முதன்மை பட்டியைத் திறக்கவும்

குழிய வன்கூடு

மெய்க்கருவுயிரி கலங்களின் குழிய வன்கூடு. அக்தின் இழைகள் சிவப்பு நிறத்தாலும், நுண்புன்குழாய்கள் பச்சை நிறத்தாலும், கரு நீல நிறத்தாலும் இந்த நுணுக்குக்காட்டி படத்தில் காட்டப்பட்டுள்ளன.

அனைத்துக் கலங்களிலும் காணப்படும் கலத்தின் வடிவத்தைப் பேணி மேலும் பல தொழில்களைப் புரியும் புரத இழைகளால் ஆன கலத்தக வன்கூடு/ கட்டமைப்புக் கூறு குழிய வன்கூடு (Cytoskeleton) அல்லது கலச்சட்டகம் எனப்படும். முன்னர் குழிய வன்கூடு மெய்க்கருவுயிரிக் (Eukaryota) கலங்களில் மாத்திரமே காணப்படுவதாக நம்பப்பட்டாலும், நிலைக்கருவிலி (Prokaryota) கலங்களிலும் இதனை ஒத்த கட்டமைப்புகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மெய்க்கருவுயிரிகளின் குழிய வன்கூடு ஆதாரத்தை வழங்குவதோடல்லாமல், சவுக்குமுளை, பிசிர், புன்மையத்தி போன்ற கட்டமைப்புகளை ஆக்குவதுடன் கலத்தகப் பதார்த்தப் பரிமாற்றல், கல அசைவு போன்றவற்றிலும் உதவுகின்றது.

மெய்க்கருவுயிரிக் கலத்தின் குழியவன்கூடுதொகு

மெய்க்கருவுயிரிகளில் மூன்று வகையான புரத இழைகள் குழியவன்கூட்டை ஆக்குகின்றன. அவை நுண்ணிழைகள், இடைத்தர இழைகள் மற்றும் நுண்புன் குழாய்கள்[1] என்பனவாகும். இவற்றின் ஒருபகுதியங்கள் கோளப்புரதங்களாக இருந்தாலும் இவை இவற்றின் முனைவுத்தன்மை காரணமாக குறித்த ஒழுங்கில் ஒன்றிணைந்து நார் போன்ற கட்டமைப்பை ஆக்குகின்றன.[2]

குழியவன்கூட்டு வகை விட்டம் (nm) கட்டமைப்பு ஒருபகுதியங்கள்
நுண்ணிழை     6  இரட்டைச் சுருள்  அக்தின்
இடைத்தர இழை    10  இரண்டு எதிர்ச் சமாந்தரமான சுருள்கள் இணைந்த நாற்பகுதியம்
நுண் புன்குழாய்    23  துவாரமுள்ள உருளையுருவான கட்டமைப்பு  α- மற்றும்β- டிபியூலின்

நுண்ணிழைகள்தொகு

 
அக்தின் இழைகள்

இவை அக்தின் இழைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதன் ஒரு இழை நேராக அடுக்கப்பட்ட G-அக்தின் கோளப்புரதங்களால் ஆனது. இவ்வாறான இரண்டு இழைகள் ஒன்றாக முறுக்கப்பட்டு ஒரு நுண்ணிழையை ஆக்குகின்றன. இவை மிகவும் வேகமாக உருவாக்கப்பட்டு அழிக்கப்படக் கூடியவை. இவை உருவாக்கப்பட்டு வளர்ச்சியடையும் போது இவை இணைக்கப்பட்டுள்ள கட்டமைப்பின் (ஒரு மென்சவ்வு/ புன்னங்கம்) மீது விசையைப் பிரயோகிக்கின்றன. தனிக்கலங்கள் அசைவதும், ஒரு முழு பல்கல உயிரினம் அசைவதும் இந்த அக்தின் இழைகளின் உதவியாலேயே நடைபெறுகின்றது. அக்தின் இழைகளின் உதவியாலேயே வெண்குருதிக் கலங்களால் மயிர்த்துளைக் குழாயூடாக நசிந்து செல்ல முடிகிறது. மயோசீன் இழைகள் மீது அக்தின் இழைகளின் வழுக்கல் அசைவால் எம் தசைக்கலங்கள் அசைகின்றன.

