கொடைமடம் என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். 'மடம்' என்பதற்கு 'அறியாமை' என்ற பொருள். இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் 'கொடை மடம்' என்று சொல்வார்கள். இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே 'கொடை மடம்' உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.

விளக்கம் தொகு

'மடைமை' என்பது போற்றப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக இல்லையெனினும், 'கொடைமடத்தை' அவ்வாறு கூற இயலாது. கொடைக் கொடுப்பதென்பது ஒரு மாபெரும் நற்செயல். நாம் பெற்ற செல்வங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே. ஈகையை தவிற, பிற எல்லா கொடுத்தலும், திரும்பி பெறக்கூடிய நோக்கத்தில் மட்டும் தான் தரப்படும். இதனை வள்ளுவர் கூறுவது,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. [1]

இத்தகைய கொடையை, கண் மூடித்தனமாக கொடுப்பதில் தவறொன்றுமில்லையே? சங்க காலத்தில், இந்த 'கொடைமடத்தைப்' போற்றி, கபிலர் போன்ற பல புலவர்கள், அரசர்களின் கொடை வள்ளல்களைப் பாடியது நாம் அறிந்ததே.

எடுத்துக்காட்டு தொகு

பாரி வேந்தர் தொகு

இயற்கையாகவே முல்லைக் கொடி வளருவதற்கு ஒரு ஊன்று தேவை. சாதாரண மக்கள், இத்தகைய முல்லைக் கொடி வளர, ஒரு மூங்கிலை நட்டோ, அல்லது ஒரு பந்தலை அமைத்தோ அதனைப் படர்ச் செய்வர். அந்தக் கொடியும் அதைப் பற்றிக் கொண்டு வளர்ந்து விடும்.

பறம்பு தேசத்தை ஆண்ட மன்னன் பாரி வேந்தன், ஒரு நாள் தனது தேசத்திலுள்ள காட்டுக்குள் சென்றான். அங்கே ஒரு முல்லை கொடி தளர்ந்திருந்த்து. அக்கொடியின் தளர்ச்சியை உடனே போக்க வேண்டும் என்று, தன்னுடைய தேரை இழுத்து அந்தக் கொடிக்கருகில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னான். அருகில் நின்று, தேரின் மேலே அந்தப் பூங்கொடியை எடுத்தும் விட்டான். பாரிக்கு, "இந்தச் சிறிய கொடி படர்வதற்கு தேரை வைக்கலாமா?" என்ற எண்ணமே தோன்றவில்லை. அந்தக் கொடியின் தளர்ச்சி ஒன்றே அவன் கருத்தில் நின்றது. அருகில் எது இருந்தாலும் ஊன்றுக்கோளாக நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே முன் நின்றது. இதுவே 'கொடைமடத்தின்' எடுத்துக்காட்டு. இதனால், 'முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல், பாரி' என்ற புகழையும் பெற்றான்.

மேற்கோள்கள் தொகு

  1. திருக்குறள், ஈகை அதிகாரம், எண் 221
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடைமடம்&oldid=2429823" இருந்து மீள்விக்கப்பட்டது