கூடல் இழைத்தல்

கூடல் இழைத்தல் என்பது பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள திருமணம் குறித்த ஒரு நம்பிக்கை ஆகும். தலைவனிடம் காதல் கொண்ட பெண் தரையில் மணலைப் பரப்புவாள். கண்களை மூடிக் கொண்டு சுட்டுவிரலால் மணலில் வட்டமாக வரைவாள். அப்போது சுட்டுவிரல் தொடங்கிய இடத்தில் வந்து முடிந்தால் தலைவி நினைத்தது நடக்கும் என்றும் சரியாகப் பொருந்தாவிட்டால் தலைவி நினைத்தது நடக்காது என்று அறிவாள். திருமணம் செய்ய வருவேன் எனக் கூறிச்சென்ற தலைவன் வருவானோ மாட்டானோ என்ற ஐயம் தோன்றும் போதும் கூடல் இழைத்தல் மரபாகும்.[1]

மணலில் பெரிதாக வட்டங்கள் வரைந்து, அவை இரட்டைப் படையில் அமைந்தால் தலைவன் வருவான் என்ற நம்பிக்கை நெய்தல் நிலப் பெண்களிடம் இருந்தது. மேலும் கண்ணை மூடி வட்டம் இழைக்கும் போது மணல் வட்டம் கூடாமல் போவதுண்டு. கூடாமல் போனாலோ அல்லது வட்டங்கள் ஒற்றைப் படையில் அமைந்தாலோ தலைவனின் வருகை இல்லை என்று நம்பினர். கடற்கரையில் மட்டுமல்லாது இல்லத்திலும் கூடல் இழைப்பது உண்டு.

இலக்கியங்களில்

தொகு

தன் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு முனை மற்ற முனையுடன் கூடவில்லை. ஆதலால் அது இளம்பிறை போல் விளங்கியது. அந்த இளம்பிறை பின்பு முழு நிலவாக மாறி வருத்தும் என்று எண்ணுகிறாள்; தான் உடுத்திருந்த ஆடையால் அதை மூடுகிறாள்; உடனே இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என்று எண்ணுகிறாள். தான் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி செய்தவளாக விளங்க எண்ணுகிறாள். உடனே மூடும் முயற்சியைக் கைவிடுகிறாள்.

இக்காட்சியைக் கலித்தொகையில் நெய்தல் கலியில் நல்லந்துவனார் காட்டுகின்றார்.

கலித்தொகை

தொகு

கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே, 25
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்[2]

இலக்கண விளக்கம்

தொகு

அண்டர்
கிளைக்கும் தெரிவுஅரு கேதகை நீழல் கிளிஇருந்து
வளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண்கூடல்வளைக்கைகொண்டே.[3]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. மா. சா. அறிவுடை நம்பி (2010). தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-234-1867-1. {{cite book}}: Check |isbn= value: checksum (help)
  2. கலித்தொகை,நெய்தல் கலி 142 : 24-29

  3. இலக்கண விளக்கம்-பொருளதிகார மேற்கோள் செய்யுள் அகத்திணையியல் - பிற்பகுதி, தஞ்சை சரசுவதி மஹால் வெளியீடு-144

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்_இழைத்தல்&oldid=1769744" இலிருந்து மீள்விக்கப்பட்டது