கோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு

கோட்டே இராசதானியின் யாழ்ப்பாணப் படையெடுப்பு என்பது, 1450 ஆம் ஆண்டில் கோட்டே இராச்சியத்தின் சார்பாகச் செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண அரசின் மீது நடத்திய படையெடுப்பைக் குறிக்கும். தொடர்ந்து இடம்பெற்ற போரில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியன் போரில் தோல்வியுற, யாழ்ப்பாணம் கோட்டே அரசின் ஆட்சியின் கீழ் வந்தது. கோட்டே அரசன் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப்பெருமாளே கோட்டே அரசின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தை நிர்வாகம் செய்தான்.

படையெடுப்பின் பின்னணி

தொகு

15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு வலிமை பெற்று விளங்கியது. பாக்கு நீரிணைப் பகுதியில் கடல் ஆதிக்கமும், மன்னர்ப் பகுதியில் முத்துக்குளிப்பு உரிமையும் பெற்றிருந்த யாழ்ப்பாண அரசுக்குக் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்தது. தெற்கே புத்தளம் வரை யாழ்ப்பாண அரசின் ஆதிக்கம் இருந்தது. இக்காலத்தில், யாழ்ப்பாண அரசு தென்னிலங்கை அரசுகளின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையிலும் இருந்தது. தென்னிந்தியாவில் விசயநகர ஆதிக்கம் ஏற்பட்டபோது, பாக்கு நீரிணையில் அவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. இதனால், யாழ்ப்பாண அரசின் வருமானம் வீழ்ச்சியுற்றதுடன், விசயநகரப் பேரரசுக்குத் திறை செலுத்த வேண்டிய நிலைமையும் உருவானது.[1] இந்தப் பொருளாதார வீழ்ச்சி யாழ்ப்பாண அரசின் வலிமையைப் பெருமளவுக்குக் குறைத்துவிட்டது. இதே காலப்பகுதியில் வலிமை குன்றியிருந்த தென்னிலங்கை அரசு, ஆறாம் பராக்கிரபாகுவின் ஆட்சியின் கீழ் வலிமை பெறலாயிற்று.

ஆறாம் பராக்கிரமபாகுவுக்கு ஆண் வாரிசு இல்லை. இதனால், மலையாள நாட்டிலிருந்து வந்து கோட்டை இராச்சியத்தில் பணிபுரிந்து வந்தவனும், போர்க்கலைகளில் வல்லவனுமான பணிக்கன் ஒருவனுக்கும், சிங்கள அரச குலத்துப் பெண்ணொருத்திக்கும் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளைப் பராக்கிரமபாகு வளர்ப்புப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. திறமை கொண்ட வீரர்களாக வளர்ந்த இவர்களில் மூத்தவனே சிங்களத்தில் சப்புமால் குமாரயா என அழைக்கப்படும் செண்பகப் பெருமாள். ஆறாம் பரக்கிரமபாகு, தனது மகள் வழிப் பிறந்தவனான செயவீரன் என்பவனை தனக்குப் பின் அரசனாக்க எண்ணினான். இதற்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த அரசன், அமைச்சர்களின் ஆலோசனைப்படி, செண்பகப் பெருமாளைக் கோட்டை இராச்சியத்துக்கு வெளியே அனுப்ப முடிவு செய்தான். இதற்கு இணங்க யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்துச் செல்லுமாறு செண்பகப் பெருமாளுக்குப் பணித்தான்.

படையெடுப்பு

தொகு

செண்பகப் பெருமாளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது. முதலில் யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த அதன் தென்பகுதிப் பெருநிலப் பரப்பில் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசுகளைத் தாக்கிவிட்டுக் கோட்டை இராச்சியத்துக்கு மீண்டான். மீண்டும் இரண்டாவது தடவையாக வட பகுதி நோக்கிப் படையெடுத்துச் சென்ற அவன், கடுமையான போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இப்போரில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்கு என்ன நடந்தது என்பதை, இப் போர் பற்றிக் கூறும் சிங்கள நூல்கள் குறிப்பிடவில்லை. அவன் இறந்திருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.[2] ஆனால், அவன் தனது மனைவி, மக்களுடன் திருக்கோவிலூருக்குத் தப்பிச் சென்றதாக வைபவமாலை கூறுகிறது.[3]

போரின் தாக்கங்கள்

தொகு

யாழ்ப்பாணத்தை வென்ற செண்பகப் பெருமாள் கோட்டை இராச்சியத்துக்கு மீண்டான். ஆறாம் பராக்கிரமபாகு, கோட்டை இராச்சியத்தின் சார்பாளனாக யாழ்ப்பாணத்தை ஆளும்படி பணித்து செண்பகப் பெருமாளை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கே அனுப்பினான்.

இந்த நிகழ்வு, யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது ஏற்பட்ட தாக்கங்கள் குறித்துப் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குறிப்பாக, இப்போருக்குப் பின்னரே யாழ்ப்பாண அரசின் தலைநகரம், சிங்கைநகரில் இருந்து நல்லூருக்கு மாற்றப்பட்டதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். வைபவமாலையில் உள்ள தனிப்பாடல் ஒன்று,[4] புவனேகவாகுவே நல்லூர் நகரையும், நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் கட்டுவித்ததாகக் கூறுகிறது. நல்லூர்க் கோயில் கட்டியமும் நல்லூரைக் கட்டியவனாக சிறீசங்கபோதி புவனேகவாகு என்பவனையே குறிப்பிடுகிறது. செண்பகப் பெருமாள் பிற்காலத்தில் கோட்டை இராச்சியத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அவன் சிறீசங்கபோதி புவனேகவாகு என அழைக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக நல்லூர் யாழ்ப்பாண அரசின் தொடக்ககாலத்தில் இருந்தே தலைநகராக இருப்பதாகவும், நல்லூரும், சிங்கைநகரும் ஒன்றே என்ற கருத்தும் பல ஆய்வாளரிடையே நிலவுகிறது.

இதை விட, இப்போருடன் ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசாட்சி முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பின்னர் வந்த அரசர்கள் எவரும் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. பத்மநாதன், சி., 2006. பக். 94
  2. குணசிங்கம், முருகர்., 2008. பக். 135.
  3. சபாநாதன், குல., 1995. பக். 44, 45.
  4. சபாநாதன், குல., 1995. பக். 96.
  5. குணசிங்கம், முருகர்., 2008. பக். 135.

உசாத்துணைகள்

தொகு
  • சபாநாதன், குல. (பதிப்பு), மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை, இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995 (மூன்றாம் பதிப்பு).
  • பத்மநாதன், சி., ஆரியச்சக்கரவர்த்திகள் காலம், யாழ்ப்பாண இராச்சியம் (பதிப்பாசிரியர்: சிற்றம்பலம், சி. க.), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2006 (முதற்பதிப்பு: 1992)
  • குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 - கி.பி. 2000), எம். வி வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.
  • ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)

இவற்றையும் பார்க்கவும்

தொகு