கே. பி. எஸ். மணி
கே.பி.எஸ். மணி' என அறியப்படும் கதிர்வேல் பால சுப்பிரமணி (22 பெப்ரவரி 1922 - 16 மார்ச் 1990) என்பவர் மேனாள் ராணுவ வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் தமிழ்நாட்டின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், ம்மகளவை உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும்,1967 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1957 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த சி. முத்தையா பிள்ளையைப் போல இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற ஒருவராகவும் இருந்தவர்.[1]
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறப்பும், தொழிலும்
தொகுகே. பி. எஸ். மணி பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணம் சீர்காழியில் பிறந்தார். ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் துவக்கக் கல்வி கற்றார். சீர்காழி எல். எம். சி. பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்ததும், இராணுவத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணியாற்றிய சமயத்தில், இவர் இறந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1946இல் கே. பி. எஸ். மணி வீட்டுக்கு திருபினார்.
சமுதாயப் பணிகள்
தொகுஇராணுவத்தில் இருந்து திரும்பிய இவர் உள்ளூரில் நிலவிய சாதிய, பண்ணையார் ஆதிக்கம் போன்றவற்றிற்கு எதிராக செயல்படத் தொடங்கினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போரட்டங்களினால் 1947இல் இருந்து 1967 வரை 4 முறை சிறை சென்றார். பட்டியல் சாதியினர் பிணத்தை எடுத்துச்செல்லும்போது யாரேனும் வழிமறித்தால், பிணத்தை அதே இடத்தில் எரிப்பேன் என கே. பி. எஸ். மணி சொன்னதால், எடமணலில் தடுத்தவர்களே பிணத்தைப் புதைக்க வழிவிட்டனர். ஏழைகளின் கல்விக்காக ஏழை மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக சீர்காழியில் 1947 இல் ‘சாதுவர் ஏழை மாணவர் இல்லம்’ தொடங்கினார். மேலும் 1976 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாக்ரிகளின் மேம்பாட்டுக்காக ‘நரிக்குறவர் மாணவர் விடுதி’ நடத்தினார்.
அரசியலில்
தொகு1950களில் அம்பேத்கரின் ‘ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனில்’ இணைந்த கே. பி. எஸ். மணி தஞ்சையில் தீண்டாமை ஒழிப்பு, சாதிய வன்முறை சம்பவங்களுக்கு எதிராக முழு வீச்சில் செயல்பட்டார். இதனால் ந. சிவராஜ் இவரைத் தமிழகத்தின் இணைச் செயலாளராக நியமித்தார்.
1952-ம் ஆண்டு ஃபெடரேஷன் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட கே. பி. எஸ். மணி தோல்வியடைந்தார். 1957இல் குடியரசுக் கட்சி சார்பில் சுயேச்சையாக சீர்காழி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த இவர், 1967 தேர்தலில் சீர்காழி தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றிபெற்றார்.
1980 ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கராஜை 99,172 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "கே.பி.எஸ்.மணி: ஒடுக்கப்பட்டோரின் முன்னோடிப் போராளி!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.