கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ்
கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் (Gustaaf Willem van Imhoff, ஆகத்து 8, 1705 - நவம்பர் 1, 1750) இலங்கையின் ஒல்லாந்தர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் ஆளுநராகவும், பின்னர் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுநராகவும் பதவி வகித்தவர்.
கூசுத்தாவ் வில்லெம் வொன் இமோவ் Gustaaf Willem van Imhoff | |
---|---|
இடச்சு இலங்கையின் ஆளுநர் | |
பதவியில் 23 சூலை 1736 – 12 மார்ச் 1740 | |
முன்னையவர் | சான் மெக்காரே (பதில்) |
பின்னவர் | வில்லெம் மவுரிட்சு புருய்னிங்க் |
இடச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநர் | |
பதவியில் 28 மே 1743 – 1 நவம்பர் 1750 | |
முன்னையவர் | யொகான்னசு தேடென்சு |
பின்னவர் | யாக்கோபு மொசெல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லீர், கிழக்கு பிரீசியா | 8 ஆகத்து 1705
இறப்பு | 1 நவம்பர் 1750 பத்தாவியா, இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் (இன்றைய இந்தோனேசியா) | (அகவை 45)
இளமைக் காலம்
தொகுவொன் இமோவ், கிழக்குப் பிரிசிய (East Frisian) உயர் குடியில் பிறந்தவர். இவரது தந்தை பிரைகர் வொன் இமோவ், செருமனி - ஒல்லாந்த எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் செருமனிக்குள் அமைந்திருந்த லியர் (Leer) என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். 1725 ஆம் ஆண்டில், வொன் இமோவ், அக்காலத்தில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதிகளின் தலைநகரமாக இருந்த பத்தேவியாவில், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் பணியில் சேர்ந்துகொண்டார். அவர் அங்கே பல பதவி உயர்வுகளைப் பெற்று உயர் பதவிகளியும் வகித்தார். 1736 சூலை 23 ஆம் தேதி ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இலங்கையின் ஆளுனராகப் பதவியேற்றார்.
இலங்கையில் வொன் இமோவ்
தொகுவொன் இமோவுக்கு முன்னிருந்த ஆளுனர்கள் சிலரதும், பத்தேவியாவில் இருந்த உயர் ஆளுனர் சபையினரதும் பிழையான பல நடவடிக்கைகள் காரணமாக ஒல்லாந்தர் இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்தது. இவருக்கு முன் கடைசியாக இருந்த ஆளுனர், பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாதவராக இருந்ததாலேயே வொன் இமோவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இவ்வாறான சூழலில் முறையாகச் செயல்படக்கூடிய தகுதியும், திறமையும் வொன் இமோவுக்கு இருப்பதாக ஆளுனர் சபையினர் கருதினர்[1].
இலங்கையின் மையப் பகுதியில் அமைந்திருந்த கண்டி அரசுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே இருந்த பகையுணர்ச்சி, கடுமையான வரி விதிப்புகளினால் மக்களிடையே நிலவிய அதிருப்தி, அடிக்கடி ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்கள் என்பன இலங்கையில் ஒல்லாந்தர் எதிர் நோக்கிய முக்கிய பிரச்சினைகளாக இருந்தன. வொன் இமோவ் பிரச்சினைகளைத் தெளிவாக ஆய்வு செய்து[2] அவற்றைத் தீர்ப்பதற்கான தனது முன்மொழிவுகள் குறித்தும் பத்தேவியாவில் இருந்த தனது மேலதிகாரிகளுடன் கலந்துரையாடினார். கண்டி அரசைப் பகைத்துக் கொள்ளாமல் நல்லுறவைப் பேணுவதற்கான வழிமுறைகளை அவர்கள் முன் வைத்தார். எனினும், இவரது கோரிக்கைகளை ஆளுனர் சபை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை[3]. அரைகுறையான தீர்வுகளுக்குக் கண்டியரசும் உடன்படவில்லை. பின்னர் படையெடுப்பின் மூலம் கண்டியரசை வழிக்குக் கொண்டுவரும் அணுகுமுறை குறித்தும் இவர் முன்வைத்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை[4]. இவ்வாறு இரண்டாண்டு காலம் இவரெடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்காமல் போனது. இதனால் தனது ஆட்சியின் இறுதியாண்டில், பிரச்சினைகளை அவ்வப்போதைய நிலைமைகளுக்கு ஏற்றபடி கையாள வேண்டிய நிலை ஏற்பட்டது[4]. 1740 ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கையில் இவரது பதவிக்காலம் முடிவடைந்ததும் பத்தேவியாவுக்குத் திரும்பினார்.
எனினும் இவரது ஆட்சிக் காலத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியதுடன், மக்களையும் நல்ல முறையில் நடத்த நடவடிக்கைகளை எடுத்தார். இலங்கையின் மக்களை நல்ல முறையில் நடத்தினால் கம்பனியின் வருமானம் பாதிக்கப்படு என்ற சிலரது கருத்தை இமோவ் ஏற்றுக்கொள்ளவில்லை. சில ஒல்லாந்த அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறையினாலும், மக்கள் மீது ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் கம்பனியைக் கெடுத்து வருவதாக அவர் கருதினார். கணக்குகள் ஒழுங்காக வைக்கப்படாததையும், நண்பர்களையும் வேண்டியவர்களையும் திருப்தி செய்வதற்காகச் சில அதிகாரிகள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களைப் பதவியில் அமர்த்தியிருப்பதையும் அவர் கண்டறிந்தார்[5]. இவ்விடயங்களில் பல சீர் திருத்தங்களை இமோவ் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். வரிகளை அறவிடுவதில் ஒடுக்குமுறை பயன்படுத்தப்படாமல் இருக்கும்படியும் அவர் கவனித்துக் கொண்டார்[6].
