கோபத் காந்தி

இந்திய அரசியல்வாதி

கோபத் காந்தி ( Kobad Ghandhi 1951) என்பவர் ஒரு பொதுவுடைமைக் கொள்கையர் ஆவார். மாவோ பொதுவுடைமைக் கட்சியின் முன்னணித் தலைவராக இருந்தவர். உழுபவருக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்றும் நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஏழைகள் ஏமாற்றப்பட்டு சுரண்டப்படுவதைக் கண்டித்தும் இயங்கினார்.

பிறப்பும் கல்வியும்

தொகு

மும்பையைச் சேர்ந்த வசதிகள் மிகுந்த பார்சி குடும்பத்தில் பிறந்தார். கோபத் காந்தியின் தந்தை கிளாசுகோ என்னும் பெரிய குழுமத்தில் உயர் பதவியில் இருந்தவர். டூன் பள்ளியிலும் மும்பையில் உள்ள தூய சேவியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பட்டயக் கணக்காளர் படிப்பைக் கற்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

ஆனால் அவருடைய நாட்டம் படிப்பில் செல்லாமல் தீவிர அரசியல் பக்கம் இருந்தது. இக்காரணத்துக்காக கோபத் காந்தி கைது செய்யப் பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியாவுக்குத் திரும்பிய இவர் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின் போது சமூக அரசியலில் முனைப்பைக் காட்டிச் செயல்பட்டார். ஏழை மக்களை மதிக்காத சனநாயகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று வெளிப் படையாகப் பேசினார்.அனுராதா சன்பாக் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவியும் ஒரு பொதுவுடைமைவாதி. 1982 இல் மும்பையிலிருந்து நாக்பூருக்கு மனைவி அனுராதாவுடன் குடியேறினார். சனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழுவைத் தோற்றுவித்தார். உலக அளவில் இடது சாரி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு இயங்கினார். புற்று நோயின் காரணமாக மருத்துவப் பண்டுவம் பெறும்போது தில்லியில் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். கோபத் காந்தியின் நக்சல் இயக்கம் ஒரிசா, ஜார்க்கன்ட், பிகார், சட்டீச்கர் ஆகிய மாநிலங்களில் மலை, காட்டுப் பகுதிகளில் பரவி உள்ளது. இந்தித் திரைப்பட நடிகர் ஓம் பூரி என்பவர் கோபத் காந்தியின் வாழ்க்கையை நேசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபத்_காந்தி&oldid=2719598" இலிருந்து மீள்விக்கப்பட்டது