கூறாக்கம் (கணிதம்)
கணிதத்தில் கூறாக்கம் (chunking) என்பது எளிய வகுத்தல் கணக்குகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும். இம்முறையில் வகுத்தலானது தொடர்கழித்தலின் வாயிலாகச் செய்யப்படுகிறது. சில இடங்களில் இது பகுதி ஈவுகள் முறை (partial quotients method) எனவும் அறியப்படுகிறது.
வழிமுறை
தொகுஒரு பெரிய எண்ணை மற்றொரு சிறிய எண்ணால் வகுப்பதற்கு, சிறிய எண்ணின் எளிய மடங்குகளாக (எடுத்துக்காட்டாக, 100×, 10×, 5× 2×, etc.) அமையும்பெரிய எண்ணின் பகுதிகள் தொடர்ந்து கழித்தலின் மூலம் அப்பெரிய எண்ணிலிருந்து நீக்கப்படுகின்றன. பெரிய எண்ணானது பூச்சியமாகவோ, அல்லது வகுஎண்ணைவிடச் சிறியதாகவோ ஆகும் வரை இந்நீக்கல் தொடரப்படுகிறது. அதே சமயத்தில் வகுஎண்ணின் எந்தந்த மடங்குகள் வகுபடுஎண்ணிலிருந்து கழிக்கப்படுகிறது என்பதையும் குறித்துக்கொண்டே வர வேண்டும். அந்த மடங்குகளின் கூட்டுத்தொகை இந்த வகுத்தலுக்கான ஈவைத் தரும்.[1]
1990களின் பிற்பகுதிகளில் ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கப்பள்ளிகளில் இம்முறை அதிகளவு பரவலானது.[2] பாரம்பரியமாகக் கற்பிக்கப்பட்டுவரும் குறு வகுத்தல், நீள் வகுத்தல் முறைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது சற்று முறைசாரா வழியாகக் காணப்படலாம். எனினும் அவற்றைவிட வகுத்தலின் அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யும்.[3]
எடுத்துக்காட்டு
தொகு- 132 ÷ 8
132 ஐ எட்டால் வகுப்பதற்கு 132 இலிருந்து 80, 40, 8 (10×8; 5×8; 1×8) ஆகியன அடுத்தடுத்துக் கழிக்கப்படுகின்றன. இம்மூன்று கழித்தலுக்குப் பின் கிடைக்கும் மீதி நான்கானது வகுஎண் எட்டைவிடச் சிறியதாக உள்ளதால் இத்துடன் தொடர்கழித்தல் நிறைவுபெறுகிறது.
132 80 (10 × 8) -- 52 40 ( 5 × 8) -- 12 8 ( 1 × 8) -- 4 -------- 132 = 16 × 8 + 4
- 132/8 இன் ஈவு = 16 (10+5+1) ; மீதி = 4
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.youtube.com/watch?v=5DaS1gYEYXs
- ↑ Gary Eason, Back to school for parents, BBC News, 13 February 2000.
- ↑ Anne Campbell, Gavin Fairbairn, Working with support in the classroom, SAGE, 2005; pp. 59–60 via Google books
மேலும் வாசிக்க
தொகு- Rob Eastaway and Mike Askew (2010), Maths for Mums and Dads, Square Peg. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-224-08635-9