தேர் என்பது பொதுவாக கோயில்களில் கடவுளரை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இது இந்து மதத்தில் மட்டுமில்லாமல், பவுத்தம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் புத்த சமயக் கடவுளான அருகனுக்குத் தேர் இருந்ததாகக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே கோயில் தேர் என்பது பவுத்த, சமண சமயங்களுக்கு உரியதாக இருந்து இந்து சமயத்திலும் அது பின்பற்றப்பட்டு வந்துள்ளதாகக் கருதலாம்.[1]

ஆசியாவின் பெரிய ஆழித்தேர், திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா
கொழும்பில் ஒரு தேர்
பாவனையில் இல்லாதபோது தேர் பாதுகாக்கப்படும் தேர் வீடு, நல்லூர் கந்தசுவாமி கோவில்

சங்க இலக்கியத்தில் தேர்கள்

மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன.[2] இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.[2]

தேரின் பயன்பாடு

தற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப்பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 866 தேர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.[2]

தேர்ப்படை

அக்காலத்தில் அரசனுக்கு இருந்த நான்கு வகைப் படைகளான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பனவற்றுள் தேர்ப்படை முதலாவது இடத்தில் வைக்கப்பட்டது. போர்களில் தேர் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.

 
வேலைப்பாடு மிகுந்த தேர்

தேர் அமைப்புகள்

தேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாகக் கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும். தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது.[3]

தேர்ச் சிற்பங்கள்

 
தேர் மண்டபம், விட்டலர் கோயில், அம்பி, கருநாடகம், இந்தியா
 
தேர் மண்டபம், 12ஆம் நூற்றாண்டு, ஐராவதேசுவரர் கோயில், தாராசுரம், கும்பகோணம், தமிழ்நாடு

மானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது.[4]

தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.[2]

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடுகர்பேட்டை எனும் ஊரிலுள்ள கிறித்தவ தேவாலயத்திற்கான தேரில் இயேசு பெருமான் வாழ்க்கையை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.[5]

தேர்த் திருவிழா

 
18 ஆண்டுகள் ஓடாதிருந்த திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருத்தேர் 1960ல்
 
1974 ல் சீரமைத்த பின் தற்போதய திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருத்தேர்

தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம்.

  • ஒரிசாவில் உள்ள பூரி, தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடக்கும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டின் பல கோயில்களில் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல், பக்கம்: 178
  2. 2.0 2.1 2.2 2.3 "தேர்ச் சிற்பங்கள்". முனைவர் லோ. மணிவண்ணன். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2012.
  3. P.K.Acharya, (Ed & Tr) Architecture of Manasara ch.43, 111-15.
  4. P.K.Acharya, (Ed & Tr) Architecture of Manasara
  5. டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல், பக்கம்: 179

உசாத்துணை

  • டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்&oldid=3610602" இலிருந்து மீள்விக்கப்பட்டது