கோவிலில் சிறுவன் இயேசு

கோவிலில் சிறுவன் இயேசு அல்லது காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது என்பது விவிலியத்தின் லூக்கா நற்செய்தி 2:41-52 முடிய விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, ஆண்டுதோறும் நடக்கும் வழக்கப்படி இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட இயேசுவோடு எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின்[1] அவரைக் கோவிலில் கண்டார்கள். இந்த நிகழ்வு இயேசு மற்றும் மரியாவின் வாழ்வை சித்தரிக்க கலைஞர்கள் பயன்படுத்து முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகும்.

கோவிலில் சிறுவன் இயேசு

இயேசுவைக் கோவிலில் கண்டடைந்தபோது, அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ' மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே ' என்றார். அவர் அவர்களிடம், ″ நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?″ என்றார்.[2][3]

இன்நிகழ்வுக்குப் பின்பு இயேசு தம் பெற்றோருடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் எனவும் அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் எனவும் விவிலியம் குறிக்கின்றது. விவிலியத் திருமுறை நூல்களில் இந்த நிகழ்வே இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளின் இறுதியாக பதிவுசெய்யப்பட்ட நிகழ்வாகும். இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு கத்தோலிக்க செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் ஐந்தாம் மறைபொருள் ஆகும்.

திருமுறை நூல்களில் இடம்பெறாத பிற்காலத்து நூல்களில் இன்நிகழ்வு மிகவும் நுனுக்கமாகவும், மேலதிக தகவல்களுடனும் விவரிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. The Bible Knowledge Commentary: New Testament edition by John F. Walvoord, Roy B. Zuck 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88207-812-7 page 210
  2. இச் சொற்றொடரை 'தந்தையின் இல்லத்தில் இருக்க வேண்டும்' எனவும் சிலர் மொழிபெயர்க்கின்றனர்.
  3. "USCCB - NAB - Luke 2". Archived from the original on 2010-01-12. பார்க்கப்பட்ட நாள் 2010-01-22.


கோவிலில் சிறுவன் இயேசு
முன்னர் புதிய ஏற்பாடு
நிகழ்வுகள்
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிலில்_சிறுவன்_இயேசு&oldid=3552380" இலிருந்து மீள்விக்கப்பட்டது