கோலா தீபகற்பம்
கோலா தீபகற்பம் (உருசிய மொழி:Ко́льский полуо́стров, Kolsky poluostrov; Kuelnegk njoarrk; Northern Sami;பின்னிய மொழி: Kuolan niemimaa; நோர்வே: Kolahalvøya) என்பது உருசியாவின் வடமேற்கே தொலைவில் உள்ள மூர்மன்சுக் மாகாணத்தின் நிலப்பகுதியை உள்ளடக்கிய உள்ள ஒரு தீபகற்பம் ஆகும்.[1][2] இத்தீபகற்ப பகுதியானது முற்றிலும் ஆர்க்டிக் வட்டத்தின் உள்ளே அமைந்து வடக்கில் பேரன்ட்ஸ் கடல் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வெள்ளைக் கடல் ஆகியவை எல்லையாக அமைந்துள்ளது. இந்த தீபகற்பத்தில் மூர்மன்சுக் நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட மனிதக் குடியேற்றமாகும், இது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 300,000 க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
உருசியாவில் மூர்மன்சுக் மாகாணத்தின் அமைவிடம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வடமேற்கில் வெகு தொலைவில் |
ஆள்கூறுகள் | 67°41′18″N 35°56′38″E / 67.68833°N 35.94389°E |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | |
நிர்வாகம் | |
உருசியா |
தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் கி.மு 7 ஆம் ஆண்டு முதல் கி.மு 5 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்திலேயே குடியேற்றம் நிகழ்ந்திருந்தாலும், அதன் பிற பகுதிகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு வரை தெற்குப் பகுதியிலிருந்து பல்வேறு மக்களினம் வரத் தொடங்கும் வரை குடியேற்றம் நிகழாமலேயே இருந்துள்ளது. இருப்பினும், கி.மு 1 ஆம் நூற்றாண்டு வரை சமி மக்கள் மட்டுமே பெருமளவில் இருந்தனர். 12 ஆம் நூற்றாண்டில், உருசிய போமோர்ஸ் தீபகற்பத்தின் விளையாட்டு மற்றும் மீன் வளங்களைக் கண்டுபிடித்தபோது இந்நிலை மாறியது. போமர்களைத் தொடர்ந்து நோவ்கோரோட் குடியரசிலிருந்து கப்பம் சேகரிப்பாளர்கள் பின்பற்றினர். பின்னர் இத்தீபகற்பம் படிப்படியாக நோவ்கோரோடியன் நிலங்களின் ஒரு பகுதியாக மாறியது. எவ்வாறாயினும், 15 ஆம் நூற்றாண்டு வரை நோவ்கோரோடியர்களால் நிரந்தர குடியேற்றங்கள் எதுவும் நிறுவப்படவில்லை.
நோவ்கோரோட் குடியரசு 1471 இல் மாஸ்கோவின் கிராண்ட் டச்சியிடம் தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால், உருசிய குடியேற்றம் நிறுத்தப்படவில்லை. பல புதிய குடியேற்றங்கள் 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. சமி மற்றும் போமோர் மக்கள் அடிமைத்தனத்திற்குள் தள்ளப்பட்டனர். 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், இத்தீபகற்பம் உருசியாவின் சாராட்சி மற்றும் டென்மார்க்-நோர்வே இராச்சியம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது, இதன் விளைவாக உருசியாவின் நிலைப்பாடு வலுப்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில், பழங்குடி சமி மக்கள் உருசியர்களாலும், புதிதாக வந்துள்ள இஷ்மா கோமி மற்றும் யாரன் மக்கள் (ஒருவகையான கலைமான் தொற்று நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெண்ளைக் கடலுக்குத் தென் கிழக்கில் உள்ள தங்களின் தாய் நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்) என்று அழைக்கப்படுபவர்களாலும் வடக்கு நோக்கி செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனர், இப்பகுதியின் அசலான நிர்வாக மற்றும் பொருளாதார மையம் கோலா, கோலா ஆற்றின் கரையோரத்தில் கோலா விரிகுடாவில் அமைந்துள்ளது. இருப்பினும், 1916 ஆம் ஆண்டில், ரோமானோவ்-நா-முர்மானே (இப்போது மூர்மன்சுக் ) விரைவாக தீபகற்பத்தின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் துறைமுக நகரமாகவும் மாறியது.
சோவியத் காலகட்டத்தில் மக்கள் தொகை விரைவாக அதிகரித்தது. இருப்பினும் பெரும்பாலானவை கடற்கரை மற்றும் இருப்புப் பாதைகளில் நகரமயமாக்கப்பட்ட பிரதேசங்களுடன் மட்டுமே இந்த மக்கள் தொகை அதிகரிப்பு வரையறைக்குட்பட்டதாக இருந்தது. சமி மக்கள் லோவோசெரோ மற்றும் பிற மையப்படுத்தப்பட்ட குடியேற்றங்களுக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்வது உட்பட கட்டாய கூட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். பெரும்பாலும் அதன் உத்திநோக்கு நிலை மற்றும் 1920 களில் பரந்த அபதைற்று வைப்புகளைக் கண்டுபிடித்தது ஆகியவற்றால் ஒட்டுமொத்தமாக தீபகற்பம் பெரிதும் தொழில்மயமாக்கப்பட்டு இராணுவமயமாக்கப்பட்டது. இதன் விளைவாக, தீபகற்பமானது இராணுவ அணுக்கழிவுகளால் மாசுபாடு மற்றும் நிக்கல் உருகுதல் உள்ளிட்ட பெரிய சுற்றுச்சூழல் சேதங்களை சந்தித்தது.