க. இரா. ஜமதக்னி
க. இரா. ஜமதக்னி (ஏப்பிரல் 15,1903—மே 27, 1981) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஆவார். சார்லஸ் டார்வின் எழுதிய நூல்களை ஆய்ந்து உயிர்களின் தோற்றம் என்று தமிழில் எழுதியவர். காரல் மார்க்சு எழுதிய மூலதனம் இவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பிறப்பு
தொகுஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காவேரிப்பாக்கத்திற்கு அருகில் கடப்பேரி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர் இராகவன் தாயின் பெயர் முனியம்மாள். சிறுவனாக இருந்தபோது புராண இதிகாசங்களின் உரைநடைக் காவியங்களை ஊர்மக்கள் நடுவே அமர்ந்து படித்தார். இன்டர்மீடியேட் வகுப்பில் தேறினார். ஆறு மாதம் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தமிழ் சமற்கிருதம் இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களைக் கற்றிருந்தார்
இந்திய விடுதலைப் போராட்டம்
தொகுஇளம் அகவையிலேயே ஜமதக்னிக்கு இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்பட்டது. உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை சிறைக்குச் சென்றார்.உப்புச் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டபோது காவலர்கள் இவர் மண்டையில் அடித்ததால் மயக்கமுற்று மருத்துவமனையில் கிடந்தார். சிறையில் இருந்தபோது நூல்கள் பலவற்றைப் படித்துத் தம் அறிவை வளர்த்துக் கொண்டார். 1931 இல் அரக்கோணத்தில் கள்ளுக்கடை மறியலில் கத்தியால் குத்தப்பட்டு உயிர் தப்பினார்.
எழுதிய நூல்கள்
தொகு- பக்த விஜயம்
- கனிந்த காதல்
- தேசிய கீதம்
- சோசலிஸ்டு கீதங்கள்
- மார்க்சியம்
- இந்தியாவிற்கு ஏன் சோசலிசம்?
விரிவுரை நூல்கள்
- திருமுருகாற்றுப் படை
- கந்தரலங்காரம்
- கந்தரனுபூதி
- குமரேச சதகம்
தமிழாக்க நூல்கள்
- மேக சந்தேசம்
- காமன் மகள்
- இரகு வம்சம்
பூமியின் வரலாறு என்னும் நூலும் உயிர்களின் தோற்றம் என்னும் நூலும் கையெழுத்துப்படியாக இருக்கும்போதே தமிழக அரசின் பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சின் தத்துவ நூலான மூலதனம் என்னும் நூலைத் தமிழாக்கம் செய்து கையெழுத்துப்படியாக இருந்து ஜமக்தனி மறைவுக்குப் பிறகு அச்சுக்கு வந்தது. கம்ப ராமாயணத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் ஒப்பிட்டு 20 கட்டுரைகளைத் தினமணி ஏட்டில் எழுதினார்.
சான்று
தொகுஜமதக்னி வரலாற்றுச் சுருக்கம், புதுவாழ்வுப் பதிப்பகம், சைதாப்பேட்டை,சென்னை.