கூலி, விலை, இலாபம்
கூலி, விலை, இலாபம் (Wages, Price and Profit) என்பது, 1865 ஆம் ஆண்டு யூன் மாதம் சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக் கவுன்சிலின் கூட்டங்களில் கார்ல் மார்க்சினால் வழங்கப்பட்ட பேச்சின் உரைவடிவம் ஆகும். இது 1865 ஆம் ஆண்டு மே மாத இறுதிப் பகுதிக்கும் சூன் 27 இற்கும் இடையில் எழுத்தாக்கம் செய்யப்பட்டது.[1]
இது கார்ல் மார்க்சின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படைகளை விளக்குகிறது. இது, அக்காலத்தில் கார்ல் மார்க்சு எழுதிக்கொண்டிருந்த அவரது பொருளாதாரக் கொள்கைகளை விளக்கும் மூலதனம் என்னும் விரிவான நூலின் முதல் தொகுதியின் சுருக்கம் எனலாம். மார்க்சின் வாழ்க்கைக் காலத்திலோ அல்லது அவரது நூல்களில் பெரும்பாலானவற்றை வெளியிட்ட ஏங்கெல்சின் காலத்திலோ இப்பேச்சு அச்சில் வெளிவரவில்லை. ஏங்கெல்சு இறந்த பின்னர் மார்க்சின் ஆவணங்களிடையே இதன் கையெழுத்துப் படியும் காணப்பட்டது. இதை மார்க்சின் மகளான எலீனர் அவெலிங் முதன் முதலில் 1898 இல் வெளியிட்டார். ஆங்கிலப் பதிப்பு பெறுமானம், விலை, இலாபம் (Value, Price and Profit) என்னும் தலைப்பில் வெளியானது. ஆனால், அதன் செருமன் மொழிபெயர்ப்பு கூலி, விலை, இலாபம் (Wages, Price and Profit) என்னும் தலைப்பில் வெளியானது.[1] செருமன் தலைப்பைப் பின்பற்றியே தமிழ் மொழிபெயர்ப்புக்கும் பெயரிடப்பட்டது.
நூற்பொருள்
தொகுமுதலாளித்துவப் பொருளாதார முறைமையில் கூலி, மிகை மதிப்பு போன்ற கருத்துருக்களை இந்தப் பேச்சில் விளக்கும் கார்ல் மார்க்சு, தொழிலாளர் வகுப்பினரின் நலன்களும், பூர்சுவா வகுப்பினரின் நலன்களும் எவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கின்றன என்பதையும் விளக்குகிறார்.[2]
மார்க்சின் இந்தப் பேச்சு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். முதலாவது, வெஸ்டனை விமர்சிக்கும் அதேவேளை கூலிக்கான மொத்த நிதி ஒரு மாறிலி என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்ட கூலி நிதிக் கோட்பாட்டையும் கடுமையாகச் சாடுகிறது. இரண்டாவது பகுதியில், பெறுமானக் கோட்பாடு, மிகைப் பெறுமானக் கோட்பாடு ஆகியவற்றை விளக்குவதுடன், அவற்றின் விளைவுகளையும் விளக்குகிறது.[1]
உள்ளடக்கம்
தொகுஇது முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டபோதே துணைத் தலைப்புக்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இத் துணைத் தலைப்புக்கள் வருமாறு:
முன்குறிப்புக்கள்
- உற்பத்தியும் கூலியும்
- உற்பத்தி, கூலி, இலாபம்
- கூலியும் நாணயமும்
- சப்ளையும் கிராக்கியும்
- கூலியும் விலைகளும்
- மதிப்பும் உழைப்பும்
- உழைக்கும் சக்தி
- உபரி மதிப்பை உற்பத்தி செய்தல்
- உழைப்பின் மதிப்பு
- பண்டத்தை அதன் மதிப்பில் விற்பதால் இலாபம் கிடைக்கிறது
- உபரி மதிப்பு பிரிவினையாகும் பற்பல பங்குகள்
- இலாபம், கூலி, விலைகள் இவற்றின் பொது விகிதாச்சாரம்
- கூலி உயர்வுக்காகவோ அல்லது அது குறைக்கப்படுவதை எதிர்த்தோ நடந்த முயற்சிகளின் முக்கிய சம்பவங்கள்
- மூலதனத்துக்கும் உழைப்பிற்கும் இடையிலுள்ள போராட்டமும் அதன் விளைவுகளும்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Value, Price and Profit". marxists.org. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
- ↑ மார்க்ஸ், கார்ல்., கூலி, விலை, இலாபம் (மொழிபெயர்ப்பு), முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ. பக். 2.
உசாத்துணைகள்
தொகு- மார்க்ஸ், கார்ல்., கூலி, விலை, இலாபம் (மொழிபெயர்ப்பு), முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.