கோவா மாநில அருங்காட்சியகம்

கோவாவிலுள்ள அருங்காட்சியகம்

கோவா மாநில அருங்காட்சியகம் (Goa State Museum) மாநில தொல்பொருள் அருங்காட்சியகம், பனாஜி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், கலை மற்றும் கைவினை மற்றும் புவியியல் உள்ளிட்ட துறைகளைக் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, கல் சிற்பங்கள், மரப் பொருள்கள், செதுக்கல்கள், வெண்கலங்கள், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், அரிய நாணயங்கள் மற்றும் மானுடவியல் பொருள்கள் உட்பட சுமார் 8,000 கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ​​இந்த அருங்காட்சியகம் பனாஜியில் உள்ள ஆதில் ஷாவின் அரண்மனையில் (பழைய செயலகம்) அமைந்துள்ளது.[1]

கோவா மாநில அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் முன்பு பனாஜியில்உள்ள பட்டோவில் உள்ள EDC வளாகத்தில் இருந்தது. அதற்கு முன்பு, இது பனாஜியின் செயின்ட் ஈனஸில் வைக்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியகம் பனாஜியில் உள்ள ஆதில் ஷாவின் அரண்மனையில் (பழைய செயலகம்) அமைந்துள்ளது.[1]

வரலாறு

தொகு

இந்த அருங்காட்சியகம் 1973 ஆம் ஆண்டில் கோவாவில் உள்ள காப்பகத் திணைக்களத்தின் தொல்பொருள் அருங்காட்சியகப் பிரிவாக உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஒரு சிறிய வாடகை கட்டிடத்தில் 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று திறக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு சூன் 18 அன்று புதிய அருங்காட்சியக வளாகம் கட்டப்பட்ட பின்னர் அதை முறையாக இந்திய ஜனாதிபதி திறந்து வைத்தார்.[2][3] கோவாவின் வரலாற்று மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைக் காண்பிப்பதற்காக கோவாவின் பண்டைய வரலாற்று மற்றும் கலாச்சார மரபுகள் பற்றிய தகவல்களை அருங்காட்சியகத்தின் கண்காட்சிகள் கருப்பொருளாகக் காட்டுகின்றன.[4][5]

காட்சியகங்கள்

தொகு

கோவா மாநில அருங்காட்சியகத்தில் பதினான்கு காட்சியகங்கள் உள்ளன. அவை கருப்பொருட்களாக ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: சிற்பத் தொகுப்பு, கிறிஸ்தவக் கலைக்கூடம், அச்சிடும் வரலாற்று தொகுப்பு, பானர்ஜி கலைக்கூடம், மத வெளிப்பாட்டுத் தொகுப்பு, கலாச்சார மானுடவியல், தற்கால கலைக்கூடம், நாணயவியல் தொகுப்பு, கோவாவின் சுதந்திர போராட்ட தொகுப்பு, மெனிசஸ் பிராகன்சா தொகுப்பு, தளபாடங்கள் தொகுப்பு, கோவாவின் இயற்கை பாரம்பரியத் தொகுப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு தொகுப்பு மற்றும் புவியியல் தொகுப்பு என்பனவாகும்.[6] இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் குறிக்கும் சுமார் 8,000 கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் இன்ஸ்டிடியூட் மெனிசஸ் பிராகன்சா ஆர்ட் கேலரி மற்றும் கலா ​​அகாதமி ஆகிவற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட 645 பொருட்களும் உள்ளன.[2]

4 முதல் 8 ஆம் நூற்றாண்டுகள் வரையான இந்து மற்றும் சமண சிற்பங்களின் கலைப்பொருட்களையும், வெண்கலத்தினாலான சிலைகளையும் சிற்பக் கலைக்கூடம் பிரதானமாக காட்சிப்படுத்துகிறது.[7] கிளாட் மற்றும் டாலோன் உள்ளிட்ட ஐரோப்பிய கலைஞர்களின் வெண்கல சிற்பங்களும் உள்ளன. கடம்பா மன்னரான விரா வர்மாவின் 1049 என்று திகதியிடப்பட்ட செப்புத்தகடும் இந்த தொகுப்பில் உள்ளது.[2]

கிறிஸ்தவ கலைக்கூடத்தில், புனிதர்களின் மர சிற்பங்கள், மற்றும் பக்தி ஓவியங்கள் மற்றும் காலனித்துவ காலத்தின் சில மர தளபாடங்கள் உள்ளன. பானர்ஜி கலைத் தொகுப்பில் கோவாவின் முன்னாள் ஆளுநர் எஸ்.கே. பானர்ஜி அருங்காட்சியகத்திற்கு பரிசளித்த பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர் பள்ளியின் ராஜஸ்தானின் சிற்றோவியங்கள், முகலாய ஓவியங்கள் , நாத்வாரா , ஒரிசாவின் படச் சித்திரங்கள் மற்றும் சமகால கலைஞர்களின் ஓவியங்களும் உள்ளன.[2]

டச்சுக்காரர்களுக்கு எதிரான போர்த்துகீசிய வெற்றியைக் குறிக்கும் ஒரு கொடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மெனிசஸ் பிராகன்சா தொகுப்பில் சமகால கோன் மற்றும் இந்திய கலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் கோவாவின் போர்த்துகீசிய ஆளுநர்கள் மற்றும் பிரதமர்களின் உருவப்படங்களும் உள்ளன.[2]

பிரவர்மா மன்னனின் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் கலாச்சார மானுடவியல் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு தொகுப்பில் கோவாவின் பல கிராமங்களினதும் கலாச்சார கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[7] புவியியல் தொகுப்பில் கிமு 10,000 என திகதியிடப்பட் ஒரு புதைபடிவ எலும்பு உள்ளது.[2]

மத வெளிப்பாட்டுத் தொகுப்பில் குப்தர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணுவின் மிகவும் சிறப்பான சிற்பம் உள்ளது. பாரம்பரிய இசைக்கருவிகள், மத சடங்குகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பனை ஓலையில் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பல மத வேதங்களின் காகிதம் மற்றும் பல மத சடங்குகள் மற்றும் பண்டிகைகளின் சில புகைப்படங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. போர்த்துகீசிய ஆளுனரின் நாற்காலி, சில மேற்கத்திய பாணி தளபாடங்கள் என்பனவும் வைக்கப்பட்டுள்ளன.[2] 18 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட மர தேரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[4][7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Department of Tourism, Government of Goa, India - State Archaeology Museum, Panaji". www.goatourism.gov.in. Archived from the original on 2013-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  3. "Goa Museum - Government of Goa". goamuseum.gov.in. Archived from the original on 2019-11-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  4. 4.0 4.1 Thomas & Karafin 2009, p. 114.
  5. "Goa Museum - Government of Goa". goamuseum.gov.in. Archived from the original on 2019-12-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  6. "About us". Archived from the original on 2019-11-01.
  7. 7.0 7.1 7.2 Harding 2003, p. 116.