத்தந்தை பதிலாள் முன் வைக்கப்பட்டது. மேலும், 2014, சூலை 26இல் மதுரைப் பேராயரின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த அவரிடம் மீண்டும் அக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இறுதியாக, குழித்துறை மறைமாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்டாறு மறைமாவட்ட மக்கள் கோரிக்கை 2014, திசம்பர் 22ஆம் நாள் நிறைவேறியது. கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து திரித்துவபுரம், முளகுமூடு ஆகிய மறைவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய குழித்துறை மறைமாவட்டம் அந்த நாளில் உருவாயிற்று. [2]எஞ்சிய கோட்டாறு, குளச்சல் ஆகிய இரு மறைவட்டங்கள் புதிய கோட்டாறு மறைமாவட்டமாகத் திகழும். குழித்துறை மறைமாவட்ட உருவாக்கம் குறித்த ஆவணத்தைத் திருத்தந்தை பிரான்சிசு வெளியிட்டார்.[3]
புள்ளிவிவரங்கள்
தொகுவத்திக்கான் நகர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன:
கோட்டாறு - தாய் மறைமாவட்டம் | பிரிவுக்குப் பின் கோட்டாறு மறைமாவட்டம் | புதிய குழித்துறை மாவட்டம் |
---|---|---|
பரப்பளவு: 1,665 ச.கி.மீ | 750 ச.கி.மீ. | 915 ச.கி.மீ. |
மொத்த மக்கள் தொகை: 1,741,350 | 885,865 | 855,485 |
கத்தோலிக்க மக்கள் தொகை: 524,706 | 260,484 | 264,222 |
பங்குத் தளங்கள்: 181 | 81 | 100 |
கிளைப் பணித்தளங்கள்: 171 | 48 | 123 |
மறைமாவட்டக் குருக்கள்: 294 | 193 | 101 |
துறவறக் குருக்கள்: 67 | 37 | 30 |
துறவற சகோதரர்கள்: 14 | 12 | 2 |
துறவற சகோதரிகள்: 738 | 471 | 267 |
குரு மாணவர்கள்: 166 | 93 | 73 |
குழித்துறை மறைமாவட்டத்தின் நில எல்லைகள்
தொகுகுழித்துறை மறைமாவட்டத்தின் வடக்கிலும் வடகிழக்கிலும் பாளையங்கோட்டை மறைமாவட்டம் உள்ளது. அதன் கிழக்கிலும் தெற்கிலும் புதிய கோட்டாறு மறைமாவட்டம் உள்ளது. குழித்துறை மறைமாவட்டத்தின் தென்மேற்காக இந்தியப் பெருங்கடல், மேற்காக திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டமும் நெய்யாற்றங்கரை மறைமாவட்டமும் உள்ளன.
புதிய மறைமாவட்டத்தின் பேராலயம்
தொகுபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழித்துறை மறைமாவட்டம் குழித்துறை நகரின் பகுதியான திரித்துவபுரம் நகரில் மூவொரு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவிலை மறைமாவட்டக் கோவிலாகக் கொண்டிருக்கும்.
ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல்
தொகுவாழ்க்கைக் குறிப்புகள்
தொகுகுழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் பெற்றுள்ள பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாகக் கீழே தரப்படுகின்றன:
பிறப்பு: சகாயபுரம் பங்கில் படுவூர் என்னும் ஊரில் 1951, அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தார்.
கல்வி:
- கார்மேல் உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.
- 1967-68: ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில்
- 1968-70: புனித ஞானப்பிரகாசியார் இளங்குருத்துவக் கல்லூரி, நாகர்கோவில், கோட்டாறு மறைமாவட்டம்.
- 1970-73: மெய்யியல் படிப்பு - தூய இதயக் குருத்துவக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை.
- 1973-76: பொருளாதாரத் துறை இளங்கலைப் படிப்பு - அருளானந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை.
- 1976: சலேசிய துறவற சபையில் சேர்வதற்கு முடிவுசெய்தார்.
- 1976-77: சலேசிய சபையில் துறவற முன்புகுமுகப் பயிற்சி.
- 1977-78: சலேசிய சபையில் துறவறப் புகுமுகப் பயிற்சி.
- மே 24, 1978: முதல் வார்த்தைப்பாடு.
- மே 24, 1981: இறுதி வார்த்தைப்படு.
- 1981-86: இறையியல் படிப்பு - உரோமையில் அமைந்துள்ள சலேசியப் பல்கலைக்கழகம்.
மேலும், உரோமை சலேசியப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் இளங்கலை, கல்விபயிற்றுத் துறையில் முதுகலை ஆகிய பட்டங்கள் பெற்றார்.
திருநிலைப்பாடு
தொகுஜெரோம் தாஸ் வறுவேல் 1985, ஜூன் 2ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அவருக்குக் குருப்பட்டம் அளித்தவர் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் ஆவார்.
குருத்துவப் பணி
தொகுஜெரோம் தாஸ் வறுவேல் பல நிலைகளில் குருத்துவப் பணி ஆற்றியுள்ளார்.
- 1985-86: உரோமையில் சலேசியப் பல்கலைக்கழகத்தில் தம் மேற்படிப்பை நிறைவுக்குக் கொணர்ந்தார்.
- 1986-90: வெள்ளக் கிணறு சலேசியத் துறவறப் புகுமுக இல்லத்தின் துணைத்தலைவர்.
- 1990-92: திருப்பத்தூரில் துறவற முன்புகுமுக இல்லத்தின் தலைவர்.
- 1992-1994: மையம் நகரில் துறவற முன்புகுமுக இல்லத்தின் தலைவர்.
- 1994-96: திருச்சி நகரில் சலேசிய மாணவர் இல்லத்தின் தலைவர்.
- 1996-2001: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் இணைப் பெருங்கோவில் பங்குத்தந்தை.
- 2001-2002: சலேசிய மறைமாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்.
- 2001-2002: திருப்பத்தூர் கல்விச் சோலை இயக்குநர்.
- 2002-2003: எண்ணூர் கல்விச் சோலை இயக்குநர்.
- 2003-2010: தொன் போஸ்கோ மலை நிறுவன இயக்குநர், தலவாடி, ஈரோடு.
- 2010-2014: வேலூர் மறைமாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள சலேசிய துறவறப் புகுமுக இல்லத்தில் பயிற்சி இயக்குநர்.
[4]
[5]
மறைவட்டங்கள்
தொகுகுழித்துறை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது, முளகுமூடு, திருத்துவபுரம் மறைவட்டங்கள் மட்டுமே செயல்பட்டுவந்தன. மறைமாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக மேலும் 4 புதிய மறைவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தற்போதைய மறைவட்டங்கள் முறையே முளகுமூடு, திருத்துவபுரம், காரங்காடு, மாத்திரவிளை, வேங்கோடு மற்றும் புத்தன்கடை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆயர் ஜெரோம் தாஸ் பணித் துறப்பைத் திருத்தந்தை பிரான்சிசு ஏற்கிறார்
- ↑ குழித்துறை மறைமாவட்டம் உருவாதல் - தினமணி செய்தி
- ↑ புதிய குழித்துறை மாவட்டம்
- ↑ "குழித்துறை மறைமாவட்டம் உருவாதல் - வத்திக்கான் அறிக்கை". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-24.
- ↑ குழித்துறை மறைமாவட்டம் பற்றி வத்திக்கான் வானொலி