கோவிந்தம்மாள்

இந்திய தேசிய ராணுவம்

கோவிந்தம்மாள் (காலம் 22.2.1927 முதல் 01.12.2016 வரை) [1]) என்பவர் 1943ல் நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையின் வீராங்கனை ஆவார்.

இளமைக்காலம்

தொகு

இவரது தந்தையான முனுசாமி செட்டியார் நெசவு தொழில் செய்தவர். வடஆற்காட்டுப் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் பிறந்த பின் 3 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்றார். இவரது தந்தைக்கு தமிழ், தெலுங்கு,கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும் என்பதால் மலேசியாவில் அஞ்சல் துறையில் பணியாற்றினார். பின் சில வருடங்கள் நகைத்தொழிலையும் செய்தார்.

கோவிந்தம்மாள் கல்வியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1940-ல் அருணாச்சல செட்டியார் என்பவரோடு திருமணம் நடந்தது. பின் மலேசிய இரப்பர் தோட்டத்தில் சில காலம் பணி செய்தார். அப்போது நேதாஜி செய்த பிரச்சாரம் இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாய் அமைந்தது.

மலேசிய இரப்பர் தோட்டம்

தொகு

இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்.[2]

மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உரைந்து உள்ளது.

அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.

அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்.

அந்த அளவிற்கு மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இப்படையில் இருந்தனர். அதில் கோவிந்தம்மாளும் ஒருவர்.

நேதாஜி பிரச்சாரம்

தொகு

1940களில் நேதாஜி இந்திய விடுதலைக்காக மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் பிரசாரம் செய்தார். ம்லேசியாவின் மலாக்கா பிராந்தா பகுதியில் பிரச்சாரம் செய்த போது அவ்வீர உரையைக் கேட்டு அப்படையின் நிதிக்காக தன் ஆறு பவுன் வளையல்களையும், திருமணச் சீதனமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் தானமாக கொடுத்தார் கோவிந்தம்மாள்.

பின்னர் சில மாதங்கள் கழித்து இந்திய தேசிய இராணுவத்தில் இளைஞர்களை சேருமாறு பிரச்சாரம் செய்தார். நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படையான ஜான்சி ராணிப் படையில் பெண்களையும் சேருமாறு அழைத்தார். அதை ஏற்று 12.12.1943ல் ஜான்சி ராணிப்படையில் கோவிந்தம்மாள் சேர்ந்தார்.

20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 1500 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு லாண்ட்ஸ் நாயக் என்று பதவி உயர்வு அளித்தார். 1.10.1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார்.[3] ஆகத்து 16, 1945ல் இப்படை கலைக்கப்பட்டவுடன், 1949ல் தன் கணவர் மட்டும் 6 குழந்தைகளுடன் தமிழகம் வந்தார்.[4]

நேதாஜி கையால் விருது

தொகு

ஜான்சி ராணிப் படையினர் ஒரு தடவை முகாம் அமைத்து தங்கியிருந்தனர். அங்கு ஒரு மர்ம வண்டியில் சில நபர்கள் முகாமில் நுழைவதை பார்த்த கோவிந்தம்மாள் அவ்வண்டியை தடுத்து நிறுத்தினார். உள்ளே நேதாஜி இராணுவ உடையில் அமர்ந்திருந்தார். அடுத்த நாள் அவரின் அந்த துணிச்சலான செயலை பாராட்டிய நேதாஜி அதன் காரணமாக லாண்ட்சு நாயக் விருதை வழங்கினார்.

போர்

தொகு

அப்போது போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் ஜான்சிராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச்சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கிற்று. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால், அதன் நச்சுத்தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு-வாந்தி முதலியன ஏற்பட்டது. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் இப்படையின் தலைவியான இலட்சுமி சாகல் மறுத்துவிட்டார்.

மருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காயிற்று. மருத்துவமனை தரைமட்டமாயிற்று. தளபதி எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தப்பிக்கும் முயற்சியால் ஆங்கிலேய கொரில்லப்படையின் குண்டு வீச்சால் மேலும் சிலர் கொல்லப்பட்டனர். அந்த சண்டையில் இவரது உயிர் தோழிகளான ஸ்டெல்லாவும் ஜோஸ்மினும் கொல்லப்பட்டார்கள்.

1950க்குப் பிறகு

தொகு

இந்திய மத்திய அரசு இவருக்கு ஓய்வு ஊதியம் தர மறுத்தது. 1970ல் இருந்து தமிழக அரசு இவருக்கு ஓய்வூதியம் அளித்தது. 14.8.1960ல் நடந்த சாலை விபத்தில் கணவரை இழந்தார். பின் தன் 4 மகள்கள் மற்றும் 2 மகன்களையும் கூலி வேலைகள் செய்து படிக்க வைத்து திருமணம் நடத்தி வைத்தார்.

பிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது, , மாவு அரைவை மில்லில் கூலி வேலை என பல்வேறு பணிகளை செய்தார். ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தை பெற்று வாழ்ந்து வந்தார்.

வறுமையில் வாடிய கோவிந்தம்மாள், முதுமை காரணமாக, 01.12.2016 அன்று மதியம், 3:00 மணிக்கு இறந்தார்.

தனது சொத்துக்களை எல்லாம் தேச விடுதலைக்காக அளித்த இவர் கடைசி வரையில் சொந்த வீடில்லாமலே வாழ்ந்து மறைந்தார்.

மூலம்

தொகு
  1. சுதந்திர தின சிறப்பு மலர் (15 ஆகத்து 2012). "நேதாஜியிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற கோவிந்தம்மாளின் திகில் அனுபவங்கள்". தினத்தந்தி (கோவை மட்டும்): pp. 1. 
  2. சுதந்திர தின சிறப்பு மலர் (15 ஆகத்து 2012). "முதல் தற்கொலைப்படை போராளி குயிலி". தினத்தந்தி (கோவை மட்டும்): pp. 8. 
  3. ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தம்மாள்&oldid=3791433" இலிருந்து மீள்விக்கப்பட்டது