இடைத்தர இழைகள்தொகு

 
கெரெட்டின் இழைகள்

இது இலகுவில் பிரிகையடையாத அக்தின் இழையை விடச் சற்று விட்டம் கூடிய (10 nm) புரத இழைகளாகும். இவை கலத்துக்கு ஒரு திட்டமான வடிவத்தை வழங்குகின்றன. இவை இழுவிசையைத் தாங்கிக் கொள்வதனால் கலத்துக்கு உறுதித்தன்மையை வழங்குகின்றன. இடைத்தர இழைகளும் அக்தின் இழைகளும் கலமென்சவ்விலுள்ள சுற்றயலுக்குரிய புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கலத்திலுள்ள கலப் புன்னங்கங்களை நிலையாக நிறுத்தி வைக்கின்றன. இடைத்தர இழைகளை விமென்டின், கெரெட்டின், நரம்பிழைகள், லமின் போன்றவை ஆக்குகின்றன. கெரெட்டின் விசேடமாக மேலணிக் கலங்களில் அதிகம் காணப்படுகிறது. லமின் இழை கரு மென்சவ்வுக்குக் கட்டமைப்பு உறுதியை வழங்குகின்றது.

நுண்புன் குழாய்கள்தொகு

 
நுண்புன்குழாயின் கட்டமைப்பு.
 
நுண்புன் குழாய்கள்

இவையே குழியவன்கூட்டை ஆக்கும் மிகப் பெரிய புரத இழையாகும். (விட்டம்: 23 nm, துவாரத்தின் விட்டம்: 15 nm ). நுண்புன்குழாயின் மையத்தில் ஒரு துவாரம் உள்ளது. இதனூடாக சிறிய மூலக்கூறுகளைக் கடத்த இயலும். இதன் முதலிழையானது 13 அல்பா மற்றும் பீட்டா டிபியூலின் (Tubulin) புரதத்தால் ஆனது. புன்மையத்தி உள்ள கலங்களில் நுண்புன்குழாய்கள் புன்மையத்தியிலிருந்தே தோற்றுவிக்கப்படும். தொழில்கள்:-[3]

  • கலத்தக வன்கூடாகத் தொழிற்படுதல்
  • பதார்த்தங்கள் அசைவதற்கான பாதையை வழங்குதல்
  • தாவரக் கலத்தில் செலுலோசுக் கலச்சுவர் படிவதற்கான சட்டக அமைப்பை வழங்குதல்
  • கதிர்நார்களைத் தோற்றுவித்துக் கலப்பிரிவில் உதவுதல்.
  • பிசிர், சவுக்குமுளை, புன்மையத்தி ஆகியவற்றின் ஆக்கக்கூறு.

நிலைக்கருவிலிகளின் குழியவன்கூடுதொகு

குழியவன்கூடு நிலைக்கருவிலிகளில் இருப்பது அண்மைக்காலம் வரை அறியப்படாமல் இருந்தது. மெய்க்கருவுயிரிகளின் குழியவன்கூட்டை ஒத்த குழியவன்கூட்டுக் கட்டமைப்புகள் நிலைக்கருவிலிகளிலும் உள்ளன. எனினும் நிலைக்கருவிலிகளின் உயிரியல்ப் பல்வகைமை மிகவும் அதிகமென்பதால் பல கட்டமைப்புகள் இன்னமும் அறியப்படாமலேயே உள்ளன. பக்டீரிய இருகூற்றுப் பிளவில பங்கெடுக்கும் FtsZ, மற்றும் MreB, ParM, Crescentin ஆகிய குழியவன்கூட்டுக் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. MreB கல வடிவத்தைப் பேண உதவுகின்றது.

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிய_வன்கூடு&oldid=2746384" இருந்து மீள்விக்கப்பட்டது