கென்னத் அப்பெல்
கென்னத் அப்பெல் (Kenneth Appel) (பிறப்பு அக்டோபர் 8, 1932 புரூக்லின், நியூ யார்க்) ஒரு கணித வல்லுனர். 1976 ஆம் ஆண்டில் உடன் பணியாளரான வூல்ஃப்காங் ஏக்கென் என்பவருடன் சேர்ந்து கணித உலகில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவந்த நான்கு நிறத் தேற்றத்தை நிறுவினார். இதன் மூலம், எந்தவொரு இரு பரிமாண நிலப்படத்தையும், அருகில் உள்ள நாடுகள் ஒரே நிறத்தைக் கொண்டிராமல் நான்கு நிறங்களை மட்டுமே பயன்படுத்தி நிறந்தீட்ட முடியும் என நிறுவினர்.
கணினியின் உதவியில் பெருமளவுக்குத் தங்கியிருந்ததால், இந்த நிறுவல், தற்காலக் கணிதத்தின் மிகவும் சர்ச்சைக்கு உரிய ஒன்றாக அமைந்தது. கணிதச் சமூகத்தில் இதைப் பலரும் கண்டித்து விமரிசித்தனர். "ஒரு நல்ல கணித நிறுவல், கவிதை போன்றது. இது தொலைபேசி விபரத்திரட்டுப் போல இருக்கிறது" என்றும் சொல்லப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் அளித்த பேட்டியொன்றில், அப்பேலும், ஏக்கனும், தமது நிறுவல் நளினமானதாகவும், சுருக்கமானதாகவும், மனித மூளையினால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது என்றும் ஏற்றுக்கொண்டனர். எனினும், இந்த நிறுவல் கணினி தொடர்பில் கணிதவியலாளர்களுடைய மனப்பாங்கில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் தொடக்கமாக அமைந்தது.
அப்பெல் குயீன்ஸ் கல்லூரியிலும், மிச்சிகன் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். பின்னர் அவர் பிரிசிங்டனில் உள்ள பாதுகாப்புப் பகுப்பாய்வு நிறுவனத்தில் ஆய்வுப் பணி புரிந்தபின், 1961 ஆம் ஆண்டில் உர்பானா-சம்பைனில் உள்ள இல்லினோயிசு பல்கலைக் கழகத்தில் இணைந்து கொண்டார். 1993 ஆம் ஆண்டிலிருந்து, 2002 ஆம் ஆண்டு வரை நியூ அம்சயரின் டர்கமில் உள்ள நியூ அம்சயர் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட போதும், அவ்வப்போது அங்கே கற்பித்து வருகிறார்.