இலங்கை, இலங்கை இந்தியத் துறைமுகங்களிடையே தனிப்பட்டவர்களும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதித்தார். ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரிகளை விதித்ததின் மூலம் கம்பனியின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். நீதித்துறை பக்கச்சார்பின்றி நியாயமாக இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தார். வேளாண்மை, கல்வி போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தினார். 1737 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது அச்சுக்கூடம் இவர் காலத்திலேயே நிறுவப்பட்டது[6].
ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் நாயகம்
தொகுபத்தேவியாவில் நிலைமை மோசமாக இருந்தது. பத்தேவியாவைச் சுற்றிலும் சீனர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக ஒல்லாந்த ஆளுனர் நாயகமான அட்ரியான் வல்கனியர் கருதினார். அதனால் அவர்களை இலங்கைக்கோ அல்லது தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றப் பகுதிக்கோ அனுப்ப அவர் முயன்றார். இதனால் சீனர்கள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராகக் குழப்பம் விளைவித்தனர். வல்கனியர் இக் குழப்பத்தை அடக்கும் முயற்சியில் 5000 சீனர்களைக் கொன்றார். வொன் இமாவ் இக் கொடூரமான கொள்கையை எதிர்த்தார். இதனால், இமாவ் கைது செய்யப்பட்டு நெதர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டார். இமாவ் நெதர்லாந்தை அடைந்ததும், "பதினேழு பிரபுக்கள்" எனப்பட்ட ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் உயர் குழுவினர் வொன் இமாவை ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதிகளுக்கான ஆளுனர் நாயகமாக நியமித்து பத்தேவியாவுக்கே அனுப்பினர்.
பத்தேவியாவுக்குச் செல்லும் வழியில் வொன் இமோவ் கேப் குயேற்றப்பகுதியில் இருந்த கேப் டவுன் ஒல்லாந்தக் குடியேற்றத்துக்குச் சென்றார். அங்கே மக்கள் நாட்டின் உட் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதையும், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் தொடர்புகளை இழந்து வருவதையும் கவனித்தார். புரட்டசுத்தாந்திய திருச்சபையினர் அங்கே கல்வியை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் என ஆலோசனை கூறினார்.
இமோவ் 1743 ஆம் ஆண்டு மே மாதத்தில் பத்தேவியாவில் ஆளுனர் நாயகமாகப் பதவி ஏற்றபோது போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பத்தேவியாவில் முன்னைய ஆளுனர் நாயகம் அட்ரியான் வல்கனியரின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழப்பநிலையைச் சாதகமாக்கிக் கொண்டு ஜாவா இளவரசர்கள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராகப் போர் தொடுத்திருந்தனர். இமோவ், அமைதி ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றதுடன், பல சீர் திருத்தங்களையும் நடைமுறைப் படுத்தினார். இவர் ஒரு லத்தீன் பாடசாலை, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதிகளின் முதல் அஞ்சல் அலுவலகம், ஒரு மருத்துவ நிலையம், ஒரு செய்தித்தாள் என்பவற்றையும் நிறுவினார். இவர் பியூட்டன்சோர்க் என்னும் நகரத்தை நிறுவியதுடன், கஞ்சா வணிகத்தையும் ஒடுக்கினார். 1746 ஆம் ஆண்டில் கம்பனியின் சொத்துக்களைப் பார்வையிடுவதற்காக ஜாவாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், பல அமைப்புசார்ந்த சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தினார். இவரது காலத்தில் 600,000 டச்சு புளோரீன் பெறுமதியான ஆறு தொன்கள் வெள்ளியுடன் பத்தேவியாத் துறைமுகத்தில் நின்ற ஒல்லாந்தக் கப்பல் ஒன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதில் வெடித்துச் சிதறியது.
இமோவின் முற்போக்கான கொள்கைகள் அவருக்குப் பல எதிரிகளை உருவாக்கின. இவர் இராசதந்திர முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருந்ததும், உள்ளூர் வழக்காறுகளை மதியாத தன்மையும், ஜாவா வாரிசுரிமைக்கான மூன்றாவது போரை உருவாக்கின. இவரது எதிரிகள் இவரைச் சிக்கலான நிலைமைக்குக் கொண்டுவந்தமையால், இவர் தனது பதவியை விட்டு விலக விரும்பினார். ஆனாலும் ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனி இத ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1750 ஆம் ஆண்டில் இறக்கும்வரை இமோவ் இப் பதவியில் இருக்கவேண்டியது ஆயிற்று.
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Blaze, L. E., History of Ceylon, Asian Educational Services, New Delhi, 2004 (The first Edition Published by: The Christian Literature Society for India and Africa Ceylon Branch, Colombo, 1933)
- Arasaratnam, S., Baron van Imhoff and Dutch policy in Ceylon 1736-1740, Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 118 (1962), no: 4, Leiden, 454-468.