கென்னத் ஸ்ட்ரீட், இளையவர்
கென்னத் ஸ்ட்ரீட், இளையவர் (Kenneth Street, Jr, 1920 - 13 மார்ச் 2006) என்பவர் ஒரு அமெரிக்க வேதியியலாளர் ஆவார். 1949, 1950 ஆம் ஆண்டுகளில் 97 மற்றும் 98 ஆவது தனிமங்களான பெர்க்கிலியம் மற்றும் காலிபோர்னியம் முதலியவற்றைக் கண்டுபிடித்த அறிவியலாளர் குழுவில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார்.[1]
கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லியில் இவர் 1920 ஆம் ஆண்டு பிறந்தார். 1943 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வேதியியல் பட்டத்தைப் பெற்றார்[1]. அதன் பின்னர் இரண்டாம் உலகப்போரில் வான் பதக்கம் மற்றும் புகழ்பெற்ற பறக்கும் சின்னம்[1] போன்ற பெருமைகளுடன் போர் விமானியாகப் பணியாற்றினார். போருக்குப் பின் இவர் பெர்க்லிக்குத் திரும்பி அணுக்கரு வேதியியலில் 1949 ஆம் ஆண்டு தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். அமெரிசியம் மற்றும் கியூரியம் தனிமங்களின் ஓரிடத்தான்கள் என்பது இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வுத் தலைப்பாகும்.[2]
பெர்க்லியம் மற்றும் காலிபோர்னியம் தொடர்பான ஆய்வுகளை இவர் இலாரன்சு பெர்க்லி கதிரியக்க ஆய்வகம் மேற்கொண்டார், இவருடன் அப்பொழுது சிடான்லி செரால்டு தாம்சன், கிளென் தியோடர் சீபோர்க்கு, மற்றும் ஆல்பர்ட் கெயோர்சோ[3] ஆகியோர் அக்குழுவில் இருந்தனர். 1949 ஆம் ஆண்டு பெர்க்லியில் பல்கலைக்கழக ஆசிரியராக இணைந்த இவர் பின்னாளில் அந்த ஆய்வகத்தின் இணை இயக்குநராகவும் தொடர்ந்து வேதியியல் பேராசிரியர் ஆகவும் உயர்ந்தார்.[1] அணுக்கரு வேதியியல், புவிவெப்ப ஆற்றல், புவி வேதியியல் போன்ற துறைகளில் இவருக்கு ஆர்வமும் நாட்டமும் மிகுந்திருந்தது.[1]
கென்னத் சிடீர்ட் 1986 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[1] ஓய்வுக்குப் பிறகு இவர் தன் மனைவி சேனுடன் கலிபோர்னியாவில் உள்ள டெய்லர்சுவில் நகருக்கு இடம்பெயர்ந்தார். 1944 ஆம் ஆண்டில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்குத் தந்தையான இவர்[1] முதுகுப்பை சுமந்து மலைகளில் நடத்தல், படகில் பயணம் செய்தல் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருந்தார்.[1] 2006 மார்ச்சு 13 இல் கலிபோர்னியாவில் உள்ள பாரடைசு நகரில் இவர் காலமானார்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Kenneth Street, Jr பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம், Obituaries for April 25, 2006, Lassen County Times, accessed 6 March 2011
- ↑ Isotopes of americium and curium, Kenneth Street, University of California, 1949
- ↑ Proceedings of the Symposium Commemorating the 25th Anniversary of Elements 97 and 98, escholarship.org, accessed 6 March 2011